Monday, February 1, 2010

Emathu Thesam


எமது தேசம்

ஏழைகளின் இல்லங்கள்
எரியும் நெருப்பில் - அதில்
ஏனோ குளிர்காய்கிறது
எமது இத்தேசம்.

குழந்தைகளின் கூக்குரலும்
குமர்களின் கூப்பாடும்
முதியோரின் முனகல்களும்
மூப்படைந்த நோவினையும்
கண்டும் கலங்காதது
எமது இத்தேசம்.

இரட்டைக் குழலின்
இடி ஓசையையும்
இரவைப் பகலாக்கும்
இடைவிடா செல் வீச்சையும்
பார்த்தும் கேட்டும்
பயப்படவில்லையே இத்தேசம்.

அகப்பட்ட அங்கங்களின்
அவதிப் படுகையும்
பிசிரிக்கிடக்கும் உடலின்
பிண வாடையும்
பழகிப்போன தொன்றாயிற்று
பாழாய்ப்போன இத்தேசத்திற்கு.

இனத்தையினம் சுத்திகரிக்கும்
இழிநிலையும் இங்குதான்
இருப்பிடம் இழந்து
இடம்பெயர்வதும் இங்குதான்.

தவறிப் படுகுழிக்குள்
தாழப் போவதற்குள்
எச்சரிக்கை செய்வது
ஏகனின் கடமையல்லவா?
சுனாமியின் எச்சரிக்கையாவது
சுரணையை ஏற்படுத்தவில்லையே!

இன்றோ நாளையோ
ஆழிக்குள் அடங்கிவிடும்
இத்தேசம் - தேசம்மட்டுமல்ல
இங்கிருக்கும் நாமும்தான்.

Thanimai

தனிமை

பூக்களின் மலர்ச்சி
உன் சிரிப்பையும்
தென்றலின் தொடுகை
உன் ஸ்பரிசத்தையும்
மழையின் வருகை
உன் குளிர்ச்சியையும்
வெய்யிலின் தாக்கம்
உன் கோபத்தையும்

புயற்காற்றின் வேகம்
உன் ஆர்ப்பாட்டத்தையும்
அடிக்கடி ஞாபகப்படுத்துகிறதே!
அப்போதெல்லாம் உன்னை
கோபித்துக்கொள்வேன் பின்
உன் கையாலாகாத்
தன்மையை எண்ணியும்
சற்று ஆறுதலடைவேன்.

நான் ஒன்றும்
தனிமைப்படுத்தப் பட்டவனல்ல
நீ என்னைத்
தனிமைப் படுத்தினாலும்!
என்னுயிர் இவ்வுலகில்
இருக்கும் வரை
இயற்கையும் எனக்குத்
துணையாய் இருக்கும்.

இருட்டுக்குள் நான் இருந்தாலும்
இன்றும் என்னிதயம் உன்
வெளிச்சத்தைத் தான் தேடுகிறது
வெளிச்சத்துள் இருக்கும் நீயோ
இருட்டடிப்புக் காரியாய் இன்னமும்
என் வெளிச்சத்தைப் போக்குகிறாயே!

Seethanam Kedkaatha Maappillai

சீதனம் கேட்காத மாப்பிள்ளை

சீதனம் வேண்டாம் எனக்கு
சீர்வரிசையும் வேண்டாம் எனக்கு
சின்னத் தங்கை மணப்பதற்கு
சில இலட்சங்கள் தந்தால்போதும்.

காரொன்றும் தந்திடுங்கள் மாமாவின்
கௌரவத்தைக் கட்டிக் காப்பதற்கு
மாடிமனை கொடுத்திடுங்கள் மாமா
மகளை மற்றவர்கள் மதிப்பதற்கு.

உப்பு டையில் ஊறவைத்த
உவப்பான வண்ணவண்ண சாரங்கள்
உலகை எல்லாம் வலம்வந்த
காலத்தில் சேர்த்த பணம்
பத்திரமாய் கூட்டு வட்டியுடன்
பத்திரத்தில் காத்துக் கிடப்பதையும்.

தங்கச் சுனாமி யொன்று
தரை வழியே வந்தபோது
தந்திரமாய் ஓடிச் சென்று
தட்டிக் கொண்ட சொர்ணங்கள்
பத்திரமாய் பணப் பெட்டியிலே
பாளங்களாய் பதுங்கிக் கிடப்பதையும்.

கண்டு கண்டு கண்பூத்து
கடைசியிலே கண்ணான மாமனிடம்
பெண் கேட்டு வந்துவிட்டேன்
சத்தியமாய் சதமேனும் சீதனமாய்

பத்திரத்தில் எழுத வேண்டாம்
அத்தனையும் கொடுத்திடுங்கள் அருமைமகளுக்கு!

