Friday, October 25, 2013

Alakiya Ealai

அழகிய ஏழை.

வானவில்லின் வண்ணம் அவள்
வதனத்தில் மின்னக் கண்டேன்.

ஆறாம் பிறையினை அவள்
நெற்றியில் ஒட்டக் கண்டேன்.

விற்களின் வித்தைகள் அவள்
இமைகளில் விளையாடக் கண்டேன்.

மான்களின் விழிகள் அவள்
மயக்கும் கண்களிற் கண்டேன்.

ஆரஞ்சுச் சுழைகள் அவள்
அதரங்களில் அசையக் கண்டேன்.

முத்துக்கள் அவள் பற்களிலும்
பவளங்கள் விரல்நகங்களிலும் கண்டேன்.

மலை முகடுகள் அவள்
மார்புகளில் அசையக் கண்டேன்.

வறுமையின் வடிவம் அவள்
வயிற்றில் உப்பக் கண்டேன்.

இடுக்கியின் இயல்பு அவள்
இடையில் இணையக் கண்டேன்.

இன்னும் காணவில்லை அவளுக்கோர் துணையினை
இன்றும் அவள் ஏழையாய் இருப்பதனால்.