Friday, December 1, 2023

சிறுகதை 9 - ஒரு துரோகியின் மனைவி

 சிறுகதை.

ஒரு துரோகியின் மனைவி

உயர்தர வகுப்பில் படிக்கும் காலங்களில் ஜெஸினா தன் பெற்றோரின் அன்பிலும் அரவணைப்பிலும் தன் இரு தம்பிகளுடன் கட்டுப்பாட்டோடு வாழ்ந்தவள்தான். உயர்தரப் பரீட்சை முடிவடைந்து பரீட்சை முடிவுகள் வரும்வரை ஆங்கிலக் கல்வியையும் கணினிக் கல்வியையும் தனியார் கல்வி நிலையமொன்றில் கற்க வேண்டுமென எண்ணினாள். அதனால் பெற்றோரின் அனுமதியுடன் தன் இரு தோழிகள் சகிதம் தனியார் கல்வி நிலையமொன்றில் சேர்ந்து படிக்கத் தொடங்கினாள்.

ஜெஸினாவின் அம்மா ஓர் ஆசிரியை. அப்பா தனியார் மருந்தகம் ஒன்றில் தொழில் புரிபவர். ஜெஸினா பெண் பிள்ளை. பெற்றோருக்கு மூத்தவள். ஜெஸினாவுக்கு இரு தம்பிகள். இருவரும் பாடசாலை மாணவர்கள். மூவரும் பெற்றோரின் கண்காணிப்பில் மிகவும் கண்ணியமாக வளர்க்கப்பட்டவர்கள்.

ஜெஸினா தனியார் வகுப்பில் சேர்ந்த பிறகுதான் அவளது வாழ்வில் விதி விளையாடத் தொடங்கியது. அதே தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்துக்கொண்டிருந்த நிகால் என்ற ஆங்கில ஆசிரியருடன் காதல் மலர ஆரம்பித்தது. பல மாதங்கள் கடந்த பின்புதான் அவளது காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்தது. எவ்வளவோ புத்திமதிகள் கூறியும் ஜெஸினா ஏற்றுக் கொள்ளவில்லை. நிகால் ஆசிரியரையே திருமணம் முடிக்கப்போவதாக ஒற்றைக்காலில் நின்றாள்.

''மகள். இப்ப உங்களுக்கு திருமணத்திற்கு என்ன அவசரம். தொடர்ந்து படித்து பல்கலைக்கழகம் சென்று ஒரு தொழிலைப் பெற்ற பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்தானே?'' 

- அப்பா பக்குவமாக எடுத்துக் கூறியும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது.

'ஜெஸினா, நான் சொல்வதைக் கேளு பிள்ளை. வீணாக உன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளாதே! இப்பதான் உனக்கு 18 வயது. நீ படிக்க வேண்டிய காலம். கல்யாணம் அது இது என்று உன் எதிர்காலத்தைப் பாழாக்கிடாதே.'

- அம்மா அழத் தொடங்கினாள். 

அனைத்தும் ஜெஸினாவுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கானது. இறுதியில் வேறு வழிகளின்றி ஜெஸினாவின் திருமணம் நடந்தேறியது. சுமார் பதினெட்டு மாதங்கள் திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகச் சென்றது. அழகிய பெண் குழந்தையொன்றும் கிடைத்தது. ஜெஸினா பூரித்துப் போனாள்.

இவ்வாறு தன் குழந்தையுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்த ஜெஸினாவின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் அஸ்தமித்துப்போய்விடும் என அவள் கனவிலும் நினைத்ததில்லை.

ஒரு நாள் காலை ஜெஸினாவின் அறையிலிருந்து பலத்த சத்தத்துடன் அழுகுரல் கேட்டது.

கணவன் - மனைவிக்கிடையில் ஆயிரம் பிரச்சினை இருக்கும். நாம் தலையிடக்கூடாது என்றெண்ணி ஜெஸினாவின் பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்தனர். 

இரண்டு நாட்களின் பின் ஜெஸினா தன் அம்மாவை அழைத்து,

''அம்மா, அவர்ர நடவடிக்கை எல்லாம் எனக்கு கஸ்டமாயிருக்கு அம்மா. உங்கட சொல்லைக்கேட்டு நான் தொடர்ந்து படிச்சிருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்க மாட்டா. அவருக்கு கிடைக்கும் சம்பளம் போதாதாம். அதனால அவர் தனியாக ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்போறாராம். அதற்கு அதிக பணம் தேவையாம். அதனால நம்மட காணியில வீடு இருக்கிற பகுதி போக மிச்சத்தை வித்து காசு தரட்டாம் என்று என்னை சித்திரவதைப்படுத்துறார்'' என்று கூறி ஓவென அழத் தொடங்கினாள்.