பளார் என்றென் கன்னத்தில்
பாவி மனச்சாட்சி அறைந்ததுவோ!
பக்கென விழித் தெழுந்தேன்
பகலிலும் சீதனக் கனவுதானோ!
சீதனமே இனி வேண்டாம்
சீர் திருந்தி வாழப்போறேன்.

Sari Paathi

சரி பாதி

பள்ளி நாட்களில் உன்னை
பாதி என்றுதான் சொல்வோம்
பாணிலும் பாதி கேட்பாய்
பல்லிமிட்டாயிலும் பாதி கேட்பாய்.

அப்பியாசக் கொப்பியிலும் பாதிகேட்பாய்
அழி இறப்பரிலும் சரிபாதிகேட்பாய்
அள்ளியுண்ணும் உணவிலும் நீ
அரைவாசி கேட்பாய் அன்பாக.

பின் அன்பிலும் பாதிகேட்டதனால்
ஆண்டிறுதிப் பரீட்சை தனை
ஆளுக்கு அரைவாசி பூர்த்திசெய்து
ஆசையாய் கரம் பிடித்தோம்.

அழகழகாய் அன்புச் செல்வங்கள்
ஆளுக்கு இரண்டு என
ஆண் இரண்டும் பெண்ணிரண்டும்
அதிசயமாய்ப் பெற் றெடுத்தோம்.

ஆழிப் பேரலை உன்னைமட்டும்
ஆவேசமாய் அள்ளிச் சென்றபோது
கையாலாகா அரை உயிராய்
கதிகலங்கி நின் றிருந்தேன்.

நிவாரணங்கள் நிறையவே வந்தபோது
நிஜமாக உனை நினைத்து
சரியாக பாதிதனை கொடுத்துவிட்டேன்
சண்டாள சனியன்களுக்கு இலஞ்சமாக!

Manak Kilesam

மனக் கிலேசம்.

நித்திரையில் நான்
நாலுமுறை எழுந்திருப்பேன்.

பல்துலக்கிக் குளித்திட
பலமணி நேரம்
தலை துவட்ட
தலை முழுகிப் போகும்.

காலையுணவு ருசிக்காது
காலை வாரிவிடும்.
இஸ்திரிகை செய்யாஆடை
இன்றுமட்டும் என்றுசொல்லும்.

சைக்கிள் சாவியைத்தேடி
சலிப்புத் தட்டிவிடும்.
கடிகாரத்தைப் பார்த்தால்
கதிகலங்கிவிடும்.

வேகமாகச்சென்று பின்னர்
விழிபிதுங்கி நிற்பேன்.
எரிபொருள் தீர்ந்தது
என்மூளைக் கெட்டாது.

எப்படியோ சமாளித்து
எட்டிப்பிடிப்பேன் கந்தோரை.
வரவுப்பதிவேடு மட்டும்
வரிசையாயுள்ள புத்தகங்கள்மேல்
வலியச்சென் றமர்ந்ததுபோல்
வாவென்று கையசைக்கும்.

சிவப்புக்கோடு எச்சரிக்கும்
இன்றும்நீ லேட் தானென்று.

முந்தநாள் சம்பவங்கள்
முழுவதையும் ஏப்பமிட்டதுபோல்
முகாமையாளர் வீற்றிருப்பார்
முகாரி என்மனதில்தான்.

Vaalkkai

வாழ்க்கை

ஒற்றைக் கம்பியில்
ஒருக்கணித் தமர்ந்து
ஓரக்கண்ணால் காணும்
ஓராயிரம் காட்சிகள்.

நீண்ட தொலைவில்
நீள் பனையொன்று - அதன்
நிழல் வழியே
நிம்மதியாய் இருநாய்கள்.

ஆகாய உச்சியெட்ட
ஆலாக்கள் இரண்டு
அதன் பின்னே
அழகிய கிளிகள்பல.

வயலில் வயதான
விவசாயிகள் பலர்
வடிவாய்ச் செப்பனிட
வடிச்சலுக்காய் வாய்க்கால்களை.

கொங்கை குலுங்கிட
மங்கையர் பலர்
களை கொள்ளும்
கண்கொள்ளாக் காட்சிகள்பல.

சக்கரச் சவட்டுதலில்
சில புழுக்கள் - அதைக்
கொத்தித் தின்ன
கொக்குகள் பல.

வீதியால் வந்தவனை
வேருடன் பிடுங்கி
வயலில் விட்டெறிந்த
விபத்து ஒன்று.

பஸ் மிதிப்பலகையில்
பயணம்செய்த இளைஞன்
பரிதாபமாய் விழுந்ததை
பார்த்துச்சிரிக்கும் இளசுகள்.

வலதுகையை உரசிக்கொண்டு
விரைவாய்ச் செல்லும்
பாதுகாப்பு வாகனமொன்று
பாதசாரிக்கு பாதுகாப்பின்றி.

அழகழகாய் அணிவகுத்து
அவசரமாய் பறந்துவந்த
வாகனங்கள் அனைத்தும்
வந்த அரசியல்வாதிக்காய்.

இத்தனையும் பார்த்துரசித்த
இளைய காக்கை
மற்றக்காலை உயர்த்தியபோது
மரணம் மின்கம்பியில்.

Manaththapam

மனத்தாபம்.

தொடைகளுக்குள் நிரந்தரமாய்த்
தொலைந்துவிட்டது போல்
முடக்கப்பட்ட அவனது
முழங்கால்களிரண்டும் தோன்றும்.

வலதுகைவிரல் மடிப்புகளால்
வாரப்படாது கோதிவிடப்பட்ட
முடிகளின் ஒருபகுதி - மாதர்
முக்காடிட்டதுபோல் தோன்றும்.

நுளம்புத் தொல்லை என்று
நூற்ற விளக்கை உயிர்ப்பித்து
நிமிர்ந்து கையில் அகப்பட்ட
நாசினியை விசிறும் போதும்ரூபவ்

பன்னிரண்டு மணிக்கு மேல்
பக்கத்தில்வந்து படுக்கும் போதும்
முழங்கால்களும் வலது கையும்
முடிகளின் ஒரு பகுதியும்ரூபவ்

அப்படித்தான் தோன்றும்!

அன்றுமவன் அப்படித்தான் படுத்திருந்தான்
அவனது ஒருகாலைத் தொலைத்துவிட்டு!
தொடைகளுக்குள் அல்ல
தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலிக்குள்!!

Tsunami Nalla Tharunam

சுனாமி - நல்ல தருணம்.

அழகிய அக்பர் கிராமம்
அன்பான மௌலானா வீட்டுத்திட்டம்
இன்னொரு இருபத்தைந்து மீனவர்திட்டம்
இன்றைய மக்பூலியாபுரம் (அன்றைய பஞ்சாப்) என

ஆண்டாண்டுகாலமாக எங்கள் முதியோர்
ஆதியில் தடம் பதித்த
சுவடுகளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
சுருட்டி எறிந்து விட்டாய்.

பணம் நகை பாத்திரங்கள்
பத்திரப் படுத்திய ஆவணங்கள்
வீடுவாசல் எதுவும் வேண்டாமென
வீதிக்கு ஓடிவந்த எம்மக்களைரூபவ்

உடுத்த உடைகள் கூட
உடலில் காக்க விடாமல்
உக்கிரமாய்ப் பிய்த் தெடுத்து
உள்வாங்கிக் கொண்டாய் நீ!

பிறக்கப் போகும் பிள்ளையையோ
இறக்கப் போகும் தறுவாயையோ
கண்டுகொள்ளாமல் குருவிக் கூட்டுக்குள்
குண்டு வைத்ததுபோல் ஆக்கிவிட்டாய்!

ஆக்குவதும் அழிப்பதும் நீதான்
அவனியிலே அதற்கு இணையில்லை
எனவுணர்த்தவா ஆழிப்படைகளை அனுப்பி
அரைமணிக்குள் ஆக்கிரமித்து விட்டாய்!

ஆகாயம் கடல் தரையென
அதி நவீன ஆயுதங்கள்
அதிலும் உயர் தொழிநுட்பம்
அத்தனையும் இருந்தென்ன பயன்?

கடல் ஆகாயம் தரைகளையே
படைகளாக்கி ஆட்டங் காணவைப்பேன்
என நீ உணர்த்திவிட்டாய் -
அகிலத்தை நடுநடுங்க வைத்துவிட்டாய்!

கடலில் கால் பதித்து
அலைகளை அள்ளி முத்தமிட்டு
அணைத்து புரண்டு விளையாடி
ஆனந்தப் பட்ட நாங்கள்ரூபவ்

அலை என்றதும் அலறி அடித்துக்கொண்டு
ஏறுதற்கு இடம் தேடுவதையும்
ஓடுதற்கு வழி பார்ப்பதையும்
வேடிக்கை பார்ப்பதற்கா எங்களுயிர் காத்தாய்?

இல்லையில்லை இது எச்சரிக்கை மட்டும்தான்
இன்னும் உன் தண்டனை இறங்கவில்லை!
இரவு பகலாகவும் பகல் இரவாகவும்
சூரியன் மேற்கிலும் விழிகள் உச்சியிலும்ரூபவ்

மாறும் நாள் வருவதற்குள் எங்களை
மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்
இது ஒரு நல்ல தருணமும்கூட
உன்னை நன்கு புரிந்து கொள்வதற்கு.

Nampikkai

நம்பிக்கை

என் பெற்றோரை மட்டும்
என் கண்களுக்குக் காட்டிவிடாதே!

சுனாமிச் சுருள் அலைகளுக்குள்
சிக்குண்டு சிறையுண்டு மாண்ட
என் பெற்றோரை மட்டும்
என் கண்களுக்குக் காட்டிவிடாதே!!

டெனிம் காற் சட்டையும்
ரீசேட்டும் இன்று எனக்கில்லை
என் பிய்ந்த சட்டையையும்
என் கிழிந்த சாறனையும்
என் வாப்பா கண்டால்
உயிர் நீத்திடுவார் என்முன்னே.

என் ஒட்டிய வயிற்றையும்
என் உப்பிய வதனத்தையும்
என் உம்மா கண்டால்
கண்முன்னே கதறி அழுதிடுவாள்
நானும் சேர்ந் தழுவதற்கு
என்விழிகளுக்குச் சொந்த நீருமில்லை.

கட்டிய வீடும் காரும்
பெட்டியில் துண்டுதுண்டாய்
ஏற்றிச் சென்று கொட்டிய காட்சிகள்
என் மனதில் மட்டும்
மாறாப் பதிவுகளாய் இருக்கட்டும்.

நாளை ஒரு காலம்வரும்
நானும் வீடுகட்டிக்
குடியிருப்பேன் இன்று என் வீடு
வீதியாய் விரிந்து கிடந்தாலும்.

Kallai Samainthu

கல்லாய்ச் சமைந்து...

வாசல் தோறும் உன்வரவை
எதிர்பார்த்துக் காத்து நிற்பேன்
யாசகம் என்றெண்ணி எட்டிநிற்பாய்.

அண்ணன் வருகை கண்டு
அண்ணார்ந்து பார்க்கும் நீ
அந்நியமாய் எனைக் காட்டிக்கொள்வாய்.

மழையென்று மரத்தடி ஒதுங்கி
தளையொன்றை உசுப்பி விட
ஏளனமாய் எனைப் பார்ப்பாய்.

கடலை வண்டிக் காரனிடமும்
கச்சான் விற்கும் சிறுவனிடமும்
கண்ணசைத்து ஜாடை காட்டிடுவாய்.

உனை ஆவலாய் முத்தமிட
நெருங்கும் போதெல்லாம் நீயென்னை
அரைவேக்காடு அசிங்கம் என்பாய்.

ஆசையாய் உன் கரம்பிடித்து
அன்பு மொழி பேசி
அழகழகாய் ஐந்தாறு பெற்றெடுத்து
அரசாள எண்ணி யிருந்தேன்.

சுனாமிப் பேயலை வில்லனாய்மாறி
உனை சுருட்டிச் சென்றபோது
கல்லாய்ச் சமைந்து நின்றேன்
எல்லாக் காலமும் போல்.

Kanavukalum Tsunamiyai

கனவுகளும் சுனாமியாய்!

இந்தோ அவுஸ்திரேலிய
இயூரேஷியத் தகடுகள்
திடீரென விலகித்
திறந்து கொள்கின்றன.

கடல் பிளந்து
காங்கை வெளிப்பட்டு
சரேலென மேலெழுகிறது
சுமுத்திராவுக்குத் தெற்கே!
பிடாங் மற்றும் பெங்ரே
பிடரி முறிந்து கிடக்கிறது.

பூனைபோல் பதுங்கி வந்து
புலிபோல் பாய்கிறது புதியதோர் சுனாமி.
பாயுடன் தூக்கியெறியப்பட்டு
பள்ளத்தில் கிடக்கிறேன்.
இறக்குமுன் பார்க்கிறேன்
பிறந்தமேனியை ஒருமுறை.

எங்கும் நீர் எங்கும் நிலம்
எங்கும் நிசப்தம் எங்கும் பிரளயம்
என்வீடு என்மனைவி என்மக்கள்
எல்லாம் கடலிற் கலக்கின்றன.

கடிகாரஒலி டிக்டிக் எனக்கேட்கிறது
கனவுகள் மீண்டும் கலைகின்றன!
கலண்டரைக் கவனித்துப் பார்க்கிறேன்
காலம் டிசம்பர் இருபத்தாறைக் காட்டுகிறது.

வருடம் ஒன்றாகியும்
இருட்டுக் கொட்டிலுக்குள்
கனவுகளாய் மிரட்டி
நினைவூட்ட அவ்வப்போது
வந்துபோவ தெலாம்
அந்தச் சுனாமிதான்.

Mann Manam

மண் மணம்

கல்லும் மண்ணும்
மறுபிறவி யெடுத்து
சுயவடிவம் பெற்றதுபோல்
ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது.

எங்கள் வீடுகளெல்லாம்
வீதிக்கு வந்து
மாதங்கள் பலவாகிவிட்டன
வீதியாய்மாறிவிட்ட பல
வீடுகளும் உண்டு.

தரை கரையெல்லாம் வெறிச்சோடிக்
கவனிப் பாரற்றுக் கிடக்கிறது
அலைகள் மட்டும்
மீண்டும் மீண்டும்
சீண்டிப் பார்க்கிறது
கரையை நக்கி நக்கி.

ஆயிரம் ஆயிரம் உயிர்களை
அப்படியே ஏப்பமிட்டும்
அமைதியாய் அடங்கிக் கிடப்பது
அந்த ஆழி மட்டும்தான்.

மெல்ல மெல்ல அடியெடுத்து
மணற்பரப்பை நோக்கி நகர்கிறேன்.
வாசனை - மண்ணின் வாசனை
வாரி நெஞ்சில் தடவிக்கொள்கிறேன்

இன்னும் மாறவில்லை
இந்த மண்ணின் வாசனை மட்டும்.

Urumaarum Uravugal

உருமாறும் உறவுகள்

காலம் தன் கோலங்களைக்
காட்சிப் பொருட்களாய்க் கண்முன்னே
காட்டிச் செல்லும் போதெல்லாம்
கலங்கிக் கொள்ளும் என்கண்கள்.

தந்தையின் இழப்பு
தாயின் இயலாமை!
தங்கையின் எதிர்காலம்
தம்பியின் மேற்படிப்பு!!

இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது
இலேசாக என் இதையம்
இத்தனை தடைகளையும் தாண்டி
இமயம்போல் நிற்பதை யெண்ணி.

உறவுகளும் ஒரு நாள்
உருமாறு மென நினைத்ததுண்டு - ஆனால்
சொந்தங்களே உருமாறி எங்கள்
பந்தங்களை அழிக்குமென நினைத்ததில்லை.

மாமா மச்சான் என
மயக்கும் சொந்தங்களைக் காட்டி
மங்கை யெனும் மதுவூட்டி
மதிமயங்கச் செய்துவிட்டனர் ஓருறவை.

இளங் கன்றும் பயமறியாது
இடித்து விட்டது இதயமதில்
அடிதாங்கிப் பழகிப்போன இதயம்
இடிதாங்கச் சிறிது சிரமப்பட்டது.

புரண்டு புரண்டு படுத்தநான்
வரண்டு போன நாவினை
ஈரமாக்க எண்ணி இதமாக
இரண்டு மிட்டாய்களை உட்கொள்கிறேன்.

இதயமும் நசுங்கி உள்ளேயிருந்து
உதிரத்தை வெளியேற்றுவதுபோல் ஓருணர்வு
உணர்ச்சியற்ற நாவினை மெதுவாக
உரசிப்பார்க்கிறேன் விரல் நுனிகளால்.

நா இரத்தம் கசிந்ததுபோல்
நாலா பக்கமும் பரவிக்கிடக்கிறது
இதயத்தின் உதிரமா மிட்டாய்களின்
கசிவா எனத் தெரியவில்லை!

Vendum Tsunami

வேண்டும் சுனாமி!

மூத்த மச்சான்
முகம் தவிர்க்க
முக்காடை இழுத்திழுத்து
முந்தானை முடிச்சாச்சு.

மூன்று குமர் காப்பாற்ற
முழுசாகக் கொட்டில் வேண்டும் - இல்லையெனில்
மாண்டுவிட மீண்டு மொரு
மா சுனாமி வரவேண்டும்.

88888888

முதல்வீட்டு மூலையெல்லாம்
மூட்டைகளைக் காணவில்லை!
ஓட்டைவீடு ஒடிசலென
ஒப்பாரி வைக்கின்றார்.

சேவகரின் கவலையெல்லாம்
சேர்த்துவைக்க இடமில்லை.

அடுத்துஒரு சுனாமிவந்தால்
அனைத்தையுமே அமுக்கிடலாம்
அனுபவமும் உள்ளதனால்
அமர்க்களமாய்ச் செய்திடுவார்.

88888888

மூத்த பிள்ளை பிரச்சனைகள்
முழுசாக முடிந்தது போல்
அடுத்த வளுக்கும் நகரத்தில்
அடுக்குமாடி வாங்கிடலாம்.

அழகான சுனாமி யொன்று
அவசரமாய் வந்து விட்டால்
அதிகாரி கவலை யெல்லாம்
அடியோடு பறந்துவிடும்.

மொத்தத்தில் எங்களுக்கு
மீண்டுமொரு சுனாமி
மிகவிரைவில் வரவேண்டும்
மிச்சசொச்சம் நிரப்பிடவே.

Kaathal Thiruddu

காதல் திருட்டு

அவளைத் தொலைத்துவிட்டு
அகிலமெலாம் தேடுகிறேன்.

ஆசையாய்த் துடைத்து
அன்பு முத்தமிட்டு
அழகாய் வைத்திருந்தேன்
அரைக்கைச் சட்டைக்குள்.

அலுவலக உபயோகத்திற்காய்
அவ்வப்போது பதிவுசெய்த
ஆயிரம் இலக்கங்கள் - அவளை
ஆக்கிரமிப்புச் செய்தன.

நிஜக் காதலியின்
நித்திரைச் செய்தியெல்லாம்
அவளுள்தான் அமைதியாய்
அடங்கிக் கிடந்தன.

மகாபொலவில் புது
மணத் தம்பதிகள்
கைகோர்த்துச் சென்றதையும்
கிளிக்செய்து வைத்திருந்தேன்.

செல்லிடம் என்பதால்
சென்றுவிட்டாயோ என்னிடம்
சொல்லிக் கொள்ளாமல்
செருக்குடன் நீ!

தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்
தொலைபேசிக் காதலியை
தெரிந்தவர்கள் தயவுடன்
திருப்பித் தந்திடுங்கள்.

காதலைத் திருடுவது - உங்களுக்குக்
களங்கமெனத் தெரியாதா?

Meendumoru Santharpam

மீண்டுமொரு சந்தர்ப்பம்

இருளின் பிடியின்
இறுக்கத்தைத் தளர்த்தி
கதிரவன் மெல்லமெல்ல
கண்திறந்து பார்க்கிறான்.

உலகம் இன்னும்
உறங்கிக் கிடக்கிறதுரூபவ்
பறவைகளும் மிருகங்களும்
புல்-பூண்டுகளும் தவிர.

பூச்சிகளும் தாவரங்களும்கூட
புத்துயிர்பெற்று - தங்களை
உயிர்ப்பித்துக் கொண்டு
உற்சாகமாய் உறக்கம்கலைத்தன.

மெல்ல மெல்ல
வெளிச்சத்தைப் பரப்பி
உலகம் முழுவதையும்
ஆக்கிரமித்துக்கொண்டான் கதிரவன்.

மாற்றமில்லை மாற்றமேயில்லை
மனிதரில்மட்டும் மாற்றமில்லை
கொலை பொய்-களவு
கள்ளருந்தல் குருநிந்தை.

பஞ்சமா பாதகங்கள்
பரவிக் கிடக்கும்
உலகைத்தான் காண்கிறான்
உச்சிக்குயர்ந்துவிட்ட கதிரவன்.

வெட்கித் தலைகுனிந்து
விழிதாழ்த்தி மீண்டும்
சிறை கொள்கிறான்
சினங்கொண்ட இருளின்பிடிக்குள்.

நாளையொரு சந்தர்ப்பம்
காலை வருமென்று
மாலைச் சூரியன் - தன்
வாலைச் சுருட்டிக் கொண்டான்.

Saturday, January 30, 2010

Saddaippaikkul Sankili

சட்டைப்பைக்குள் சங்கிலி.

பக்கத்து மாணவனின்
பென்சிலைத் திருடி
மூன்றாக்கிச் சட்டைப்பைக்குள்
மறைத்து விட்டேன்.

சட்டைக்குள் என்னவென
சடுதியாய் விசாரணை
சங்கிலி என்றேன்
கிலிபிடித்து நின்றநான்.

அன்று அதிபராயிருந்த
என் அப்பாவின்
ஐந்து விரல்களும்
என் கன்னத்தில்.

இன்று சங்கிலியைக் காணும்போதெல்லாம்
என் சட்டைப்பைக்குள் பென்சிலையும்
கன்னத்தில் வடுவினையும் - ஏதோ
எண்ணத்திற் தேடுகிறேன்.

Moonkil Ninaivu

மூங்கில் நினைவு.

முட்கம்பி தாண்டி
மூங்கில் மரம்தறித்து
முழுசாய் முடிவதற்குள்
முதுகில் மூங்கிலடி.

வாரிச் சுருட்டி
வேலி பாய்ந்து
வீடு வந்தபோது
விழுந்த அடிகள்
மூங்கில் தாகினை
முழுமை பெறச்செய்தன.

முந்தநாள் மூத்தமகன்
மூங்கில் வேண்டுமென்று
முகத்தைப் பார்த்தபோது
முதுகைத் தடவிக்கொண்டேன்.

முப்பது வருடங்களாக
முதுகைத்தான் தடவுகிறேன்
மூங்கில் நினைவுமட்டும்
முதுகைவிட்டு நீங்கவில்லை.

Naveena Aasankal

நவீன ஆசான்கள்

வகுப்பிலொரு ஆசான்
வரும் பதவியுயர்ப்
பரீட்சைக்காய் விழுந்தடித்துப்
படிக்கின்றார் பாலகர்முன்.

இன்னுமொரு ஆசான்
இன்சிரியூட் பாடங்களை
இதமாய்த் திருத்துகிறார்
இதுவும் வகுப்பறையில்தான்.

சொந்த வேலையென்று
சோலிகளைக் கவனிக்க
சென்றிடுவார் இன்னொருவர்
சோக்குக்கட்டிகளை எறிந்துவிட்டு.

செல்போனைக் கையிலெடுத்து
சேதி அறிந்திடுவார்
வருகிறேன் இதோ என்று
பைக்கை முறுக்கிடுவார் வேறொருவர்.

அதிபரும் பிள்ளைகளும்
அமைதியாய் இருப்பதுகண்டு
ஆச்சரியப்படுவர் மற்றைய
ஆசான்கள் ஆத்திரத்துடன்.

ஆத்திரப்படும் ஆசான்கள்
அல்லா ஹ்வுக்குப் பயந்தவர்களாம்
அப்படியும் ஒருகதை
அங்கு உலவுகிறது

பிள்ளைகளின் பள்ளிவிட்ட
பின் படிப்பும் (ரியூஷன் கல்வி)
அதிபரின் சைட் வருமானமும்
அந்த ஆசான்களின் கையில்தானாம்.

Mazhai

மழை

மழையின் முதற்துளி
மண்ணில் விழுமுன்
முதற்சென்று நிற்பாளென்
மூத்த மகள்.

காலில் செருப்பிருக்காது
கையில் குடையிருக்காது
தலையில் தொப்பியிருக்காது
தரையில் காலுமிருக்காது.

மழைதான் அவளுக்கு நண்பன்
மழைதான் அவளுக்கு உணவு
மழைதான் அவளுக்கு உறக்கம்
மழைதான் அவளுக்கு எல்லாம்.

தொப்பாகி நிற்பாள்
தோணிவிட தொடர்மழையில்
மிஞ்சாது அந்நாளில்
மின்சாரப் பட்டியலும்
தொலைந்து விடும்
தொலைபேசிப் பட்டியலும்.

புத்தகத்தின் நடுப்பக்க மெல்லாம்
புதிய மழைக்குச் சொந்தம்
கதிகலங்கி நிற்பாள் என்மனைவி
கட்டுப்பாடு பெண்ணுக்கு வேண்டுமென்று.

என் பிள்ளைப்பருவம் எண்ணிப்பார்ப்பேன்
பின் நானும் நின்றுரசிப்பேன்
பிள்ளை வளர்க்கத் தெரியாதென்பாள்
பின் அவளும் வந்துரசிப்பாள்.

எண்ணிப் பார்த்தது
நான் மட்டுமல்ல - என் மனைவியும் தான்.

Zahar Unavu

ஸஹர் உணவு

அதிகாலை நாலுமணியிருக்கும்
அங்கும் இங்கும்
அழகழகாய்ப் பரப்பிக்கிடக்கும்
அமுதுவகை மேசையிலே.

ஒரு பிடிபிடித்து
ஓரக்கண் நிமிர்ந்து பார்ப்பர்
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை.

நேரம் இருப்பின்
நெடிய வாழைப்பழங்கள்
நாலு உட்சென்றுவிடும்
நாழிகை ஆகுமுன்னே.

அதற்கும் மேலே
அரையவியல் முட்டையொன்று.
அதைக் கீழிறக்க
அப்பிள்ஜூஸ் வேறு
ஆஹா! இதுவல்லவோ ஸஹர் உணவு.

விழித்துப் பார்ப்பர்
விழி பிதுங்கும் -
விடிந்துவிட்ட சங்கதிகேட்டு
வீணானது நோன்பொன்றுதான்.

88888

அலறி அடித்துக்கொண்டு
அண்ணார்ந்து பார்ப்பாள்
சுவரில் தொங்கும்
சுவர்க் கடிகாரத்தை - அது
சுட்டும் நாலரைமணிதனை.

அருகிற் படுக்கும் கணவன்
அவனருகில் அன்புச் செல்வங்கள்
அவசர அவசரமாய் அவர்களையெழுப்பி
அன்புமொழி பேசி அமுதூட்டி
ஆனந்தமாய் ஸஹர் உண்பாள்.
அதான் கேட்டதும்
அவள் சென்றிடுவாள் தொழுகைக்கு
அவர்களையும் பள்ளிக்கு
அனுப்பி விட்டு.

88888

அரட்டி விடுவதற்கோ
அண்ணார்ந்து பார்ப்பதற்கோ
இங்கு கடிகாரம் ஒன்றுமில்லை
இவர்களுக்குப் பிள்ளைகளுமில்லை.
தள்ளாத வயதில்
தயவு அல்லாஹ்தான்.

அகப்பட்டதை அகப்பையில்
அள்ளி எடுத்துண்டு
அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறி
ஆவலாய்க் காத்திருப்பர்
அதான் கூறும்வரை - சிலவேளை
அதான் கூறியுமிருக்கும்.

Nilavu Aval

நிலவு அவள்.

அங்கேபார் முழுமதியை
அதைப்பிடித்து நான்தருவேன்
அன்பேயழகே நீ
அமுதுண்ணு ஆரமுதே!

அன்னையின் அரவணைப்பில்
அமுதுண்ணும் பிஞ்சும்
அண்ணார்ந்து பார்ப்பது
அந்த நிலவைத்தான்.

பள்ளி நாட்களையும்
பாட வேளையையும்
விளையாட்டாய்ப் போக்கிவிட்டு
விதிதான் இதுவென்று

அங்கலாய்த்து ஆர்ப்பரித்து
ஆரவாரப்படும் மாணவனும்
கடற்கரை மண்ணிலே
கலங்குவது அந்நிலவிடம்தான்.

கடன்தொல்லை தாங்காது
கடற்பரப்பில் குப்புறப்படுத்து
பெருமூச்சுவிடும்
பெருந் தகைக்கும்
நிமிர்ந்து பார்க்கும்போது
நிலவுதான் தஞ்சம்.

புத்தக நடுப்பக்கத்தில்
புதைத்து வைத்த
புத்தம்புதிய சிகரட்டை
பற்றவைத்து பரவசப்பட்டு

புகையினை உள்ளிழுத்து
பூமிக்கு எதிர்த்திசையில்
பூக்களாய் ஊதும்போதும்
புன்னகைப்பது அந்நிலவுதான்.

அதோபார் முழுமதியென
அவளை நிமிரவைத்து
அதிர்ச்சி முத்தமொன்று
அதிரடியாய் காதலுக்களித்து
ஆனந்தப்படும் காதலனுக்கும்
அன்புச்சாட்சி அந்நிலவுதான்.

காதலிலே தோல்வியுற்று
கதி கலங்கி
நீலவானின் நிலாவொளியில்
நீள் போத்தலொன்றை
இடுப்பிலிருந்து இதமாக
இழுத்தெடுத்து போதையின்பங்காணும்
இளைஞனையும் இனிவேண்டாமென
எச்சரிக்கை செய்வதும்
எம் நிலவுப்பெண்தான்.

நீதிமன்று நீவந்து
நீதானவள் காதலென்று
நீள்விரல் காட்டி
நீதி பகர்ந்துவிட
நிலத்திற்கு அழைப்பதும்
நிலா உனைத்தான்.

நீண்ட பயணத்தின்
நிழல்களாக வந்துநிற்கும்
நிம்மதி இல்லா
நித்திரையற்ற இரவுகளை
தவிர்த்துவிட எண்ணி
தள்ளாடும் வயதினிலும்
தரையமரும் தாத்தாக்களுக்கும்
தஞ்சம் அந்நிலவுதான்.

பூரண கண்விழிக்கும்போது
பூமி விழித்துக்கொள்வதுபோல்
கண்ணிமை பதிக்கும்போது
காதலர்கள் விழித்துக்கொள்வதேன்?

காதலர்களுக்கும் உன்மேல்
கட்டுக்கடங்கா காதல்போல்.