Friday, December 1, 2023

சிறுகதை 10 - விதைப்பதும் விளைவதும்.

 சிறுகதை.

விதைப்பதும் விளைவதும்.

அழைப்பு மணி கேட்டதும் எழுந்து சென்ற எனது இளைய மகன்,

'வாப்பா, சமீர் உங்களைப் பார்க்க வேண்டுமாம். லீனா அன்ரிட மகன். யூனிவேசிட்டில படிக்கிறவர்' 

- கூறிவிட்டு அவனது அறையை நோக்கி நடந்தான்.

லீனா என்றதும் சிறிது பரபரப்படைந்த நான், சமீரை உள்ளே அழைத்து அமரும்படி கூறினேன்.

சமீர்தான் முதலில் என்னை உறவு முறைகொண்டு அழைத்து, வந்த விடயத்தைக் கூறினான்.

'அங்கிள், நான் பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திட்டேன். இன்றுதான் முடிவுகள் வெளியாகின. உம்மாதான் சொல்லியனுப்பினாங்க, உங்கிட்ட போய் சொல்லிவிட்டு வாங்க மகன் என்று. வாப்பா காலமான பிறகு படிப்பை நிறுத்திவிட்டு ஏதாவது தொழில் செய்துகொண்டு உம்மாவுக்குத் துணையாக இருப்போம் என்றுதான் நினைத்தேன். உம்மாவும் அப்படித்தான் எண்ணியிருந்தாங்க. ஆனா நீங்கதான் எப்படியாவது நான் பல்கலைக்கழகம் சென்று படிப்பை முடிக்கவேண்டுமென்று புத்திமதி கூறி அனுப்பிவைத்தீங்க. அதை என் வாழ்நாள் முழுக்க நினைவில் வைத்திருப்பதோடு நன்றியுடனும் இருப்பேன்.'

சமீர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவனது தன்னம்பிக்கையும் முதிர்ச்சியும் வியப்பை ஏற்படுத்தின. 

'அங்கிள், நீங்களும் உங்களது நண்பர்களும் சேர்ந்து எனது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவி செய்ததை நினைத்துப் பெருமிதமடைகிறேன். அதற்கு நன்றிக்கடனாக நீங்கள் செய்தது போலவே நானும் எனது நண்பர்களும் சேர்ந்து தந்தையை இழந்து கஸ்டப்படுற மாணவர்களுக்கு அவர்கள் படிப்பதற்கு உதவிசெய்து அவர்களை உயர்த்திவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறோம். எங்களுக்குத் தொழில் கிடைத்ததும் நாங்கள் ஆரம்பிப்போம்.'

தேனீர் அருந்திவிட்டு சமீர் விடைபெற்றுச் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த நான், நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை இரைமீட்டலானேன்.

அன்று ஒரு திங்கட்கிழமை. வேலைக்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்த வேளை, அலைபேசி அலறியது. 

'மச்சான், ஒரு பேட் நியூஸ்டா. நம்மட லீனாட கஸ்பன்ட் இறந்திட்டார்ரா. இப்பதான் பரீட் கோல் எடுத்துச் சொன்னான்.'

'என்ன? முந்தநாள்தானே கொஸ்பிட்டல் போய் பார்த்து வந்தோம். நல்லாத்தானே இருந்தார்.'

'ஆமாண்டா. நேற்றிரவு நெஞ்சு நோவென்று சொல்லியிருக்கார். மாரடைப்பு போல இருக்கு. பாவம்டா லீனா. சின்ன வயதிலேயே கணவனை இழந்திட்டா.' - நண்பன் நாஸர் அழாக்குறையாகக் கூறினான்.

லீனா எங்களது வகுப்புத் தோழி. ஆரம்பம் முதல் உயர்தர வகுப்புவரை ஒன்றாகப் படித்தவள். உயர்தரப் பரீட்சை எடுப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் அவளது வாப்பா மரணமடைந்துவிட்டதால் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு தனது சொந்த மாமாவின் மகனைத் திருமணம் செய்துகொண்டாள். லீனாவின் கணவர் நல்லவர். தனியார் நிறுவனம் ஒன்றில் காசாளராக இருந்தவர். வீட்டில் நடைபெறும் நன்மை தீமைகளுக்கெல்லாம் எங்களை அழைப்பார். நண்பர்கள் சகிதம் நானும் மனைவி பிள்ளைகளுடன் சென்றுவருவோம். 

மரணச்செய்தி கேட்டு நெஞ்சு பாரமாகியது. துக்கம் தொண்டைக்குழியை அடைத்தது. அலுவலகத்துக்கும் ஏனைய நண்பர்களுக்கும் விடயத்தை எத்திவைத்துவிட்டு லீனாவின் வீடு நோக்கிச் சென்றேன். நண்பர்களும் வந்திருந்தார்கள். ஜனாஸா ஏற்கனவே வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. அடக்கம் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

பிற்பகல் ஐந்து மணியளவில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

வீடு வந்து சேர்ந்ததும் லீனாவின் எதிர்காலம் மற்றும் அவளது ஒரே மகனின் பல்கலைக்கழக படிப்பு என்பன எவ்வாறு அமையப்போகின்றன என நினைத்தபோது வேதனையாக இருந்தது. லீனாவின் உயர்கல்வி இடையில் தடைப்பட்டதுபோல் மகனுக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாதென நினைத்து அவனது கல்விக்காவது நண்பர்களுடன் சேர்ந்து உதவிசெய்ய வேண்டுமென உறுதிபூண்டேன். 

அன்றிரவு நித்திரை கொள்ள முடியவில்லை. புரண்டு புரண்டு கண்களை மூட முயற்சித்த போதும் இயலவில்லை. நாளை பொழுது விடிந்ததும் நண்பர்களை அணுகி ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஊசலாடியது.

விடிந்தும் விடியாத வேளை முதலில் நண்பன் நாஸரைத் தொடர்பு கொண்டு லீனாவின் மகனின் படிப்பிற்கு எப்படியாவது நண்பர்களாகிய நாம் ஒன்றுசேர்ந்து உதவிசெய்ய வேண்டுமெனக்கூறி அவனது ஆலோசனைகளைக் கேட்டேன்.

'அவசரப்படாதேடா! லீனாட அனுமதியில்லாமல் நாம எப்படிடா முடிவெடுப்பது? லீனாவைப்பற்றி நமக்கு தெரியும்தானே! அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ளமாட்டா. எப்படியென்றாலும் அவட 'இத்தா' காலம் முடிய நாலைந்து மாதமாகும். பொறுத்திரு. நம்மட மற்ற நண்பர்களிடமும் சொல்லி அவங்கட கருத்துகளையும் பார்ப்போம்.'

மறுபுறம் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஏனைய நண்பர்களுக்கும் அலைபேசி மூலம் விடயத்தைத் தெரியப்படுத்திவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டேன்.

இரண்டு நாட்களின் பின் நண்பன் நாஸரிடமிருந்து அழைப்பு வந்தது.

'நாம மொத்தமாக ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து உதவுறது பிரயோசனம் இல்லைடா. அது ஐந்தாறு மாதங்களில கரைஞ்சிடும். அதனால லீனாட மகன்ட படிப்புச் செலவுக்கு, நாம ஐந்து பேரும் மாதாமாதம் இரண்டாயிரம் வீதம் மொத்தம் பத்தாயிரம் கொடுப்போம். அதுவும் வங்கியில ஓர் எக்கவுண்ட திறந்து மகன்ட பேரிலேயே போடுவம். அத நீ பொறுப்பெடு' 

- வழக்கமான பாணியில் மளமளவென்று கதைத்துமுடித்தான்.

'இத லீனாவுக்கு எப்படிடா சொல்றது? அவ மகன் மாதாந்தோறும் நம்மிடமிருந்து காசு வாங்குறதுக்கு ஒத்துக்குவானா? இல்ல லீனாதான் இதற்குச் சம்மதிப்பாளா?'

- எனது கேள்விக்கணைகள் தொடர்ந்தன.

'நான் எல்லா விடயத்தையும் பேசி முடிச்சிட்டேன்டா. லீனாட அக்காவைக் கண்டு லீனாவுக்கு நடந்த கதிபோல் மகனுக்கும் நடந்துவிடக்கூடாது என விளக்கிக் கூறினேன். எத்தனையோ கெட்டிக்காரப் பிள்ளைகள் இப்படியான நிலைமைகளால் படிப்பையே பாதியில் நிறுத்திவிட்டு கூலித்தொழில் என்றும் கடைகளில் சின்னச் சின்ன வேலைகள் செய்தும் காலத்தை ஓட்டுதுகள். சில பிள்ளைகள் வழிதவறியும் சென்றுவிடுகின்றனர். அதனால லீனாக்கிட்ட எப்படியாவது கதைக்கச் சொன்னேன். அவவும் சரியென ஏற்றுக்கொண்டு நாளை வந்து சந்திப்பதாகச் சொல்லிவிட்டு போய்விட்டா. இப்பதான் வந்து சில விடயங்களைக் கூறினா. லீனாட கணவன் வேலைசெய்த கம்பனியும் ஊழியர்களும் சேர்ந்து ஒரு தொகைப்பணம் தருவதாகச் சொல்லியிருக்காங்களாம். கணவன்ட பேரிலே வெற்றுக் காணியொன்றும் இருக்காம். அதையும் விற்று மகனின் படிப்பை எப்படியோ முடிச்சிடலாம் எனக்கூறி நம்மட உதவியை ஆரம்பத்திலே விரும்பவில்லையாம். அக்காதான் லீனாவுக்கு தந்தையை இழந்த மகனைப் படிப்பிப்பதிலும் வாழ்க்கையைத் தனியொரு பெண்ணால் கொண்டு நடாத்துவதிலுமுள்ள சிரமங்களை எடுத்துக் கூறி ஒத்துக்கொள்ள வைத்திருக்கா.'

- நாஸர் சொல்லி முடித்ததும் என் நெஞ்சை அடைத்திருந்த பெரும் பாறாங்கல்லொன்று பனிக்கட்டிபோல் உருகிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. நீண்டதொரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு அமைதியாக நாற்காலியில் சாய்ந்துகொண்டேன்.

நான்கு வருடங்கள் நான்கு மாதங்கள் போல் மிக வேகமாகப் பறந்துவிட்டன. இறைவன் உதவியால் நினைத்ததுபோல் எல்லாம் நல்லபடியாகவே நடந்தேறின. ஐந்து நண்பர்களும் லீனாவுடன் சேர்த்து ஆறு பேரும் அன்றுபோல் இன்றும் ஒற்றுமையாகவும் பரஸ்பரம் உதவி செய்பவர்களாகவும் இருப்பதையிட்டு பெருமைப்படுகிறேன்.

இன்றைய நாட்களில் குழுக்களாகச் சேர்ந்து உல்லாசப் பயணங்கள் என்றும் கேளிக்கைகள் என்றும் சமூக வலைத்தளங்கள் என்றும் நேரத்தையும் பணத்தையும் வீண்விரயம் செய்யாமல் தந்தையை இழந்த, நமது நண்பனின் ஒரு பிள்ளையின் உயர்கல்விக்காவது கூட்டாக உதவினால் சமீர் போன்ற எத்தனையோ பிள்ளைகள் சமூகத்தில் நல்ல பிரசைகளாக உருவாகி, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். 

இன்று லீனாவின் மகன் என்னை வந்து சந்தித்துக் கூறிய வார்த்தைகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அவை மீண்டும் மீண்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன.

-எஸ். ஏ. கப்பார்.

06-11-2023.

(26-11-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

No comments: