Friday, December 1, 2023

வெண்ணிலாவும் கவிஞரும்


 

நெஞ்சம் மறப்பதில்லை




 

வெண்ணிலா கவிதை மஞ்சரி .

 


சிறுகதை 10 - விதைப்பதும் விளைவதும்.

 சிறுகதை.

விதைப்பதும் விளைவதும்.

அழைப்பு மணி கேட்டதும் எழுந்து சென்ற எனது இளைய மகன்,

'வாப்பா, சமீர் உங்களைப் பார்க்க வேண்டுமாம். லீனா அன்ரிட மகன். யூனிவேசிட்டில படிக்கிறவர்' 

- கூறிவிட்டு அவனது அறையை நோக்கி நடந்தான்.

லீனா என்றதும் சிறிது பரபரப்படைந்த நான், சமீரை உள்ளே அழைத்து அமரும்படி கூறினேன்.

சமீர்தான் முதலில் என்னை உறவு முறைகொண்டு அழைத்து, வந்த விடயத்தைக் கூறினான்.

'அங்கிள், நான் பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திட்டேன். இன்றுதான் முடிவுகள் வெளியாகின. உம்மாதான் சொல்லியனுப்பினாங்க, உங்கிட்ட போய் சொல்லிவிட்டு வாங்க மகன் என்று. வாப்பா காலமான பிறகு படிப்பை நிறுத்திவிட்டு ஏதாவது தொழில் செய்துகொண்டு உம்மாவுக்குத் துணையாக இருப்போம் என்றுதான் நினைத்தேன். உம்மாவும் அப்படித்தான் எண்ணியிருந்தாங்க. ஆனா நீங்கதான் எப்படியாவது நான் பல்கலைக்கழகம் சென்று படிப்பை முடிக்கவேண்டுமென்று புத்திமதி கூறி அனுப்பிவைத்தீங்க. அதை என் வாழ்நாள் முழுக்க நினைவில் வைத்திருப்பதோடு நன்றியுடனும் இருப்பேன்.'

சமீர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவனது தன்னம்பிக்கையும் முதிர்ச்சியும் வியப்பை ஏற்படுத்தின. 

'அங்கிள், நீங்களும் உங்களது நண்பர்களும் சேர்ந்து எனது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவி செய்ததை நினைத்துப் பெருமிதமடைகிறேன். அதற்கு நன்றிக்கடனாக நீங்கள் செய்தது போலவே நானும் எனது நண்பர்களும் சேர்ந்து தந்தையை இழந்து கஸ்டப்படுற மாணவர்களுக்கு அவர்கள் படிப்பதற்கு உதவிசெய்து அவர்களை உயர்த்திவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறோம். எங்களுக்குத் தொழில் கிடைத்ததும் நாங்கள் ஆரம்பிப்போம்.'

தேனீர் அருந்திவிட்டு சமீர் விடைபெற்றுச் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த நான், நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை இரைமீட்டலானேன்.

அன்று ஒரு திங்கட்கிழமை. வேலைக்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்த வேளை, அலைபேசி அலறியது. 

'மச்சான், ஒரு பேட் நியூஸ்டா. நம்மட லீனாட கஸ்பன்ட் இறந்திட்டார்ரா. இப்பதான் பரீட் கோல் எடுத்துச் சொன்னான்.'

'என்ன? முந்தநாள்தானே கொஸ்பிட்டல் போய் பார்த்து வந்தோம். நல்லாத்தானே இருந்தார்.'

'ஆமாண்டா. நேற்றிரவு நெஞ்சு நோவென்று சொல்லியிருக்கார். மாரடைப்பு போல இருக்கு. பாவம்டா லீனா. சின்ன வயதிலேயே கணவனை இழந்திட்டா.' - நண்பன் நாஸர் அழாக்குறையாகக் கூறினான்.

லீனா எங்களது வகுப்புத் தோழி. ஆரம்பம் முதல் உயர்தர வகுப்புவரை ஒன்றாகப் படித்தவள். உயர்தரப் பரீட்சை எடுப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் அவளது வாப்பா மரணமடைந்துவிட்டதால் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு தனது சொந்த மாமாவின் மகனைத் திருமணம் செய்துகொண்டாள். லீனாவின் கணவர் நல்லவர். தனியார் நிறுவனம் ஒன்றில் காசாளராக இருந்தவர். வீட்டில் நடைபெறும் நன்மை தீமைகளுக்கெல்லாம் எங்களை அழைப்பார். நண்பர்கள் சகிதம் நானும் மனைவி பிள்ளைகளுடன் சென்றுவருவோம். 

மரணச்செய்தி கேட்டு நெஞ்சு பாரமாகியது. துக்கம் தொண்டைக்குழியை அடைத்தது. அலுவலகத்துக்கும் ஏனைய நண்பர்களுக்கும் விடயத்தை எத்திவைத்துவிட்டு லீனாவின் வீடு நோக்கிச் சென்றேன். நண்பர்களும் வந்திருந்தார்கள். ஜனாஸா ஏற்கனவே வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. அடக்கம் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

பிற்பகல் ஐந்து மணியளவில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

வீடு வந்து சேர்ந்ததும் லீனாவின் எதிர்காலம் மற்றும் அவளது ஒரே மகனின் பல்கலைக்கழக படிப்பு என்பன எவ்வாறு அமையப்போகின்றன என நினைத்தபோது வேதனையாக இருந்தது. லீனாவின் உயர்கல்வி இடையில் தடைப்பட்டதுபோல் மகனுக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாதென நினைத்து அவனது கல்விக்காவது நண்பர்களுடன் சேர்ந்து உதவிசெய்ய வேண்டுமென உறுதிபூண்டேன். 

அன்றிரவு நித்திரை கொள்ள முடியவில்லை. புரண்டு புரண்டு கண்களை மூட முயற்சித்த போதும் இயலவில்லை. நாளை பொழுது விடிந்ததும் நண்பர்களை அணுகி ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஊசலாடியது.

விடிந்தும் விடியாத வேளை முதலில் நண்பன் நாஸரைத் தொடர்பு கொண்டு லீனாவின் மகனின் படிப்பிற்கு எப்படியாவது நண்பர்களாகிய நாம் ஒன்றுசேர்ந்து உதவிசெய்ய வேண்டுமெனக்கூறி அவனது ஆலோசனைகளைக் கேட்டேன்.

'அவசரப்படாதேடா! லீனாட அனுமதியில்லாமல் நாம எப்படிடா முடிவெடுப்பது? லீனாவைப்பற்றி நமக்கு தெரியும்தானே! அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ளமாட்டா. எப்படியென்றாலும் அவட 'இத்தா' காலம் முடிய நாலைந்து மாதமாகும். பொறுத்திரு. நம்மட மற்ற நண்பர்களிடமும் சொல்லி அவங்கட கருத்துகளையும் பார்ப்போம்.'

மறுபுறம் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஏனைய நண்பர்களுக்கும் அலைபேசி மூலம் விடயத்தைத் தெரியப்படுத்திவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டேன்.

இரண்டு நாட்களின் பின் நண்பன் நாஸரிடமிருந்து அழைப்பு வந்தது.

'நாம மொத்தமாக ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து உதவுறது பிரயோசனம் இல்லைடா. அது ஐந்தாறு மாதங்களில கரைஞ்சிடும். அதனால லீனாட மகன்ட படிப்புச் செலவுக்கு, நாம ஐந்து பேரும் மாதாமாதம் இரண்டாயிரம் வீதம் மொத்தம் பத்தாயிரம் கொடுப்போம். அதுவும் வங்கியில ஓர் எக்கவுண்ட திறந்து மகன்ட பேரிலேயே போடுவம். அத நீ பொறுப்பெடு' 

- வழக்கமான பாணியில் மளமளவென்று கதைத்துமுடித்தான்.

'இத லீனாவுக்கு எப்படிடா சொல்றது? அவ மகன் மாதாந்தோறும் நம்மிடமிருந்து காசு வாங்குறதுக்கு ஒத்துக்குவானா? இல்ல லீனாதான் இதற்குச் சம்மதிப்பாளா?'

- எனது கேள்விக்கணைகள் தொடர்ந்தன.

'நான் எல்லா விடயத்தையும் பேசி முடிச்சிட்டேன்டா. லீனாட அக்காவைக் கண்டு லீனாவுக்கு நடந்த கதிபோல் மகனுக்கும் நடந்துவிடக்கூடாது என விளக்கிக் கூறினேன். எத்தனையோ கெட்டிக்காரப் பிள்ளைகள் இப்படியான நிலைமைகளால் படிப்பையே பாதியில் நிறுத்திவிட்டு கூலித்தொழில் என்றும் கடைகளில் சின்னச் சின்ன வேலைகள் செய்தும் காலத்தை ஓட்டுதுகள். சில பிள்ளைகள் வழிதவறியும் சென்றுவிடுகின்றனர். அதனால லீனாக்கிட்ட எப்படியாவது கதைக்கச் சொன்னேன். அவவும் சரியென ஏற்றுக்கொண்டு நாளை வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு போய்விட்டா. இப்பதான் வந்து சில விடயங்களைக் கூறினா. லீனாட கணவன் வேலைசெய்த கம்பனியும் ஊழியர்களும் சேர்ந்து ஒரு தொகைப்பணம் தருவதாகச் சொல்லியிருக்காங்களாம். கணவன்ட பேரிலே வெற்றுக் காணியொன்றும் இருக்காம். அதையும் விற்று மகனின் படிப்பை எப்படியோ முடிச்சிடலாம் எனக்கூறி நம்மட உதவியை ஆரம்பத்திலே விரும்பவில்லையாம். அக்காதான் லீனாவுக்கு தந்தையை இழந்த மகனைப் படிப்பிப்பதிலும் வாழ்க்கையைத் தனியொரு பெண்ணால் கொண்டு நடாத்துவதிலுமுள்ள சிரமங்களை எடுத்துக் கூறி ஒத்துக்கொள்ள வைத்திருக்கா.'

- நாஸர் சொல்லி முடித்ததும் என் நெஞ்சை அடைத்திருந்த பெரும் பாறாங்கல்லொன்று பனிக்கட்டிபோல் உருகிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. நீண்டதொரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு அமைதியாக நாற்காலியில் சாய்ந்துகொண்டேன்.

நான்கு வருடங்கள் நான்கு மாதங்கள் போல் மிக வேகமாகப் பறந்துவிட்டன. இறைவன் உதவியால் நினைத்ததுபோல் எல்லாம் நல்லபடியாகவே நடந்தேறின. ஐந்து நண்பர்களும் லீனாவுடன் சேர்த்து ஆறு பேரும் அன்றுபோல் இன்றும் ஒற்றுமையாகவும் பரஸ்பரம் உதவி செய்பவர்களாகவும் இருப்பதையிட்டு பெருமைப்படுகிறேன்.

இன்றைய நாட்களில் குழுக்களாகச் சேர்ந்து உல்லாசப் பயணங்கள் என்றும் கேளிக்கைகள் என்றும் சமூக வலைத்தளங்கள் என்றும் நேரத்தையும் பணத்தையும் வீண்விரயம் செய்யாமல் தந்தையை இழந்த, நமது நண்பனின் ஒரு பிள்ளையின் உயர்கல்விக்காவது கூட்டாக உதவினால் சமீர் போன்ற எத்தனையோ பிள்ளைகள் சமூகத்தில் நல்ல பிரசைகளாக உருவாகி, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். 

இன்று லீனாவின் மகன் என்னை வந்து சந்தித்துக் கூறிய வார்த்தைகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அவை மீண்டும் மீண்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன.

-எஸ். ஏ. கப்பார்.

06-11-2023.

(26-11-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

சிறுகதை 9 - ஒரு துரோகியின் மனைவி

 சிறுகதை.

ஒரு துரோகியின் மனைவி

உயர்தர வகுப்பில் படிக்கும் காலங்களில் ஜெஸினா தன் பெற்றோரின் அன்பிலும் அரவணைப்பிலும் தன் இரு தம்பிகளுடன் கட்டுப்பாட்டோடு வாழ்ந்தவள்தான். உயர்தரப் பரீட்சை முடிவடைந்து பரீட்சை முடிவுகள் வரும்வரை ஆங்கிலக் கல்வியையும் கணினிக் கல்வியையும் தனியார் கல்வி நிலையமொன்றில் கற்க வேண்டுமென எண்ணினாள். அதனால் பெற்றோரின் அனுமதியுடன் தன் இரு தோழிகள் சகிதம் தனியார் கல்வி நிலையமொன்றில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள்.

ஜெஸினாவின் அம்மா ஓர் ஆசிரியை. அப்பா தனியார் மருந்தகம் ஒன்றில் தொழில் புரிபவர். ஜெஸினா பெண் பிள்ளை. பெற்றோருக்கு மூத்தவள். ஜெஸினாவுக்கு இரு தம்பிகள். இருவரும் பாடசாலை மாணவர்கள். மூவரும் பெற்றோரின் கண்காணிப்பில் மிகவும் கண்ணியமாக வளர்க்கப்பட்டவர்கள்.

ஜெஸினா தனியார் வகுப்பில் சேர்ந்த பிறகுதான் அவளது வாழ்வில் விதி விளையாடத் தொடங்கியது. அதே தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்துக்கொண்டிருந்த நிகால் என்ற ஆங்கில ஆசிரியருடன் காதல் மலர ஆரம்பித்தது. பல மாதங்கள் கடந்த பின்புதான் அவளது காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்தது. எவ்வளவோ புத்திமதிகள் கூறியும் ஜெஸினா ஏற்றுக் கொள்ளவில்லை. நிகால் ஆசிரியரையே திருமணம் முடிக்கப்போவதாக ஒற்றைக்காலில் நின்றாள்.

''மகள். இப்ப உங்களுக்கு திருமணத்திற்கு என்ன அவசரம். தொடர்ந்து படித்து பல்கலைக்கழகம் சென்று ஒரு தொழிலைப் பெற்ற பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்தானே?'' 

- அப்பா பக்குவமாக எடுத்துக் கூறியும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது.

'ஜெஸினா, நான் சொல்வதைக் கேளு பிள்ளை. வீணாக உன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளாதே! இப்பதான் உனக்கு 18 வயது. நீ படிக்க வேண்டிய காலம். கல்யாணம் அது இது என்று உன் எதிர்காலத்தைப் பாழாக்கிடாதே.'

- அம்மா அழத் தொடங்கினாள். 

அனைத்தும் ஜெஸினாவுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கானது. இறுதியில் வேறு வழிகளின்றி ஜெஸினாவின் திருமணம் நடந்தேறியது. சுமார் பதினெட்டு மாதங்கள் திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகச் சென்றது. அழகிய பெண் குழந்தையொன்றும் கிடைத்தது. ஜெஸினா பூரித்துப் போனாள்.

இவ்வாறு தன் குழந்தையுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்த ஜெஸினாவின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் அஸ்தமித்துப்போய்விடும் என அவள் கனவிலும் நினைத்ததில்லை.

ஒரு நாள் காலை ஜெஸினாவின் அறையிலிருந்து பலத்த சத்தத்துடன் அழுகுரல் கேட்டது.

கணவன் - மனைவிக்கிடையில் ஆயிரம் பிரச்சினை இருக்கும். நாம் தலையிடக்கூடாது என்றெண்ணி ஜெஸினாவின் பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்தனர். 

இரண்டு நாட்களின் பின் ஜெஸினா தன் அம்மாவை அழைத்து,

''அம்மா, அவர்ர நடவடிக்கை எல்லாம் எனக்கு கஸ்டமாயிருக்கு அம்மா. உங்கட சொல்லைக்கேட்டு நான் தொடர்ந்து படிச்சிருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்க மாட்டா. அவருக்கு கிடைக்கும் சம்பளம் போதாதாம். அதனால அவர் தனியாக ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்போறாராம். அதற்கு அதிக பணம் தேவையாம். அதனால நம்மட காணியில வீடு இருக்கிற பகுதி போக மிச்சத்தை வித்து காசு தரட்டாம் என்று என்னை சித்திரவதைப்படுத்துறார்'' என்று கூறி ஓவென அழத் தொடங்கினாள்.

ஜெஸினாவின் அம்மாவுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது போலாகிவிட்டது. ஜெஸினாவின் அப்பா வந்ததும் இதுபற்றி கதைத்து ஒரு முடிவு எடுக்கவேண்டுமென நினைத்து அமைதியாக இருந்தாள். 

கணவன் வீடு வந்ததும் ஜெஸினாவின் அம்மா நடந்தவற்றையெல்லாம் தன் கணவனிடம் கூறி அவரது முடிவை ஆவலோடு எதிர்பார்த்தாள்.

''என்ன செய்வது. அவள் தேடிய தேட்டம். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போனதால் வந்த விளைவு. அவளுக்குச் சேரவேண்டியதை அவளுக்குக் கொடுக்கத்தான் வேணும். இரண்டு குடும்பம் தாராளமாக இருக்கக்கூடிய பெரிய வீடுதான் நம்மட வீடு. ஒரேயொரு பெண் பிள்ளை. நம்மட கண்ணுக்குப் பிறகு அவளுக்குத்தானே எல்லாம். ஆனா காணியில் அரைவாசியை விற்கிறதென்பது எனக்குப் பொருத்தமா படல. இது அவள்ள வாழ்க்கை பிரச்சினை. அதனால மாம்பிளைக்கிட்ட கதைத்துப் பார்ப்போம்.' '

- ஒரு பெருமூச்சுடன் ஜெஸினாவின் அப்பா முடித்தார்.

இரண்டு மூன்று நாட்களின் பின், ஜெஸினாவின் அப்பா தன் மருமகனுடன் கலந்துரையாடினார். மருமகன் தனக்குள்ள பணப் பிரச்சனைகளைக் கூறி பல வாக்குறுதிகளைக் கொடுத்து மாமனாருக்கு நம்பிக்கை ஊட்டி தன் வலையில் சிக்கவைத்தான். 

இறுதியில் குடியிருக்கும் வீட்டுக் காணியின் நான்கில் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டு பணம் முழுவதும் மகள் ஜெஸினாவின் கணவரிடம் கொடுக்கப்பட்டது.

ஒரு வருடம் சென்ற பின்பும் ஜெஸினாவின் கணவன் கூறியதுபோல் எதுவும் நடைபெறவில்லை. ஜெஸினாவுக்கும் சந்தேகம் வலுவடையத் தொடங்கவே ஒரு நாள்,

''என்னங்க, நீங்க தனியா கல்வி நிலையம் தொடங்க எனக் கூறி காணி வித்தமில்ல. ஏன் இவ்வளவு நாளா தொடங்கல. காசும் கரைஞ்சிடுமில்ல.''

- பக்குவமாய் தன் கணவனிடம் கேட்டாள்.

''என்ன? கல்வி நிலையமோ? இந்த பிச்சக்காரக் காசுக்கு கல்வி நிலையம் தொடங்கலாமோ? நான்தான் காணியில அரைவாசிய வித்து காசு கேட்டேன். உங்க அப்பா அதில அரைவாசிய வித்து காசு கொடுத்தார். போய் உங்க அப்பாக்கிட்ட சொல்லி மிச்ச அரைவாசியையும் வித்து காசு கொண்டுவா. கல்வி நிலையம் திறப்போம்.''

எரிந்து விழுந்தான் நிகால்.

இதனை சற்றும் எதிர்பாராத ஜெஸினா அதிர்ச்சியுற்று நிலை தடுமாறினாள். இதுபற்றி தன் பெற்றோருடன் வாய்திறக்காது விதியை நொந்தபடி பொறுமை காத்தாள்.

நாட்கள்தான் கடந்தனவே தவிர, உருப்படியாக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், நிகாலின் நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.  

தன் கணவனின் ஆட்டங்களுக்கு இடங்கொடுத்தால் குடியிருக்கும் வீடும் பறிபோய் தன் பெற்றோரினதும் இரு சகோதரர்களினதும் எதிர்கால வாழ்க்கை சூனியமாகிவிடும் என எண்ணிப் பயந்தவளாய் நிதானமாக இருந்தாள். நாளடைவில் பிரச்சினைகள் விரிசலாகி இருவரிடையேயும் மனக்கசப்பை உண்டாக்கியதுடன், அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது.

இப்போதெல்லாம் நிகால் வீட்டுக்கு வருவதுமில்லை. மனைவி பிள்ளையைப் பார்ப்பதுமில்லை.

இன்று, கள்ளங் கபடமற்ற ஜெஸினா தன் குழந்தை சகிதம் தன் பெற்றோரின் தயவுடன் ஒரு துரோகியின் மனைவியாக வாழ்ந்துவருகிறாள்.

- எஸ் ஏ கப்பார்.

04-10-2023. 

(15-10-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

சிறுகதை 8 - ரியூசன் மாஸ்டர்.

 சிறுகதை.

ரியூசன் மாஸ்டர்.

எங்களூரில் இருபத்தைந்து முப்பது ரியூசன் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். இருந்தும் ரியூசன் மாஸ்டர் என்றதும் உடனே நினைவுக்கு வருவது சுலைமான் சேர்தான். ஊரில் மட்டுமல்ல வெளியூர்களிலும் அவரது புகழ் பரவிக் கிடக்கிறது.

சுலைமான் சேர் ஆரம்ப வகுப்புப் பிரிவினருக்கு கல்வி கற்பிக்கும் ஓர் ஆசிரியர்தான். ஆரம்ப காலங்களில் பாடசாலையில் மட்டுமே கற்பித்துக்கொண்டிருந்ததால் பெரும்பாலான பெற்றோருக்கு சுலைமான் சேரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. பின் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியராகப் பரிணாமம் எடுத்த பின்பு தான் அவரது புகழ் பரவத்தொடங்கியது.

ஆரம்பத்தில் சுலைமான் சேரிடம் கல்வி கற்று புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சுமார் எண்பது சத வீதமான மாணவர்கள் சித்தியடைந்தது அவர் கற்பித்த பாடசாலைக்கு கௌரவத்தையும் பெற்றோர் மத்தியில் பெரும் மதிப்பையும் பெற்றுக்கொடுத்தது. 

பச்சிளம் குழந்தைகளைப் பாடாய்படுத்தி வெற்றிபெற வைத்த ஒரு சில வறட்டுக் கௌரவப் பெற்றோர்கள் தாங்களே பரீட்சையில் சித்தியடைந்ததாக எண்ணிக்கொண்டு சுலைமான் சேர் வீட்டுக்குச் சென்று அன்பளிப்பு என்ற போர்வையில் பெறுமதியான பரிசுப் பொருட்களை வழங்கத் தொடங்கினர். காலப்போக்கில் அன்பளிப்புப் பொருட்கள் ரொக்கப் பணமாக மாறியபோது சுலைமான் சேரின் எண்ணமும் பணத்தின் பக்கம் சாயத்தொடங்கியது. அதன் விளைவு பாடவேளைகளில் கற்பிக்கும் நேரம் குறைந்து குறைந்து பாடசாலைக்குச் சமுகமளிக்கும் நாட்களும் வெகுவாகக் குறையத்தொடங்கின. அதிபரும் அது பற்றி பெரிதாகப்  பொருட்படுத்திக் கொள்ளவில்லை. முழு நேர ரியூசன் ஆசிரியராகவே மாறிவிட்ட சுலைமான் சேர் இனிவரும் காலங்களில் தனது கற்பித்தல் முறையில் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு பணம் பண்ணவேண்டுமெனத் திட்டமிட்டார். 

எனவே பாடசாலையிலுள்ள ஐந்தாந்தர மாணவர்களை ஒன்றுசேர்த்து பல வகுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனிக் கவனம் செலுத்தி கற்பிக்கப்போவதாகவும் சித்தியடைவது நூறு வீதம் உறுதி எனவும் கூறி மாணவர்களது பெற்றோர்களை ஒரு விடுமுறை தினத்தில் பாடசாலை வகுப்பறையில் ஒன்று கூடுமாறும் அழைப்புவிடுத்தார்.

குறித்த தினத்தில் பெற்றோர்களும் ஒன்றுகூடினர். சுலைமான் சேர் பெற்றோர்களைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார்.

'எனது குறுகிய கால அழைப்பையேற்று வருகை தந்திருக்கும் பெற்றோருக்கு என் அன்பு கலந்த நன்றிகள். கூடுதலாக தாய்மார்கள் வந்திருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். ஆண்கள் தங்களது தொழில் நிமித்தம் வௌ;வேறு இடங்களுக்குச் சென்று வருவதால் தாய்மார்தான் பிள்ளைகளின் கல்வியிலும் அவர்களது எதிர்கால விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இது போட்டி நிறைந்த காலம். பிள்ளைகளை விளையாட்டு, கைத்தொலைபேசி போன்றவற்றில் கவனம் செலுத்தவிடாது இந்த புலமைப்பரிசிற் பரீட்சையில் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைய உதவிசெய்யவேண்டும். அது சம்பந்தமாக கலந்துரையாடவே உங்களை அழைத்துள்ளோம். அதற்கு எங்களைப்போல் நீங்களும் பல தியாகங்களைச் செய்வதோடு ஒரு தொகை பணமும் செலவு செய்ய வேண்டிவரும். இப் பரீட்சை முடியும்வரை மாதந்தோறும் சுமார் ஐயாயிரம் அளவில் செலவாகும்.' எனக் கூறிவிட்டு மெதுவாக கதிரையில் அமர்ந்தார் சுலைமான் சேர்.

ஐயாயிரம் என்றதும் வருகைதந்திருந்த எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு தங்களுக்குள்ளேயே உரையாடத் தொடங்கினர்.

ஓர் ஏழைத் தந்தை எழுந்து,

'அரசாங்கம்தான் இலவசக்கல்வி என்று சொல்லி எல்லாத்துக்கும் செலவு செய்யுது. படிப்பிக்கிறதுக்கு உங்களுக்கும் சம்பளம் தருது. நீங்க பாடசாலை நேரத்தில படிப்பிக்கலாம்தானே. எல்லாத்துக்கும் காசு காசு என்று கேட்டா நாங்க எங்கே போறது?' - அழாக்குறையாக சொல்லிவிட்டு அமர்ந்தார்.

'நீங்க சொல்லுறதும் சரிதான். இஞ்ச பாருங்க. எங்கட தேவைக்கு நாங்க காசு கேட்கவில்லை. பிள்ளைகளுக்கு ஒரு வாரத்துக்கு ஒரு முறை பரீட்சை வைக்க வேண்டும். அதைத் திருத்தி அவர்களது புள்ளிகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பரீட்சை பேப்பரெல்லாம் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களிலிருந்துதான் எடுக்க வேண்டும். நீங்க விரும்பினாத்தான் கொடுங்க. நாங்க கட்டாயப்படுத்தல்ல' - சிறிது கடுமையான குரலில் பதிலளித்தார் சுலைமான் ஆசிரியர்.

வந்திருந்த ஏனைய பெற்றோர்களும் தங்கள் தங்கள் கருத்துகளைக் கூறி இறுதியில் தாய்மார் தரப்பிலிருந்து மாதந்தோறும் நாலாயிரம் ரூபா கொடுப்பதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் ஆண்கள் தரப்பில் முழுமனதுடன் இம்முடிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதை அவதானித்த சுலைமான் ஆசிரியரின் நரி மூளை வேலை செய்யத் தொடங்கியது. வருகைதந்திருக்கும் தாய்மாரின் பிள்ளைகளைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தி பணம் பண்ணிவிடலாம் என நினைத்து,

'சரி. எல்லாப் பிள்ளைகளும் நூத்துக்கு நூறு எடுக்க வேண்டுமென்பதுதான் எங்கட நோக்கம். எதிர்வரும் வியாழக்கிழமை பாடங்கள் ஆரம்பமாகும். எல்லோரும் கட்டாயம் வாங்க' எனக் கூறிவிட்டு சுலைமான் ஆசிரியர் சென்றுவிட்டார்.

ஓரிரு மாதங்கள் ரியூசன் பாடங்கள் எல்லா மாணவர்களுக்கும் ஒழுங்காக நடைபெற்றன. மாணவர்களும் தங்கள் பெற்றோர்களின் வசதிக்கேற்ப கொடுத்தனுப்பிய தொகையினை சுலைமான் சேரிடம் கொடுத்தனர். தான் எதிர்பார்த்த தொகையினைக் கொண்டுவந்த பிள்ளைகளை வேறாகப் பிரித்தெடுத்து அவர்களை மட்டும் தனது வீட்டுக்கு வருமாறும் ஏனைய பிள்ளைகளை பாடசாலையில் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார். 

சுலைமான் சேரின் மனிதாபிமானமற்ற இந்தச் செயலினால் அதிக பணம் செலுத்த முடியாத நல்ல கெட்டிக்காரப் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இதைத் தட்டிக் கேட்க யாருமே முன்வராததால் சுலைமான் சேரின் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.

அறுவை மரப்பலகைகளாலும் பழைய கூரைத்தகடுகளாலும் அமைக்கப்பட்டிருந்த ரியூசன் கொட்டில் தற்போது புதியரக இருக்கைகளும் மின்விசிறிகளும் நவீன ஒலிபெருக்கிச் சாதனங்களும் கொண்ட கவர்ச்சிகர வகுப்பறைகளாக மாறின. சுலைமான் சேரின் வருமானம் பல்கிப் பெருகி புதிய வீடு, கார் என அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. 

காலப்போக்கில் சுலைமான் சேரின் மனதில் குடிகொண்டிருந்த நிம்மதி எங்கோ பறந்துபோய்விட்டது. பச்சிளம் குழந்தைகளைப் பகடைக்காயாக உபயோகித்து ஆடம்பரமாக வாழ நினைத்தவர் தனது மனைவி மக்களின் எதிர்காலம் பற்றி எண்ண மறந்துவிட்டார். மூத்த மகன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் போதை மாத்திரைகள் உட்கொள்ளும் நபராக மாறிவிட்டான். இளைய மகன் அவருக்குத் தெரியாமல் காரை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாகி வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் நாலைந்து மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இவற்றையெல்லாம் மனதிற் சுமந்துகொண்டு அவரது மனைவியும் ஒருவித மனநோயாளியாக மாறிவருவது சுலைமான் சேருக்குத் தெரியாமலில்லை.

நடந்தது நடந்ததுதான். இனி யோசித்துப் பயனில்லை. தனது முதுமைக்கால வாழ்க்கை மற்றும் மனைவி மக்களின் எதிர்காலம் பற்றிய பயம் சுலைமான் சேரை மெல்ல மெல்லக் கொல்லத் தொடங்கியது.

- எஸ் ஏ கப்பார்.

25-06-2023

(23-07-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

சிறுகதை 7 - தோழி ஜெனீறா.

 சிறுகதை.

தோழி ஜெனீறா.

இன்று தோழி ஜெனீறாவின் மகளின் திருமணம். மனைவியும் நானும் பிள்ளைகளுடன் திருமண மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

ஜெனீறாவும் நானும் ஒன்றாக ஒரே பாடசாலையில் படித்தவர்கள். தரம் ஆறு தொடக்கம் உயர்தர வகுப்பு வரை இரண்டொரு ஆண்டுகள் தவிர, ஏனைய அனைத்து ஆண்டுகளிலும் ஒரே வகுப்பறைதான்.

எங்களது வகுப்பு மாணவிகளில் ஜெனீறா மிக அழகானவள். திறமைசாலி. கள்ளங் கபடமற்றவள். எல்லா மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் அன்பாகப் பழகுபவள். க.பொ.த. (சாஃத) பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் அதி விசேட சித்திபெற்று பாடசாலைக்கு நன்மதிப்பைப் பெற்றுக் கொடுத்தவள். 

தொடர்ந்து அதே பாடசாலையில் உயிரியல் உயர்தரப் பிரிவில் சேர்ந்து கல்வி கற்றோம். க.பொ.த. (உஃத) பரீட்சையில் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்றிருந்தும் எங்கள் இருவருக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. 

ஏதாவது அரச தொழிலொன்றைப் பெறும் நோக்கத்தில் நான் இரண்டாவது முறையாக பரீட்சைக்குத் தோற்ற விரும்பவில்லை. ஆனால் ஜெனீறா இரண்டாவது முறையும் தோற்றி, பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் சென்றுவிட்டாள். அதன் பின் அவளை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.

சில மாதங்களுக்குள் எதிர்பாராதவிதமாக எனக்கும் ஓர் அரச தொழில் கிடைத்தது. தொழில் கிடைத்தவுடன் வீட்டில் என் பெற்றோர்கள் எனக்குத் திருமணம் முடித்துவைக்க விரும்பி அவசரப்படுத்தினார்கள்.


''அம்மா! திருமணத்துக்கு இப்ப என்ன அவசரம்? உத்தியோகம் கிடைத்து இரண்டொரு வருஷமாவது போகட்டுமே. நானும் கையில ஏதாவது சேர்த்துக்கிட்டு கல்யாணம் முடிக்கிறது நல்லதுதானே அம்மா!'' என்றேன்.

''சரி மகன். உன்ட தங்கைச்சிக்கும் இருபத்து மூன்று வயசாகிறது. எங்களுக்கும் வயசாயிடுச்சு, அதுதான் எங்கட கண்ணோட இருவரினதும் கல்யாணத்தை முடிச்சிடலாமென நினைக்கிறோம். காலா காலத்தில அவளுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து முடிச்சிடணும். அவ என்னடாவெண்டா அண்ணா முடிச்ச பொறகுதான் முடிப்பேன் என்று அடம்பிடிக்கிறா.'' 

அம்மா அழாக்குறையாகக் கூறினாள்.

அம்மாவின் வார்த்தைகளும் நியாயமாகத்தான் இருந்தன. தொடர்ந்து அப்பாவும் வற்புறுத்தத் தொடங்கினார். நான் ஒத்துக்கொள்ளாதது அப்பாவுக்குச் சங்கடமாக இருந்தது. நான் யாரையாவது விரும்பிக்கொண்டிருக்கிறேன் என்ற சந்தேகமும் அப்பாவுக்கு ஏற்பட்டது. எனது நண்பர்களை அணுகி விசாரித்திருக்கிறார். ஜெனீறாவும் நானும் நல்ல நண்பர்கள் என்றும் ஒருவேளை அவளை நான் விரும்பலாம் என்றும் அதனால் ஜெனீறாவின் பெற்றோரிடம் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் என்றும் அப்பாவிடம் கூறியிருக்கிறார்கள். அப்பாவும் ஜெனீறா வீட்டுக்குச் சென்று விசாரித்திருக்கிறார். ஜெனீறாவின் அம்மாவுடன் கதைத்திருக்கிறார்.

இந்த விடயம் ஒரு விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த ஜெனீறாவைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்றபோதுதான் எனக்குத் தெரியவந்தது.

''டேய்! எப்படி இருக்காய்டா. தொழில் எல்லாம் நல்லம்தானே? அவசரமா உனக்கு பொண்ணு பாக்கிறாங்களாமே? உண்மைதானா? எங்க அம்மாதான் சொன்னா. உங்க அப்பாதான் உனக்கு நல்ல பொண்ணொன்று பார்க்கவேண்டுமென்று அம்மாக்கிட்ட சொன்னாராம்.'' 

சொல்லி முடித்த ஜெனீறா கலகலவெனச் சிரித்தாள். 

நீயும் நல்ல பொண்ணுதானே எனச் சொல்ல நினைத்த என்னை நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட அவளது கள்ளமில்லாச் சிரிப்பொலி தடுத்து நிறுத்திவிட்டது.

எனது அப்பாவும் அவளது அம்மாவும் எவ்வளவு நாகரீகமாகவும் பண்பாகவும் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது அவர்கள் மீது எனக்குப் பெரும் மரியாதை ஏற்பட்டது.

நான் அமைதியாக இருந்தேன். அவதானித்த ஜெனீறா,

''நான் படிப்பை முடித்து பட்டம் பெற்று ஒரு தொழிலைப் பெற வேண்டும். அதற்குப் பிறகுதான் என்ட கல்யாணம். எப்படியோ மூன்று நாலு வருஷம் போகும்.'' என்றாள்.

ஜெனீறா நாசூக்காக அவளது முடிவைச் சொல்லுகிறாள் எனப் புரிந்துகொண்டு அவளிடமிருந்து விடைபெற எழுந்தேன். 

''டேய்! கல்யாணத்தை நான் விடுமுறையில நிற்கிற நாளாப் பாத்து வைச்சிடுடா. நானும் கலந்துகொள்ள வேணுமில்ல.'' 

மீண்டும் கலகலவெனச் சிரித்தாள். முத்துக்கள் தெறித்தது போலிருந்தது அவளது சிரிப்பு.

நானும் பதிலுக்குப் போலிச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு விடைபெற்றேன்.

ஓரிரு மாதங்களில் எனக்குத் திருமணம் நடந்தேறியது. மனைவியும் அரச நிறுவனமொன்றில் தொழில்புரிபவள். 

திருமணத்தின் பின் எங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. ஆணொன்று பெண்ணொன்று என இரு பிள்ளைகள். இருவரும் தற்போது பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரிகள். தொழில் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தொழில் கிடைத்தபிறகுதான் திருமணம் என்று சொல்லிவிட்டார்கள்.

என் திருமணம் நடந்து இரண்டு வருடங்களில் என் தங்கை மற்றும் ஜெனீறா ஆகியோரின் திருமணங்களும் இனிதே நடைபெற்றன. ஜெனீறாவின் திருமண நிகழ்வில் அப்பா, அம்மா, மனைவியுடன் சென்று கலந்துகொண்டேன்.

ஜெனீறாவின் குடும்பத்துடனான உறவு மேலும் மேலும் வலுப்பெற்றது. ஜெனீறாவின் கணவர் ஒரு மின் பொறியியலாளர். பண்பானவர். எங்களது குடும்ப நன்மை தீமை எல்லாவற்றிலும் தராதரம் பாராது கலந்துகொள்பவர். ஜெனீறாவின் தூய்மையான நட்பு பல ஆண்டுகள் கடந்தும் ஓர் அணுவளவுகூட மாறவில்லை.

இன்று ஜெனீறாவின் மகளின் திருமணம். என் மகளைவிட இரண்டு வயது இளையவள். நானும் மனைவியும் கல்யாண மண்டபத்தை நோக்கி குடும்ப சகிதம் சென்றுகொண்டிருக்கிறோம்.

திருமண மண்டபத்தை அடைந்ததும் யாருமே எதிர்பாராவண்ணம் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டு 

என் இளைய மகனைக் கூட்டிச்செல்கிறான் ஜெனீறாவின் மூத்த மகன்.

என் மனைவியும் ஜெனீறாவும் வியப்பு மிகுதியால் அவர்களையே பார்த்து நின்றனர்.

- எஸ். ஏ. கப்பார்.

29-05-2023

(04-06-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

சிறுகதை 6 சமூக சேவகி.

 சிறுகதை.

சமூக சேவகி.

இன்று உயர்தரப் பரீட்சை முடிவு இணையத்தில் வெளியானபோது ஜெஸீனாவின் முகம் கறுத்து வாடிப்போய்விட்டது. உயிரியல் பிரிவில் இரண்டு திறமைச் சித்திகளும் ஒரு சாதாரண சித்தியும் பெற்றிருந்தாள். எவ்வளவோ கஷ;டப்பட்டு மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருந்தும் பல்கலைக்கழகம் செல்வதற்குப் போதாது என்ற கவலை ஜெஸீனாவைப் பெரும் சங்கடத்திற்குள்ளாக்கியது. மிகவும் கவலைப்பட்டாள். அவளது அண்ணா, அக்கா, தம்பி போன்றோருக்கும் பெரும் கவலையாக இருந்தது. 

தற்போதைய குடும்பச் சூழ்நிலையில் மீண்டுமொருமுறை ரியூஷன் வகுப்புகளுக்குச் சென்று பாடங்களைப் படிக்க வேண்டும்.  அதற்கான செலவுகளைச் செய்யக்கூடிய நிலையில், தற்போது அப்பாவும் இல்லை. மேலும் பக்கத்து நகரத்திலுள்ள தனியார் வகுப்பிற்கு கூட்டிச்செல்ல அண்ணனோ அன்றி தம்பியோ முன்வர வேண்டும். அண்ணன் அரச ஊழியராகையால் அவருக்கு சிரமமாக இருக்கும். இவற்றையெல்லாம் நினைத்து ஜெஸீனா மட்டுமல்ல, அவளது சகோதரர்களும் யோசிக்கத் தொடங்கினர்.

ஜெஸீனாவின் அண்ணன் ஒரு முன் கோபி. கோபத்தில் அவசரப்பட்டு ஏதாவது உளறிவிடுவான் என்பது வீட்டில் எல்லோருக்கும் தெரியும். இன்றும் அவ்வாறு கதைக்க முற்பட்டபோது,

'யாருமே எதுவும் கதைக்கக்கூடாது. உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் முதற்தடவை பாஸ் பண்ணுறதென்பதே பெரிய விடயம்.'

அவளது அப்பா குறுக்கிட்டு தனது மகன் பேச வந்ததைப் பேசவிடாது தடுத்தார்.

'இல்ல அப்பா. நான் சொல்ல வந்தது...'

அவன் சொல்லி முடிப்பதற்குள்,

'மகன், கடந்த மூன்று வருடங்களாக உங்க அம்மா சுகமில்லாம இருந்து பட்டபாடு உங்களுக்கு நல்லாத் தெரியும்தானே. அந்தப் பிள்ளைதானே இராப்பகலா உங்கம்மாவை வேளைக்கு வேளை மருந்து கொடுத்து உணவு கொடுத்து பாத்துக்கிட்டா. அவட ராசி அவ உயர்தரம் படிக்கத் தொடங்கின நாள் தொட்டு உங்கம்மாவுக்கும் நோய்தான். அம்மாவையும் பார்த்துக்கிட்டு வகுப்புக்கும் போய் வந்து அவ எவ்வளவு கஷ;டப்பட்டிருக்கா. பரீட்சை நெருங்க நெருங்க உங்க அம்மாவின் உடல் நிலையும் மோசமா போயிட்டே இருந்தது. பரீட்சை முடியமட்டும் காத்திருந்ததுபோல அம்மாவும் நம்ம விட்டுப் பிரிஞ்சிட்டா. இவ்வளவு கஷ;டத்திற்கு மத்தியிலும் அவ பாஸ்பண்ணியிருக்கா எண்டா நாம எவ்வளவு பெருமைப்பட வேணும்.' என்றவாறு ஜெஸீனாவின் அப்பா அவளது தலையைத் தடவி ஆறுதல் கூறினார்.

ஜெஸீனா அழுகையை அடக்க முடியாமல் அப்பாவின் நெஞ்சில் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மத்தொடங்கினாள்.

தொடர்ந்துவந்த சில வாரங்களாக ஜெஸீனாவின் படிப்பு சம்பந்தமாக யாருமே வாய்திறக்கவில்லை. 

இரண்டு மாதங்களுக்குப் பின் அவளது அப்பாதான் அவளது எதிர்காலம் பற்றி எடுத்துக்கூறி மீண்டுமொரு முறை பரீட்சை எழுதிப் பார்க்குமாறும் தன்னால் முடிந்த உதவி ஒத்தாசையெல்லாம் செய்வேனென்றும் அன்பாக எடுத்துரைத்தார். எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஜெஸீனா ஒத்துக்கொள்ளவில்லை. 

என்ன செய்வது அவளது விதிப்படி நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.

மாதங்கள் பல கடந்தன. ஒரு நாள் ஜெஸீனா அப்பாவை அழைத்து,

'அப்பா. நான் அரச சார்பு உயர்கல்வி நிறுவனமொன்றில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள ஒன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தேன். இப்ப நானும் தெரிவுசெய்யப்பட்டிருக்கேன். அடுத்த வாரம் நேர்முகப்பரீட்சைக்கு கொழும்பு செல்லவேண்டும். நீங்கதான் கூட்டிச்செல்லவேண்டும்.' – சுருக்கமாகக் கூறினாள். 

'என்ன பிள்ளை. திரும்பவும் ஒருக்கா பரீட்சை எடுத்து பாஸ் பண்ணிட்டா நம்மட பகுதிகளில் உள்ள யூனிவேஸிட்டி ஒன்று கிடைக்கும்தானே. இப்ப கொழும்பில போய் படிக்கவேணும் என்று சொல்லுறயே! யாரு கூட்டிக்குப் போற? யாரு கூட்டி வார? செலவும் அதிகமாகுமே பிள்ளை!'

தனது மனக்கவலையை வெளியிட்டார் ஜெஸீனாவின் அப்பா.

'அப்படி ஒண்ணும் பெரிசா செலவு வராது அப்பா. அநேகமா பாடங்கள் எல்லாம் ஒன்லைன்லதான் நடக்கும். வருஷத்துக்கு இரண்டு தடவைதான் கொழும்புக்குப் போய் பரீட்சை எழுதிட்டு வரணும். அதுவும் நம்மட ஊர் பிள்ளைகளோடு சேர்ந்துபோய் சேர்ந்தே வந்திடலாம்.' 

ஜெஸீனாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போடக்கூடாது என எண்ணிய அவளது அப்பா அவளது விருப்பப்படி நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தார். கொழும்புக்கும் அவரே கூட்டிச்சென்றார். அவளது படிப்பும் எவ்வித இடையூறுகளுமின்றி சிறப்பாகத் தொடர்ந்தது.

காலம் பறந்து சென்றது.  வருடங்கள் மூன்றாகிவிட்டன. 

தன் பெற்றோரின் விரும்பத்தைத் தட்டிக்கழிக்க முடியாமல் தனக்குப் பொருத்தமில்லாத ஒரு துறையை விருப்பமின்றி தெரிவுசெய்து மீண்டும் மீண்டும் பரீட்சைகளுக்குத் தோற்றி காலத்தை வீணடிக்கும் எத்தனையோ மாணவர் மத்தியில் ஜெஸீனா எடுத்த துணிச்சலான முடிவு அவளுக்கு வெற்றியைக் கொடுத்தது.

ஜெஸீனா எடுத்த சரியான முடிவையும் அவளுக்குக் கிடைத்த வெற்றியையும் எண்ணி எண்ணி அவளது அப்பாவும் சகோதரர்களும் உள்ளூரப் புளகாங்கிதமடைந்தனர்.

இன்று ஜெஸீனா ஒரு சமூக சேவை பட்டதாரியாக பட்டம் பெற்று தனது சமூகத்திற்கும் தனது தாய் நாட்டிற்கும் அளப்பரிய சேவை செய்யப் புறப்பட்டுவிட்டாள். 


-எஸ் ஏ கப்பார்.

27-03-2023.

(02-04-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு நன்றி.)




சிறுகதை 5 நாமொன்று நினைக்க...

 சிறுகதை.

நாமொன்று நினைக்க...

சலீம் ஹாஜியார் புதிய இடத்திற்கு வந்து நாலைந்து வருடங்களாகின்றன. இதற்கு முன் இதே இடத்தில் சமது ஹாஜியாருடைய ஒரே மகன் றமீஸ் செல்பேசி மற்றும்  உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையொன்றை நடாத்திவந்தார். வியாபாரம் அவ்வளவு பெரிதாக எதிர்பார்த்தபடி நடைபெறாததால் வருமானம் போதியளவு கிடைக்கவில்லை. அதனால் அக்கடையைக் கைவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். 

சமது ஹாஜியார் நல்ல மனிதர். பாவ புண்ணியத்திற்குப் பயந்தவர். உதவி செய்யும் மனப்பான்மையுள்ளவர். மற்றவர்களுக்குத் தான தர்மங்கள் செய்வதிலும் பின்னிற்காதவர். அறுபத்தைந்து வயதிலும் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் தானே தனியாகச் செய்துகொள்ளுமளவிற்கு திடகாத்திரமானவர். தன் மனைவியுடன் மூத்த மகளின் வீட்டில்தான் வசித்து வருகிறார். மருமகன் இரண்டொரு தெரு கடந்து சொந்தமாக ஒரு பலசரக்குக் கடை நடாத்தி வருகிறார்.  நேர்மையானவர்.

சலீம் ஹாஜியாரும் சமது ஹாஜியாரும் ஒரு வகையில் தூரத்து உறவினர்கள். ஒரு நாள் பள்ளிவாசலில் சந்தித்து இருவரும் உரையாடியபோது முதலில் சலீம் ஹாஜியார்தான் நேரடியாக விடயத்திற்கு வந்தார். 

'பூட்டிக்கிடக்கிற உங்க மகன்ட கடையிலே என்ட சில்லறைக் கடையை கொண்டுவந்து நடத்தலாமென்று நினைக்கிறேன். மாதா மாதம் வாடகையைக் கறக்டா தந்திடுவேன். நீங்க சம்மதிச்சா சரிதான்.'

'இப்ப கடை இருக்கிற இடமும் நல்ல இடம்தானே.'

உரையாடலைத் தொடர சமது ஹாஜியார் வினவினார்.

'இல்ல ஹாஜி. இப்ப அவடத்தில சனப் புழக்கம் குறைவு. வியாபாரமும் போதாது'

சலீம் ஹாஜியார் ரொம்ப கறாரான மனிதர் என்பதால் சமது ஹாஜியார் சிறிது யோசித்துவிட்டு,

'மகனிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு சொல்றேன்' என்றார்.

இரண்டொரு வாரங்களில் சமது ஹாஜியாரின் மகனிடமிருந்து அனுமதி கிடைத்ததும் சலீம் ஹாஜியார் தனது சில்லறைக் கடையை இடம்மாற்றிவிட்டார். திறப்பு விழாவும் ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சலீம் ஹாஜியார் கடை திறந்து ஓரிரு வாரங்களில் கொரனாவின் தாக்கம் உலகை ஆட்டிப்படைத்தது. நமது நாடும் அதற்கு விதிவிலக்கில்லை. ஆரம்பத்தில் சலீம் ஹாஜியார் கவலைப்பட்டாலும் நாட்கள் செல்லச் செல்ல கொரனாவின் அதிகரிப்பு அவருக்கு அதிஸ்டத்தைக் கொண்டுவந்தது. 

பொருட்களின் விலைகள் கிடுகிடுவென ஏறியதும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதும் பொருட்களைக் கூடுதலான விலைக்கு விற்பதற்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது சலீம் ஹாஜியாருக்கு. கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த நினைத்தவர், தான் விரும்பியவாறு விலைகளைக்கூட்டி தனது வியாபாரத்தை வளப்படுத்தினார். நல்ல வருமானமும் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சலீம் ஹாஜியாரை மேலும் மேலும் அதிஸ்டசாலியாக்கியது. தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தார். பொருட்களின் விலைகள் இரண்டு மூன்று மடங்குகளாக உயர்ந்த போது சலீம் ஹாஜியாரின் காட்டில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. 

இந்த அதிஸ்டம் சலீம் ஹாஜியாருக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை.

தொடர்ந்து மக்களிடையே ஏற்பட்ட மனமாற்றங்களும் தொழில் இல்லாப் பிரச்சினைகளும் சலீம் ஹாஜியாரின் வியாபாரத்தில் ஓரளவு தளர்வை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஹாஜியாரின் கடையில் பொருட்களுக்குக் கூடுதலான விலை எனவும் வேண்டுமென்றே பொருட்களைப் பதுக்கிவைத்து விற்கிறார் எனவும் மக்கள் பேசிக்கொண்டனர்.

ஒரு நாள் சமது ஹாஜியார் வழமை போல் சாமான்கள் வாங்க கடைக்கு வந்தார். 

'என்ன சலீம் ஹாஜியார், வியாபாரம் எல்லாம் நல்லா போகுதுதானே? நம்மட சாயிவுத் தம்பிட மகன் றசாக் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கான். நானும் போய் பார்த்தேன். நல்ல வசதியோடதான் வந்திருக்கான் போல தெரியுது. அவனும் அவன்ட மாமாட கடையில பெரிய சில்லறைக் கடைதான் போடப்போறானாம். இனி வெளிநாடு போய் உழைச்சது போதும் என்கிறான்.'

சமது ஹாஜியார் சொன்னதைக் கேட்டதும் சலீம் ஹாஜியாருக்கு என்னவோ போலாகிவிட்டது. நமது தொழிலுக்குப் போட்டியாக ஒருவன் முளைத்துவிட்டான் என நினைத்துக் கவலைப்பட்டவர், தொடர்ந்து

'முன்னையப் போல இப்பவெல்லாம் வியாபாரம் இல்லை ஹாஜி. நானும் நல்லா உழைச்சதான். இப்ப சனங்களுக்கிட்ட காசு இல்ல. லாபமும் மிகக் குறைவு. விட்டுட்டு வேற ஏதாவது தொழிலைச் செய்யச் சொல்லுங்க.'

'கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேணும்தானே. அவனுக்கு அமைச்சது அவனுக்கு. நமக்கு அமைச்சது நமக்கு'

பதிலளித்துவிட்டு எழுந்து தான் வாங்க வந்த பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றார், சமது ஹாஜியார்.

இரண்டு மூன்று வாரங்களில் புதிய கடை வெகு விமர்சையாகத் திறக்கப்பட்டது. சலீம் ஹாஜியாரும் திறப்பு விழாவிற்குச் சென்று வந்தார்.

மாதங்கள் பல சென்றன. சலீம் ஹாஜியாரின் கடைக்கு வாடிக்கையாளர்களின் வருகை படிப்படியாகக் குறையத்தொடங்கியது. தனது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் புதுக் கடையில் பொருட்கள் வாங்குவதைக் காணும் போதெல்லாம் வயிறு பற்றியெரிந்தது.

கவலையும் குடிகொண்டது. வருமானமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. நோயும் தொற்றிக்கொண்டது. பார்ப்பவர்களெல்லாம் சலீம் ஹாஜியாரிடம் நலம் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக சலீம் ஹாஜியாரின் கடை பூட்டிக்கிடந்ததை அவதானித்த றசாக் தனது கடைக்கு வந்தவர்களிடம் விசாரித்ததில் சலீம் ஹாஜியாருக்குச் சில நாட்களாகச் சுகமில்லை என அறிந்துகொண்டான். கடையினை அடைத்ததும் அவரது வீட்டுக்குப் போய் பார்த்துவர வேண்டுமென எண்ணிக்கொண்டான்.

இரவு ஒன்பது மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு சலீம் ஹாஜியாரின் வீட்டையடைந்து 'ஹாஜியார்... ஹாஜியார்...' என கூப்பிட்டபடி கதவைத் தட்டினான். கதவு பூட்டப்பட்டிருந்தது. மீண்டும் 'நான் றசாக் வந்திருக்கேன்' என சத்தமிட்டான். உள்ளேயிருந்து அவரது மனைவி வந்து கதவைத் திறந்து வரும் படி அழைத்ததும் அவரது மனைவியின் பின்னால் றசாக் சென்று அமர்ந்தான்.

இரண்டொரு வருடங்களுக்குள் புதிதாக கட்டிய மாடி வீடு. கீழ்பகுதி மட்டும் பூரணப்படுத்தப்பட்டிருந்தது. மேற்பகுதியின் வேலைகள் ஆரம்ப நிலையில் காணப்பட்டன. வீடு அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. 

'ஹாஜியாரைப் பார்க்கத்தான் வந்த நான்.'

அமைதியைக் கலைக்க எண்ணி ஆரம்பித்தான்.

'ரெண்டு மூணு நாளா அவங்களுக்கு நெஞ்சு நோவு. ஆஸ்பத்திரிக்குப் போங்க எண்டு சொன்னேன். பாப்பம் பாப்பம் எண்டு இருந்தாங்க. பின்னேரம் நோவு அதிகமா இருக்கெண்டு சொல்லிக் கொண்டிருந்தாங்க. அவங்கள பாக்கவந்த நம்மட சமது ஹாஜியார்தான் கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு வாட்டில வச்சிருக்காங்க. நானும் மகளும் இப்பதான் சாப்பாடு கொண்டு குடுத்திட்டு வந்திருக்கோம். நானும் மகளும் தனியே இருக்கதாலேதான் கதவைப்பூட்டி வைச்சிருக்கோம்.'

சலீம் ஹாஜியாரின் மனைவி மிக வேதனையோடு கூறினார். 

'இஞ்ச பாருங்க தம்பி. மூணு நாலு வருஷமா நல்ல வியாபாரம்தான். ஒன்றையும் செய்றதுக்கு நம்மட ஊர் உடமாட்டா. எல்லாரும் எல்லாத்தையும் செய்யனுமென்டா எப்படி? நூல் கடை போட்டா எல்லாரும் நூல் கடைதான். நகைக் கடை போட்டா எல்லாரும் நகைக் கடைதான். சில்லறைக் கடை போட்டா எல்லாரும் சில்லறைக் கடைதான். அதாலதான் ஒருவரும் ஒண்டும் செய்ய ஏலாது.'

றசாக்கிற்கு பொறியில் தட்டியது போல் இருந்தது.

'நாங்களும் எப்படியோ வீட்ட முடிச்சு மகளுக்கு ஒரு கலியாணத்த பண்ணிடலாமென்டுதான் நினைச்சோம். நாம் ஒண்ணு நினைக்க படைச்சவன் ஒண்ணு நினைக்கான்'

பெருமூச்சுடன் றசாக்கை நிமிர்ந்து பார்த்த சலீம் ஹாஜியாரின் மனைவியின் முகத்தை அவனால் ஏறிட்டுப்பார்க்க இயலவில்லை.

தான் வெளிநாடு சென்று திரும்பிவந்து ஒரு நிரந்தரத் தொழிலைச் செய்ய வேண்டுமென நினைத்தபோது தனது உறவினர்களினதும் நண்பர்களினதும் ஆலோசனைப்படிதான் றசாக் சில்லறைக் கடையொன்றை ஆரம்பித்தான். இது சலீம் ஹாஜியாரின் குடும்பத்தைப் பாதிக்குமென்று நினைக்கவில்லை. அப்படியாயின் வேறு ஒரு கடையை ஆரம்பித்திருக்கலாம் என எண்ணி வேதனைப்பட்டான். ஹாஜியாருக்கு எப்படியும் உதவ வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. நாளை வைத்தியசாலை சென்று சலீம் ஹாஜியாரைப் பார்த்து அவரது வைத்தியச் செலவுகளுக்கு உதவுவதோடு அவரது வங்குரோத்து நிலைக்குச் சென்ற வியாபாரத்தினையும் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென உறுதிகொண்டான்.

'உம்மா, இந்தாங்க ரீ ' 

மறைவிலிருந்து தேனீர் தட்டை நீட்டிய மகளிடமிருந்து தேனீரைப் பெற்று றசாக்கிடம் வழங்கினார், ஹாஜியாரின் மனைவி. 

குழம்பிப்போயிருந்த றசாக் தேனீரைப் பெற்று அருந்திவிட்டு,

'நீங்க ஒன்றுக்கும் பயப்பட வேணாம். நான் காலைல கடை திறக்கிறதுக்கு முன் ஆஸ்பத்திரி போய் ஹாஜியாரைப் பார்த்து வாரேன். வருத்தத்தைப் பற்றி கவலைப்பட வேணாம். கொழும்புக்குக் கூட்டிப்போய் செக் பண்ணுவம். கடையையும் திறக்கச் சொல்றேன். என்ன உதவி எண்டாலும் செய்றேன். நீங்களும் எங்கட வாப்பாவோட சொந்தம்தான்.'

குற்ற உணர்வோடு விடைபெற்றுக்கொண்டு வெளியேறிய றசாக் எப்படியும் நாளை வைத்தியசாலை சென்று ஹாஜியாரைப் பார்த்து அவரை தைரியப்படுத்த வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் வீட்டையடைந்தான்.

அடுத்த நாள் அதிகாலை எழுந்து ஆஸ்பத்திரிக்குச் சென்று ஹாஜியாரைப் பார்த்துவிட்டு கடையைத் திறக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் வீதிக்கு வந்தான் றசாக்.

'தம்பி, நம்மட சலீம் ஹாஜியார் ஆஸ்பத்திரியில மௌத்தாகிட்டாராமே. இன்னும் வீட்டுக்கு கொண்டு வரல்லயாம்.'  

பக்கத்து வீட்டு மாமா சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மரணச் செய்தி கேட்ட றசாக் செய்வதறியாது விக்கித்துப்போய் சிலையாக நின்றான்.

- எஸ் ஏ கப்பார்

(12-03-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு நன்றி.)


Tuesday, February 28, 2023

சிறுகதை 4 - சித்தியின் வருகை.

 சிறுகதை. 

சித்தியின் வருகை

'சித்தி... சித்தி... சித்தி... எப்ப பார்த்தாலும் சித்திதான்' சீறிப் பாய்ந்தாள் அக்கா.

'சிடுமூஞ்சி. இப்ப என்ன நடந்ததென்று ஆத்திரப்படுறாய்? சொல்ல வந்ததை என்னவென்று காது கொடுக்காமலே கோபப்பட்டால் எப்படி?' பதிலுக்கு நானும் எனது தொனியைக் கடுமையாக்கினேன்.

என் அக்கா ஒரு பட்டதாரி ஆசிரியை. ஊரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றுகிறார். பாடசாலையில் அக்காவுக்கு நல்ல பெயர். மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் அன்பாகப் பழகும் ஓர் ஆசிரியை என அறியப்பட்டவர். அவரது கணவரும் ஒரு பட்டதாரிதான். தற்போது தலைநகரில் பிரபல நிறுவனமொன்றில் நல்ல சம்பளத்துடன் கடமையாற்றிவருகிறார். ஆண் ஒன்று பெண் ஒன்று என அவர்களுக்கு இரு பிள்ளைகள். இருவரும் பாடசாலை செல்லும் சிறுவர்கள். மச்சான் இரு வாரங்களுக்கொரு முறை மனைவி மக்களை வந்து பார்த்துச் செல்வார். 

'அக்கா! நீ நினைப்பதுபோல சித்தி மோசமானவ இல்ல. ஆரம்பத்தில நானும் சித்திமேல வெறுப்பாகவும் கோபமாகவும்தான் இருந்தேன் என்பது உனக்கு நல்லா தெரியும். மாமா வந்து எல்லா விடயங்களையும் தெளிவாக விளங்கப்படுத்தி நம்மட சம்மதத்தைப் பெற்ற பிறகுதானே அப்பா நம்மைவிட்டுப் பிரிந்து போன அம்மாவின் வீட்டுக்கு சித்தியைக் கூட்டிவந்தார். சித்தி புறப்படும் வேளையாவது நீ ஒரு வார்த்தை பேசேன்' 

நான் தொடர்ந்தேன். அக்கா எதையும் காதுக்கெடுத்துக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அமைதியானேன்.

நான்கு வருடங்களுக்கு முன்...

சித்தி அம்மாவின் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அறவே பிடிக்கவில்லை என்பது உண்மைதான். சில வருடங்கள் சுகயீனமுற்றிருந்த எங்கள் அம்மா அவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என கனவிற்கூட எண்ணியதில்லை. கவலையை மறப்பதற்கு பல மாதங்களாயின. அக்காவுக்கு பக்கத்துக் காணியில் எல்லா வசதிகளும் கொண்ட தனி வீடுகட்டி சிறப்பான முறையில் திருமணத்தையும் செய்துவைத்ததில் அம்மாவின் பங்கு அளப்பரியது. நானும் திருமணம் முடித்து நன்றாகத்தான் வாழ்ந்துவருகிறேன். அம்மாவின் மரணம் சில காலம் அக்காவின் பிள்ளைகளுக்கும் அக்காவுக்கும் பெரும் இழப்பாக இருந்தது. மறுபுறம் அப்பாவின் நிலைமை பெரும்பாடாகி விட்டது. முன்புபோல தனது வியாபாரத்தில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. ஏனோ தானோவென்று தனது கடமைகளை நிறை வேற்றுவதை அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு நாட்கள் நகர்கையில் ஒரு நாள் மாமா எங்களது வீட்டிற்கு வந்தார். மாமா மீது எங்களுக்கு அபரிதமான மரியாதை. அவரது வார்;தைக்கு யாரும் மறுப்புத் தெரிவிப்பதில்லை. கதைக்கும் போது இடையில் குறுக்கறுத்து ஒருபோதும் பதிலளிப்பதுமில்லை.

'இஞ்ச பாருங்க. எனக்கும் பெரும் ஆச்சரியமாத்தான் இருக்கு. இது எப்படி சாத்தியமானது என்று எனக்கு தெரியல. நேத்து தம்பி சமீம் அவரது வீட்டுக்கு வரச்சொல்லி போன நான். தம்பி சமீம் அவர்ர பெண்டாட்டியையும் கூட்டிவந்து அம்மாவுக்கு துணையா அந்த வீட்டிலதான் இருக்கார். அம்மாவுக்கு ஒரேயொரு மகன். சமீம் தம்பிக்கு பிள்ளைகளும் இல்ல. அவரது அப்பா காலமாகியும் பல வருடங்களாகிவிட்டன.'

மாமா என்ன சொல்லவருகிறார் எனப் புரியாமல் அக்காவும் நானும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டோம்.

மாமா தொடர்ந்தார்.

'தம்பி. அவவும் உங்க அப்பாவும் ஒரே வகுப்பில படிச்சவங்களாம். படிச்ச காலத்துல நல்ல நண்பர்களாகவும் இருந்திருக்காங்க. உங்க அம்மா மரணத்திற்குப் பிறகு அவ உங்க அப்பாவோட கதைச்சிருக்கா. ஒங்க அப்பா ஆரம்பத்தில அடியோட மறுத்திருக்காரு. அப்பாவ முழுமையா கவனிக்கிறதுக்கு ஒண்ட அக்காவாலோ உன்னாலேயோ முடியா. நீயும் வேலைக்குப் போற. அவவும் வேலைக்குப் போற. அக்காவுக்கு சின்னப் பிள்ளைகளும் ரெண்டு. அப்பாவுக்கும் உடல் நிலை அவ்வளவு நல்லா இல்ல. அதனால உங்கப்பாவ அவ மறுமணம் செய்து உங்க அம்மாவின் வீட்டுக்கே வந்து இருக்கப்;போறாவாம்.'

சிறிது நேரம் தலையைச் சொறிந்துவிட்டு மாமா தொடர்ந்தார்.

'இத ஆரம்பத்தில தம்பி சமீமும் மறுத்திருக்கார். பிறகு அம்மா சொன்ன காரணங்களை நியாயமா கருதி ஒத்துக்கிட்டிருக்கார். அதனால உங்க அப்பாகிட்ட கதைக்கிறதுக்கு முன்னே உங்கட சம்மதத்தைக் கேட்கணு மென்றுதான் வந்த நான்'

முதற்தடவையாக மாமாவின் பேச்சுக்கு இடைநிடுவே குறுக்கறுத்தாள் அக்கா.

'என்ன நியாயம் மாமா இது? யாரோ ஒருவளைக் கூட்டி வந்து இவதான் இனி அம்மா என்றால் நாங்க ஏத்துக்குவோம் என்று நினைக்கிறீங்களா? அப்பா கண்ணுக்குப் பிறகு சொத்துக்களையும் அம்மாட நகைகளையும் சுருட்டிக் கொண்டு போய்விடலாம் என்று திட்டமிடுராங்க போல.  அப்பாவுக்கு நல்ல புத்தி சொல்லாம நீங்களும் துணை போகிறீங்க. சீ...'

அக்காவின் வார்த்தைகளைச் சற்றும் எதிர்பாராத மாமா நிலைகுலைந்துவிட்டார். அவரது முகம் கறுத்துப்போனது. என்னால் அவரது முகத்தைப் பார்க்கப் பெரும் சங்கடமாக இருந்தது.

'அக்கா. என்ன கதையிது. மாமா என்று ஒரு மரியாதை இல்லாமல்...'

எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று மெல்லிய குரலில் அக்காவைக் கண்டித்தேன்.

'இந்த இளவெல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி அப்பா சித்தி கித்தி என்று யாரையாவது கூட்டிவந்தா என்ர வளவுக்குள்ள ஒருவரும் வரப்போடா. என்ர பிள்ளைகளையும் பார்க்கக்கூடா.'

அக்காவின் வார்த்தைகள் அனலாகப் பறந்தன. தொடர்ந்து நானும் மாமாவும் மாறிமாறி அப்பா சார்பான நியாயங்களை எடுத்துக்கூறி வாதிட்டோம். அவள் மசியவில்லை. இறுதியில் அக்காவைச் சமாதானப்படுத்த முடியாமல் மாமாவும் நானும் அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிட்டோம்.

நான் தினமும் அம்மா வீட்டுக்குச் சென்று அப்பாவை நலம் விசாரித்து அவரது தேவைகளையும் கவனித்து வந்தேன். வெளியேறும்போது அக்காவையும் பிள்ளைகளையும் பார்த்துவருவதையும் வழக்கமாக்கிக்கொண்டேன்.

சுமார் மூன்று மாதங்களின் பின் எங்கள் வீட்டிற்கு சித்தி வரப்போவதாக மாமா மூலம் அறிந்தேன். பதிவுத் திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் தானே முன்னின்று செய்துமுடித்ததாகவும் மகன் என்ற உரிமையில் என்னால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் என்னை மாமா வினயமாக வேண்டிக்கொண்டார்.

காலம் மிக வேகமாக கடந்து சென்றது. சித்தி அம்மா வீட்டுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு வருடங்களில் ஒரு நாளாவது அக்காவின் வீட்டுப் படிக்கட்டில் கூட சித்தி காலடி எடுத்து வைக்கவில்லை. அக்கா சித்தியை ஒருபோதும் அப்பாவின் மனைவியாக ஏற்றுக்கொள்ளவுமில்லை. மதிக்கவுமில்லை. ஆனால் அக்காவின் பிள்ளைகள் சித்தியைப் பார்ப்பதையும் சித்தி அக்காவின் பிள்ளைகளுக்கு ஏதாவது உணவுப் பண்டங்கள் கொடுப்பதையும் அக்கா தடைசெய்யவில்லை. 

திடீரென ஒரு நாள் அப்பா மயக்கமுற்று கீழே விழுந்து மூர்ச்சையாகிவிட்டார். அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். சிகிச்சை பலனளிக்கவில்லை. அப்பா சித்தியையும் எங்களையும் விட்டுப் பிரிந்துவிட்டார். இறுதிக் கடமைகளைச் சிறப்பாக செய்துமுடித்தோம்.

அப்பா மரணித்து ஏழு நாட்களின் பின் சித்தி என்னை அழைத்தார். மாமா என்னிடம் ஏற்கனவே கூறிய விடயமாகத்தான் இருக்கும் என்பதால் என்னை நானே தைரியப்படுத்திக்கொண்டேன்.

'மகன், அப்பா மரணித்து ஏழு நாட்களாகிவிட்டன. அவருக்கு நான் செய்யவேண்டிய மார்க்கக் கடமைகள் பல உள்ளன. நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்ததில்லை. நல்ல நண்பர்களாகத்தான் வாழ்ந்தோம். இருந்தபோதும் ஊர் உலகத்துக்கு கட்டுப்படவேண்டியது நமது கடமை இல்லையா?'

'நானும் உங்கப்பாவும் ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்கள்தான். படிக்கும் காலத்திலேயே அவர் நல்ல கவிதைகளையும் கதைகளையும் எழுதுவார். மாணவ மன்றங்களிலெல்லாம் கவிதை பாடுவார். நான் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி ஆரவாரப்படுவேன். சக மாணவர்கள் என்னையும் அப்பாவையும் காதலர்களாகக் கற்பனை பண்ணியதுண்டு. ஒரு முறை உங்கப்பா பத்திரிகைக்கு அனுப்பிய சிறுகதை ஒன்று முதற்பரிசு பெற்றது. அது அவ்வார இதழில் வெளிவந்தது. வகுப்பு மாணவர்கள் ஒன்றுசேர்ந்து ஆழுக்கொரு பிரதி வாங்கி வீட்டுக்கு கொண்டுவந்து படித்தோம்.' 

'மறுநாள் எங்களது வகுப்பு மாணவத் தலைவன் எழுந்து உங்கப்பாவைப் பாராட்டி மாலை அணிவித்தான். யாரும் எதிர்பாராதவாறு, 'இந்தக் கதையில் வருவதுபோல் கதாநாயகனின் மனைவி இறந்தால் வகுப்பு மாணவி யாராவது அவரை மறுமணம்  செய்துகொள்வீர்களா?' என வேடிக்கையாகக் கேட்டு கை உயர்த்தச் சொன்னான். யாருமே முன்வரவில்லை, என்னைத் தவிர. அன்று விளையாட்டாகச் செய்தது. இன்று உண்மையாகிவிட்டது.'

சித்தியின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்தேன். சித்தி தொடர்ந்தார்.

'உங்க அம்மா மரணித்து சில நாட்களின் பின் உங்கப்பாவை வைத்தியசாலையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாவின் மரணம் பற்றி விசாரித்து ஆறுதல் கூறினேன். மிகவும் கவலையுடன் காணப்பட்டார். தனக்குள்ள நோய்கள் பற்றி வேதனைப்பட்டார். நோயின் தாக்கம் அதிகரிக்கும் காலத்தில் தன்னைக் கவனிக்க மனைவி இல்லையே என ஆதங்கப்பட்டார். பிள்ளைகளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் தானும் மரணித்துவிட வேண்டுமெனக் கூறினார். அதனால் என்ன இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்களேன் என்று கூறினேன். வசதி வாய்ப்புகள் இருக்கும்போது மார்க்கமும் அதனை அனுமதிக்கிறதுதானே என்றேன். அவர் மறுத்துவிட்டார்.'

சித்தி இடைநிறுத்தி ஒரு பெருமூச்செறிந்தார். அதன் பின் நடந்தவற்றை என்னிடம் கூற சங்கடப்படுகிறார் என உணர்ந்த நான் சித்தியிடம் மேலும் எதுவும் கேட்கவில்லை.

சித்திதான் தொடர்ந்தார்.

'மகன் நான் இன்றிரவு என் வீட்டுக்குப் போறன். அப்பா போன பிறகு எனக்கு இங்கு என்ன வேலை. நீங்க உங்கப்பாவையும் என்னையும் நல்லா பாத்துக்கிட்டீங்க. நீங்க நல்லா இருப்பீங்க. அக்காதான் உங்கப்பாவின் நிலைமையையும் என்னையும் புரிஞ்சுக்கல்ல. அக்காவையும் பிள்ளைகளையும் கூட்டிக்கு வாங்க. நான் அவக்கும் சித்திதான்.'

சித்தி என்னை அணைத்து உச்சி முகர்ந்தார். நான் திகைத்துப்போய் அமைதியாக நின்றேன். 

இருள் கவ்வத் தொடங்கி வெகு நேரமாகிவிட்டது. சித்தி உள்ளே சென்று அவரது உடுப்புகள் கொண்ட கைக்கடக்கமான ஒரு பையை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து எனது காரின் பின் பக்கம் வைக்கச் சொன்னார். ஏதோ நினைத்தவராக வெளியே வந்து அக்காவின் வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வைத்தவர் தொடர முடியாமல் பின்வாங்கிவிட்டார்.

'மகன் வாங்க, போவோம்.'

சித்தியின் பையினை எடுத்துக்கொண்டு எனது வாகனத்தை நோக்கி நடந்தேன். காரின் பின் கதவைத் திறக்க முற்பட்டபோது கண்களில் முட்டியிருந்த கண்ணீர் தடுத்தது. அதற்குள் சித்தி திறந்து கொண்டு உள்ளே அமர்ந்துவிட்டார்.

காரின் முன்பக்கமாக நடந்து சென்று முன் கதவைத் திறந்து, இருக்கையில் அமர்ந்து வாகனத்தை இயக்க முற்பட்டபோது செல்பேசி அலறியது.

'சித்தியின் வருகைக்காக அவரது மகனும் மருமகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்'- முணுமுணுத்தவாறு வாகனத்தை நகர்த்தினேன்.

- எஸ். ஏ. கப்பார்.

26-02-2023.

(26-02-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)














Wednesday, February 15, 2023

சிறுகதை 3 - தாய் வீடு.

 சிறுகதை.

தாய் வீடு.

இன்று மூன்றாவது நாள்.

என்னோடு கோபித்துக் கொண்டு அவளது தாய் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அடுத்த நாளோ அல்லது இரண்டாவது நாளோ வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை மூன்று நாட்களாகியும் வரவில்லை. எனக்கு என்னவோ போலிருந்தது. ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. பிரிவை நினைக்கும் போது நெஞ்சு பாரமாக இருந்தது. அப்படி எங்களுக்குள் சண்டை என்று பெரிதாக ஒன்றுமில்லை. பரஸ்பர புரிந்துணர்வு போதாது, அவ்வளவுதான். இத்தனைக்கும் நாங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நான் ஒரு முன்கோபி. எதையும் எடுத்தெறிந்து பேசும் சுபாவம். அதுவும் உண்மைதான். மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்றோ அல்லது அவமானப்படுத்த வேண்டும் என்றோ நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தவறுகளும் அநியாயங்களும் எங்கு நடந்தாலும் அங்கு என் குரல் ஒலிக்கும். அதை சிலர் பிழையாக விளங்கிக்கொண்டு என்னை விமர்சிப்பார்கள். அதை நான் ஒரு பொருட்டாக கொள்வதுமில்லை. 

என் மனைவிகூட என்னை ஒரு பிடிவாதக்காரன் என்றும் எதையும் ஒத்துக்கொள்வதில்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். எடுத்ததற்கெல்லாம் கோபித்துக் கொண்டு அவ்வளவு தாய் வீடு செல்வது வழக்கமாகிவிட்டது. எனக்கு அவமானத்தையும் பக்கத்து வீட்டாரிடையே ஒருவகை தன்மானப் பிரச்சினையையும் தோற்றுவித்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. இதன் எதிர்விளைவுகளை எண்ணிப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இலேசாக வியர்க்கத் தொடங்கும்.

நாளை ஹஜ்ஜுப் பெருநாள். இருவர் மனதிலும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குடிகொண்டிருந்ததை இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு நாளைய பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாக இருந்தோம். பலகாரங்களையும் உணவுப் பொருட்களையும் தயாரிப்பதில் அவள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு ஒத்தாசைகள் செய்து கொண்டிருந்தேன். திடீரென ஏதோ நினைவு வந்தவளாக உள்ளே சென்றாள். அலுமாரி திறக்கும் சத்தம் எனக்கு கேட்டது. நேற்று அவளுக்காக வாங்கி வந்த அழகிய விலையுயர்ந்த செருப்புச் சோடியை எடுத்து வந்தாள். 

'என்ன? நல்லதென்று திரும்பத் திரும்ப பார்க்கிறாயா?' என்றேன். 

'இல்ல! நல்ல அழகாத்தான் இருக்கு. விலைதான் மிச்சம் அதிகம் என்றாள். 

'இப்ப என்னதான் விலையில்ல. எல்லாம் ஆனை விலதான்' என்றேன். 

நான் கூறியதை அவள் கவனிக்கவில்லை என்பது எனக்கு நன்கு புரிந்தது. ஏதோ ஒன்றை அவள் கூர்ந்து அவதானிப்பதும் தெரிந்தது. எனக்கு லேசாகப் பயம் பரவத்தொடங்கியது. நாளை பெருநாள். விபரீதமாக ஏதும் நடந்துவிடக் கூடாதென இறைவனை வேண்டிக்கொண்டேன். 

'இஞ்ச பாருங்க, இந்தப் பட்டியை. பிஞ்சு போய் திரும்ப ஒட்டி இருக்கான் போல.' 

அவளது குரல் கேட்டு எனக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு விட்டது. புதுச் செருப்பைப் போய் யாராவது ஒட்டி இருப்பானா? - எனது கேள்வி எடுபடவில்லை. கடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்து வேறொன்று மாற்றிவரச் சொன்னாள். நான் மறுத்தேன். முடிவு அவள் தாய் வீடு சென்றுவிட்டாள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பெருநாளைக்கு அவள் தாய்வீடு சென்றுவிட்டாள் என்றும் இன்றிரவே வீடு வந்துவிடுவாள் என்றும் பொய் சொன்னேன். அது பொய்யல்ல, மெய்யென நிரூபிக்க அவள் அன்றிரவே வந்துவிட்டாள்.

இன்னொரு நாள் அவளது நண்பியின் திருமணம். வேலைக்குப் போவதற்குமுன் பத்துத் தடவையாவது சொல்லி இருப்பாள். 

'பாருங்க, என் உயிர் நண்பியின் திருமணம். நான் கட்டாயம் நாலு மணிக்கெல்லாம் அங்கு இருக்கவேணும். ஏதும் பிரச்சினை என்றால் சொல்லிடுங்க. லீவு போட்டுவிட்டு இருந்திடலாம் என்றாள். 

'இல்லை ஜெஷி, நான் இண்டைக்கு கட்டாயம் வேலைக்குப் போகவேண்டும். எப்படியாவது நாலு மணிக்குள்ளே வந்திடுவேன்' என்றேன். 

'இஞ்சபாருங்க, நாமளும் நாலு கல்யாண வீடு, சாவீடென்று போனாத்தான் நம்மட சாவு வாழ்வுக்கும் நாலுபேர் வருவாங்க. வேலை வேலை என்று திரிந்தால் நம்மள ஊர் ஒதுக்கிடும்.' அவளது புத்திமதி எனக்கு உறைத்தது.

அன்று வழக்கத்திற்கு மாறாக நேரத்தோடு வெளிக்கிட்டு வேலைக்குப் புறப்பட்டேன். ஆனால் அவளுக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் ஐந்து மணிக்கு வந்து நின்று விழிபிதுங்கினேன்.  அவள் ஒன்றுமே கூறாமல் திருமண வீட்டுக்குப்போக ஆயத்தமாக நின்றது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இருவரும் திருமண வீடுசென்று மணமக்களை வாழ்த்திவிட்டு இரவு எட்டு மணியளவில் வீடு வந்தடைந்தோம். எனக்குக் கை கால்கள் எல்லாம் வலித்தன. விழுந்து படுத்தால் சுகமாக இருக்கும் போலிருந்தது. அப்படியே முன்ஹாலில் கிடந்த சோபாவில் மெதுவாகச் சாய்ந்தேன். நித்திரை என்னை ஆட்கொண்டுவிட்டது. விழித்துப் பார்த்தபோது மணி பத்தரை ஆகிவிட்டது. கண்களைக் கசக்கி கைகளை உயர்த்தியபோது தொலைபேசி அலறியது. ரிஸீவரைத் தூக்கினேன். 

'என்ன மச்சான் எப்ப பார்த்தாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அக்கா சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு வருவதும் போவதுமாக. நாலு அறை அறைந்து அடக்கி வைக்கத் தெரியாதா உங்களுக்கு? உம்மா அழுது கொண்டே இருக்கா. வாப்பா ஆத்திரத்தில் கத்திக்கொண்டிருக்கிறார்.' 

அவளது தங்கையின் குரல் கேட்டு எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ரிஸீவரைக் கீழேவைத்துவிட்டு அவள் வருகைக்காக வாசலில் காத்துநின்றேன்.

மூன்று நாட்கள் தனிமையில் எவ்வாறு காத்துக்கிடந்தேன் என எனக்கே புரியவில்லை. மனதுக்கு மிகப் பாரமாக இருந்தது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளாமல் தவிப்பதும் தாங்களாகவே பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு பரிதவிப்பதும் எனக்கு மட்டுமல்ல, அவளுக்கும் நன்கு புரியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ இன்னும் பழகிக்கொள்ள முடியவில்லையே என எண்ணும்போது கவலையாகவே இருந்தது. அதற்கான வாய்ப்புக்கூட ஏற்படவில்லை, ஒரு குழந்தை வடிவிலாவது. என்னதான் இருந்தாலும் அவள் என் ஜெஷp. அவளை எப்படியாவது சமாதானப்படுத்தி அழைத்துவர நினைத்து எழுந்த என்னை முச்சக்கர வண்டிச் சத்தம் வேகமாக நிமிர்ந்துபார்க்க வைத்தது. அவள் திரும்பி வந்துவிட்டாள்.

எழுந்த நான் அப்படியே நின்றேன். உள்ளே வந்தவள் என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மின்விளக்குகளையும் மின்விசிறியையும் உயிர்ப்பித்தாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது வீடும் நானும் உறங்கிக்கிடந்தது. மின்விசிறியின் அரட்டலில் விழித்துக்கொண்ட அவ்வார இதழொன்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது. அதைக் கையிலெடுத்து மீண்டும் சோபாவில் சாய்ந்தேன், இன்னும் சில நாட்களுக்கு என் ஜெஷp என்னைத் தவிக்கவிட்டு தாய்வீடு செல்லமாட்டாள் என்ற நம்பிக்கையுடன்.

- எஸ். ஏ. கப்பார்.

(22-01-2023 ஞாயிற்றுக்கிழமை தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)

சிறுகதை 2 - அப்பாவின் டயரி.

சிறுகதை.

அப்பாவின் டயரி.

என் அப்பாவின் டயரியைத் தொட்டுப் பார்க்கும் துணிவுகூட யாருக்கும் கிடையாது. வீட்டிலுள்ள அவரது அலுவலக அறையினை அணுகுவதற்குக்கூடப் பயப்படுவோம். வீட்டில் அவருக்கென்று ஒரு பிரேத்தியேக அறை உண்டு. அதனை ஷஅப்பாவின் அலுவலக அறை| என்றுதான் கூறுவோம். உள்ளே ஒரு சிறிய நூலகமும் அவரது தனிப்பட்ட ஆவணங்கள் கொண்ட சிறிய அலுமாரி ஒன்றும் மடிக்கணினி, அச்சிடும் கருவி, இணைய இணைப்புடனான தொலைபேசி என்பன மேசைமீதும் காணப்படும். நாங்கள் காரணமின்றி உள்ளே செல்வது கிடையாது. அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டும் உள்ளே சென்று ஏதாவது அச்சிட்டுக்கொண்டு சென்றதை சில தடவைகள் கண்டதுண்டு.

என் அப்பா, எமது நாட்டில் கணனி அறிமுகமான காலப்பகுதியிலேயே கணினிக் கல்வியை நன்கு கற்று டிப்ளோமா பட்டமும் பெற்றவர். அது சம்பந்தமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். அத்தோடு இடைக்கிடை பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதுமுண்டு. அவர் ஒரு நல்ல வாசகர். எனக்கோ கலை, இலக்கியம், கணினி சம்பந்தமான விடயங்கள் வெகு தூரம்.

வெகு நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் என் அப்பாவின் அலுவலக அறைக்குள் சென்றேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சிறியதோர் இடத்தில் அந்த அறை அழகாகக் காட்சியளித்தது. புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட குறிப்புகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன. மடிக்கணினி மற்றும் அச்சிடும் கருவி என்பன அளவான துணிகள் கொண்டு மூடப்பட்டிருந்தன. வௌ;வேறு அளவுகளைக் கொண்ட அச்சிடும் தாள்கள் நேர்த்தியாக பொதியிடப்பட்டதுபோல் காணப்பட்டன. எழுதுகருவிகள் வைக்கப்பட்டிருந்த அழகு தனியழகு.

அலுமாரியின் பக்கம் என் கவனம் திரும்பியபோது அதன் கதவு பூட்டப்படாமல் திறந்து கிடப்பதை உணரமுடிந்தது. மெதுவாக திறந்ததும் கண்ணில் எளிதாகத் தெரியக்கூடியவாறு ஷஅப்பாவின் டயரி| உள்ளே காணப்பட்டது. அதனை எடுத்துக்கொண்டு அலுமாரிக் கதவைச் சாத்திவிட்டு பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டு டயரியைப் புரட்ட ஆரம்பித்தேன். டயரியைப் புரட்டியதும் என் அப்பாவின் கைகள் என்னைத் தொட்டு வருடியது போல் ஓர் உணர்வு ஏற்பட்டு சிறிது தடுமாறினேன். வெளியே நீட்டிக்கொண்டு சிறிய அடையாளத்தாள் ஒன்று டயரியின் நடுவே காணப்பட்டது. அந்தப் பக்கத்தை முதலில் புரட்டினேன். 

'என் இனியவளுக்கு இன்று இறுதிநாள்' என சிவப்பு நிற மையால் எழுப்பட்டிருந்தது. எழுத்துகள் நீரில் நனைந்ததுபோல் கலங்கியிருந்தன. என் அப்பாவின் கண்ணீராக இருக்குமோ என நினைத்தபோது என் நெஞ்சு படபடத்தது. சுவாசம் தடைப்படுவதுபோல் இருந்தது. கண்கள் பனித்தன. சுதாகரித்துக்கொண்டு ஏனைய பக்கங்களைப் புரட்டலானேன். ஐந்தாறு நாட்கள் வெறுமையாக் கிடந்தன. எதுவுமே எழுப்படவில்லை.

'இன்று வெள்ளிக்கிழமை. இன்றுதான் முதன்முதலாக என் இனியவளின் அறையைத் திறந்து உள்ளே சென்றேன். வெப்பமோ குளிரோ இல்லாத ஒருவகை வெதுவெதுப்புக் காணப்பட்டது. அவளது சுவாசத்தின் வாசனை என்னைத் திக்குமுக்காட வைத்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் வெளியே வந்துவிட்டேன். கவலைகளை கண்ணீர் மூலம் வெளியேற்ற எண்ணி தோல்விகண்டேன்.' இவ்வாறு அந்தப்பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டொரு பக்கங்கள் வெறுமையாகக் காணப்பட்டன. 

'இன்று திங்கட்கிழமை. நான் அவளுடன் உரையாடினேன். எங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி வெகுவான அக்கறையோடு நல்ல பல கருத்துகளைக் கூறினாள். மூத்த மகள் பிறந்தபோது நாட்டில் ஏற்பட்டிருந்த இன முறுகல் காரணமாக வைத்தியசாலைக்குச் செல்லமுடியாமல் வைத்தியரான அவளது சகோதரனின் துணையோடு வீட்டிலேயே பிரசவம் பார்த்து எந்தவொரு ஆபத்துமில்லாது இருவரையும் காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூறி பரவசப்பட்டாள். அடிக்கடி படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்று கூறினாள். ஷஷம்|| என்று தலையாட்டிக்கொண்டேன்'. 

தொடர்ந்து வந்த தினங்களில் எனக்குத் தெரியாத பல விடயங்களும் எழுதப்பட்டிருந்தன. எனக்கு வாசிக்க வாசிக்க ஒரு வகை பயம் குடிகொள்ளத் தொடங்கியது. அப்பா ஏதோ கவலையில் அடிமனதில் பதிந்திருந்த எண்ணங்களைப் பிதற்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றியது. இருந்தும் எனக்குள் ஏற்பட்ட பயம் அதிகரித்துக்கொண்டு செல்லவே தொடர்ந்தும் படிக்கலானேன். சுமார் ஒரு மாத இடைவெளியில் இடைக்கிடை என்னவெல்லாமோ எழுதப்பட்டிருந்தன. அம்மாவின் இழப்பு என் அப்பாவின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உணரமுடிந்தது. நடந்து முடிந்த ஒவ்வொரு நிகழ்வினையும் மீட்டிப் பார்க்கப் பார்க்க எனக்கே பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. கதிரைமீது நன்றாகச் சாய்ந்து கொண்டு  கால்களை நீட்டி டயரியை என் நெஞ்சில் சுமந்துகொண்டேன். நெஞ்சும் பாரமாக இருந்தது. உடல் அனலாகக் கொதிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

'இன்று என் அன்பு மனைவி என்னைவிட்டுப் பிரிந்து நாற்பதாவது நாள். நேற்றிரவு அவளைச் சந்தித்துப் பேசினேன். எவ்வளவோ கூறியும் அவள் கேட்கவில்லை. பிள்ளைகளையும் ஏனைய விடயங்களையும் படைத்தவன் பார்த்துக்கொள்வான். என்னோடு வந்துவிடுங்கள். என்னால் தனிமையில் வாழமுடியாது. சொல்வதைக் கேளுங்கள் என்றாள். நானும் நாளை காலை உன்னோடு வாழ்வதற்கு வந்துவிடுவேன் என உறுதியளித்தேன்.' 

இரண்டு மூன்று பக்கங்களின் பின் எழுப்பட்டிருந்த அப்பாவின் வரிகளைப் படித்ததும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அப்பா சித்தப்பிரமை பிடித்ததுபோல் இருந்த நாட்களிலாவது இந்த டயரியைப் பார்த்திருக்கூடாதா என எண்ணி பெரும் வேதனைப்பட்டேன். அப்பாவை நாங்கள் பார்த்ததெல்லாம் ஒரு கோபக்காரராகவும் பிடிவாதக்காரராகவும் காரசாரமான ஒரு மனிதராகவுமே. இவ்வளவு தூரம் எங்கள் அம்மாவோடு அன்பாக உயிருக்குயிராக வாழ்ந்தவர் என்று தெரியாமல் போய்விட்டது. கண்கள் கண்ணீரைச் சொரிய ஆரம்பித்தன. ஏதோ தவறுசெய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது. நாங்கள் அக்கறையற்றவர்கள் என்ற எண்ணம் மேலோங்க குறிப்பு எழுதப்பட்ட அன்றைய தினத்தினை நோக்கினேன். நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. உடல் தளர்வடையத் தொடங்கியது. கை கால்கள் உதற ஆரம்பித்தன.

'இன்று அன்புக்கும் பாசத்திற்கும் உரிய அப்பா எங்களை விட்டுப் பிரிந்த நாள் - இப்படிக்கு, மூத்த மகன்' என கை விரல்கள் நடுங்க நடுங்க சிவப்பு மையால் அப்பாவின் வரிகளைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். என் வரிகளும் கண்ணீரில் கரைந்து கலங்கத் தொடங்கின...

- எஸ். ஏ. கப்பார்.

(08-01-2023 ஞாயிறு தமிழன் - வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)



சிறுகதை 1 : துரோகம்

சிறுகதை.

துரோகம்.

பொலிஸ் நிலையத்தை நெருங்க நெருங்க...

என் மனம் பதைபதைத்தது. பாசம் பரிதவித்தது. அதேவேளை நாட்டுப் பற்று மறுதலித்தது.  உடல் கனலாகக் கொதித்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன... குளமாகின... கால்கள் நடக்க மறுத்தன... 

நான் ஓர் ஆசிரியை. எனது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். எங்களுக்கு ஒரேயொரு பெண்பிள்ளை. படிப்பில் மட்டுமல்ல, பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு அவளது திறமையை வெளிக்காட்டிய கெட்டிக்காரி. நான் கற்பித்தது பெண்கள் பாடசாலை. ஆகையால், அப்பாடசாலையிலேயே என் மகளையும் சேர்ப்பித்தேன். எங்கள் இருவரையும் என் கணவர்தான் காலையில் பாடசாலைக்குக் கூட்டிச்சென்று விட்டு விட்டு வேலைக்குச் செல்வார். பாடசாலை முடிந்ததும் முச்சக்கரவண்டியொன்றில் வீடு வந்து சேர்வோம்.

இருவரது வருமானமும் எங்களது சின்னஞ்சிறு குடும்பத்தை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும்  வாழ வழிவகுத்தது. மகளின் எதிர்காலம் ஒளி மயமானதாக இருக்கவேண்டும் என்பதில் இருவரும் மிகக் கவனமாக இருந்தோம். க. பொ. த. (சாஃத) பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று எங்களது பாடசாலைக்கும் எங்களுக்கும் பெருமை சேர்த்தாள். அதே பாடசாலையில் உயர்தர வகுப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. உயர்தர வகுப்புப் பாடங்கள் ஆரம்பமாகி ஓரிரு வாரங்களில் முழு உலகையும் ஆட்டிப்படைத்த கொரோனா எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. அடிக்கடி பாடசாலைகள் மூடப்படுவதும் நாட்டின் வௌ;வேறு பகுதிகள் இடைக்கிடை 'லொக் டவுன்' செய்யப்படுவதும் ஊரடங்குகள் அமுலாக்கப்படுவதும் எங்களது குடும்பத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்தன. 

இதன் விளைவாக எனது கணவர் ஒழுங்காகத் தொழிலுக்குச் செல்வதில் உண்டான தடங்கல்கள் அவரது வருமானத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  வேலைக்குச் செல்லாமல் பல நாட்கள் வீட்டில் தனியாக தங்கியிருந்தார். அவர் வேலை செய்த நிறுவனமும் தொழிலைக் கொண்டு நடத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. அவரது சொந்தச் செலவுகளுக்கே என்னிடம் பணம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவருக்கொரு தன்மானப் பிரச்சினையை ஏற்படுத்தி அவரது மனோநிலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் எங்கள் குடும்பத்தில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நாளாந்தம் கிடுகிடுவென்று ஏறிச்சென்றது. எனது மாதச் சம்பளம் இரு வாரங்களுக்கே போதுமானதாக இருந்தது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் விழிபிதுங்கி நின்றோம்.

வேறுவழியின்றி கணவரிடம் நாசூக்காகப் பேசி அவரை ஒரு தொழிலைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றேன். அவரும் பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு நல்ல இடத்தில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறினார். நல்ல சம்பளம் என்றும் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது. 

மாதங்கள் பல கடந்தன. நாட்டின் நிலைமைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தன. நாட்டு மக்கள் வழமைபோல் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். திருமண நிகழ்வுகளும் உல்லாசப் பயணங்களும் சமய நிகழ்வுகளும் களைகட்டத்தொடங்கின. பாடசாலைகளும் ஒழுங்காக நடைபெற்றன. 

இப்போதெல்லாம், கணவரின் தொழில் வேலைப் பழு காரணமாக, அவர் வீட்டில் தங்குவது மிகவும்  குறைந்தது. எங்களைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வதுமில்லை. வீட்டு வேலைகளிலும் பங்குகொள்வதில்லை. எங்கள் மீதுள்ள அக்கறை படிப்படியாகக் குறைந்து வருவதை உணரக்கூடியதாக இருந்தது. நாங்களும் பொறுமையாக இருந்து நாட்களைக் கடத்தி வந்த வேளையில், என்  உறவினர் ஒருவர் மூலம் கிடைத்த ஒரு தகவல் என்னையும் என் மகளையும் கதிகலங்க வைத்தது. 

ஒரு நாசகாரக் கும்பலுடன் சேர்ந்து போதை தரக்கூடியதும் பாடசாலை  மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடக் கூடியதுமான  ஒரு வகை போதை மாத்திரைகளை என் கணவர் விநியோகம் செய்கின்றார் என்ற தகவல்தான் அது. என் கணவர் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக ஆரம்பத்தில் இத்தகவலை எனது மனம் நம்ப மறுத்தது. பின்னர் படிப்படியாக அவரது நடவடிக்கைகள் அவரது தேசவிரோதச் செயலை உறுதிப்படுத்தின. இது எமது எதிர்கால மாணவ சமூகத்திற்குச் செய்யும் பாரதூரமான துரோகம் எனச் சுட்டிக்காட்டி இச் செயலை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். அழுதேன். அவரோ இணங்கவில்லை. என்னைத் துன்புறத்திக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினார். 

இறுதியாக, இந் நாட்டின் எதிர்காலச் செல்வங்களான  மாணவ சமூகத்தின் விடிவுக்காக எனது மனதைக் கல்லாக்கிக்கொண்டு எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் இன்றி எனது கணவரின் தேசவிரோதச் செயலை நாட்டுக்குப் பறைசாற்றி தண்டனை வழங்கக் கோரி பொலிஸ் நிலையத்தை நோக்கி நடக்கலானேன்.

பொலிஸ் நிலையத்தை நெருங்க நெருங்க...

- எஸ். ஏ. கப்பார்.

(18-12-2022 ஞாயிறு தமிழன் - வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)