ஜெஸினாவின் அம்மாவுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது போலாகிவிட்டது. ஜெஸினாவின் அப்பா வந்ததும் இதுபற்றி கதைத்து ஒரு முடிவு எடுக்கவேண்டுமென நினைத்து அமைதியாக இருந்தாள். 

கணவன் வீடு வந்ததும் ஜெஸினாவின் அம்மா நடந்தவற்றையெல்லாம் தன் கணவனிடம் கூறி அவரது முடிவை ஆவலோடு எதிர்பார்த்தாள்.

''என்ன செய்வது. அவள் தேடிய தேட்டம். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போனதால் வந்த விளைவு. அவளுக்குச் சேரவேண்டியதை அவளுக்குக் கொடுக்கத்தான் வேணும். இரண்டு குடும்பம் தாராளமாக இருக்கக்கூடிய பெரிய வீடுதான் நம்மட வீடு. ஒரேயொரு பெண் பிள்ளை. நம்மட கண்ணுக்குப் பிறகு அவளுக்குத்தானே எல்லாம். ஆனா காணியில் அரைவாசியை விற்கிறதென்பது எனக்குப் பொருத்தமா படல. இது அவள்ள வாழ்க்கை பிரச்சினை. அதனால மாம்பிளைக்கிட்ட கதைத்துப் பார்ப்போம்.' '

- ஒரு பெருமூச்சுடன் ஜெஸினாவின் அப்பா முடித்தார்.

இரண்டு மூன்று நாட்களின் பின், ஜெஸினாவின் அப்பா தன் மருமகனுடன் கலந்துரையாடினார். மருமகன் தனக்குள்ள பணப் பிரச்சனைகளைக் கூறி பல வாக்குறுதிகளைக் கொடுத்து மாமனாருக்கு நம்பிக்கை ஊட்டி தன் வலையில் சிக்கவைத்தான். 

இறுதியில் குடியிருக்கும் வீட்டுக் காணியின் நான்கில் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டு பணம் முழுவதும் மகள் ஜெஸினாவின் கணவரிடம் கொடுக்கப்பட்டது.

ஒரு வருடம் சென்ற பின்பும் ஜெஸினாவின் கணவன் கூறியதுபோல் எதுவும் நடைபெறவில்லை. ஜெஸினாவுக்கும் சந்தேகம் வலுவடையத் தொடங்கவே ஒரு நாள்,

''என்னங்க, நீங்க தனியா கல்வி நிலையம் தொடங்க எனக் கூறி காணி வித்தமில்ல. ஏன் இவ்வளவு நாளா தொடங்கல. காசும் கரைஞ்சிடுமில்ல.''

- பக்குவமாய் தன் கணவனிடம் கேட்டாள்.

''என்ன? கல்வி நிலையமோ? இந்த பிச்சக்காரக் காசுக்கு கல்வி நிலையம் தொடங்கலாமோ? நான்தான் காணியில அரைவாசிய வித்து காசு கேட்டேன். உங்க அப்பா அதில அரைவாசிய வித்து காசு கொடுத்தார். போய் உங்க அப்பாக்கிட்ட சொல்லி மிச்ச அரைவாசியையும் வித்து காசு கொண்டுவா. கல்வி நிலையம் திறப்போம்.''

எரிந்து விழுந்தான் நிகால்.

இதனை சற்றும் எதிர்பாராத ஜெஸினா அதிர்ச்சியுற்று நிலை தடுமாறினாள். இதுபற்றி தன் பெற்றோருடன் வாய்திறக்காது விதியை நொந்தபடி பொறுமை காத்தாள்.

நாட்கள்தான் கடந்தனவே தவிர, உருப்படியாக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், நிகாலின் நச்சரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.  

தன் கணவனின் ஆட்டங்களுக்கு இடங்கொடுத்தால் குடியிருக்கும் வீடும் பறிபோய் தன் பெற்றோரினதும் இரு சகோதரர்களினதும் எதிர்கால வாழ்க்கை சூனியமாகிவிடும் என எண்ணிப் பயந்தவளாய் நிதானமாக இருந்தாள். நாளடைவில் பிரச்சினைகள் விரிசலாகி இருவரிடையேயும் மனக்கசப்பை உண்டாக்கியதுடன், அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது.

இப்போதெல்லாம் நிகால் வீட்டுக்கு வருவதுமில்லை. மனைவி பிள்ளையைப் பார்ப்பதுமில்லை.

இன்று, கள்ளங் கபடமற்ற ஜெஸினா தன் குழந்தை சகிதம் தன் பெற்றோரின் தயவுடன் ஒரு துரோகியின் மனைவியாக வாழ்ந்துவருகிறாள்.

- எஸ் ஏ கப்பார்.

04-10-2023. 

(15-10-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

No comments: