Friday, December 1, 2023

சிறுகதை 8 - ரியூசன் மாஸ்டர்.

 சிறுகதை.

ரியூசன் மாஸ்டர்.

எங்களூரில் இருபத்தைந்து முப்பது ரியூசன் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். இருந்தும் ரியூசன் மாஸ்டர் என்றதும் உடனே நினைவுக்கு வருவது சுலைமான் சேர்தான். ஊரில் மட்டுமல்ல வெளியூர்களிலும் அவரது புகழ் பரவிக் கிடக்கிறது.

சுலைமான் சேர் ஆரம்ப வகுப்புப் பிரிவினருக்கு கல்வி கற்பிக்கும் ஓர் ஆசிரியர்தான். ஆரம்ப காலங்களில் பாடசாலையில் மட்டுமே கற்பித்துக்கொண்டிருந்ததால் பெரும்பாலான பெற்றோருக்கு சுலைமான் சேரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. பின் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியராகப் பரிணாமம் எடுத்த பின்பு தான் அவரது புகழ் பரவத்தொடங்கியது.

ஆரம்பத்தில் சுலைமான் சேரிடம் கல்வி கற்று புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சுமார் எண்பது சத வீதமான மாணவர்கள் சித்தியடைந்தது அவர் கற்பித்த பாடசாலைக்கு கௌரவத்தையும் பெற்றோர் மத்தியில் பெரும் மதிப்பையும் பெற்றுக்கொடுத்தது. 

பச்சிளம் குழந்தைகளைப் பாடாய்படுத்தி வெற்றிபெற வைத்த ஒரு சில வறட்டுக் கௌரவப் பெற்றோர்கள் தாங்களே பரீட்சையில் சித்தியடைந்ததாக எண்ணிக்கொண்டு சுலைமான் சேர் வீட்டுக்குச் சென்று அன்பளிப்பு என்ற போர்வையில் பெறுமதியான பரிசுப் பொருட்களை வழங்கத் தொடங்கினர். காலப்போக்கில் அன்பளிப்புப் பொருட்கள் ரொக்கப் பணமாக மாறியபோது சுலைமான் சேரின் எண்ணமும் பணத்தின் பக்கம் சாயத்தொடங்கியது. அதன் விளைவு பாடவேளைகளில் கற்பிக்கும் நேரம் குறைந்து குறைந்து பாடசாலைக்குச் சமுகமளிக்கும் நாட்களும் வெகுவாகக் குறையத்தொடங்கின. அதிபரும் அது பற்றி பெரிதாகப்  பொருட்படுத்திக் கொள்ளவில்லை. முழு நேர ரியூசன் ஆசிரியராகவே மாறிவிட்ட சுலைமான் சேர் இனிவரும் காலங்களில் தனது கற்பித்தல் முறையில் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு பணம் பண்ணவேண்டுமெனத் திட்டமிட்டார். 

எனவே பாடசாலையிலுள்ள ஐந்தாந்தர மாணவர்களை ஒன்றுசேர்த்து பல வகுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனிக் கவனம் செலுத்தி கற்பிக்கப்போவதாகவும் சித்தியடைவது நூறு வீதம் உறுதி எனவும் கூறி மாணவர்களது பெற்றோர்களை ஒரு விடுமுறை தினத்தில் பாடசாலை வகுப்பறையில் ஒன்று கூடுமாறும் அழைப்புவிடுத்தார்.

குறித்த தினத்தில் பெற்றோர்களும் ஒன்றுகூடினர். சுலைமான் சேர் பெற்றோர்களைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார்.

'எனது குறுகிய கால அழைப்பையேற்று வருகை தந்திருக்கும் பெற்றோருக்கு என் அன்பு கலந்த நன்றிகள். கூடுதலாக தாய்மார்கள் வந்திருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். ஆண்கள் தங்களது தொழில் நிமித்தம் வௌ;வேறு இடங்களுக்குச் சென்று வருவதால் தாய்மார்தான் பிள்ளைகளின் கல்வியிலும் அவர்களது எதிர்கால விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இது போட்டி நிறைந்த காலம். பிள்ளைகளை விளையாட்டு, கைத்தொலைபேசி போன்றவற்றில் கவனம் செலுத்தவிடாது இந்த புலமைப்பரிசிற் பரீட்சையில் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைய உதவிசெய்யவேண்டும். அது சம்பந்தமாக கலந்துரையாடவே உங்களை அழைத்துள்ளோம். அதற்கு எங்களைப்போல் நீங்களும் பல தியாகங்களைச் செய்வதோடு ஒரு தொகை பணமும் செலவு செய்ய வேண்டிவரும். இப் பரீட்சை முடியும்வரை மாதந்தோறும் சுமார் ஐயாயிரம் அளவில் செலவாகும்.' எனக் கூறிவிட்டு மெதுவாக கதிரையில் அமர்ந்தார் சுலைமான் சேர்.

ஐயாயிரம் என்றதும் வருகைதந்திருந்த எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு தங்களுக்குள்ளேயே உரையாடத் தொடங்கினர்.

ஓர் ஏழைத் தந்தை எழுந்து,

'அரசாங்கம்தான் இலவசக்கல்வி என்று சொல்லி எல்லாத்துக்கும் செலவு செய்யுது. படிப்பிக்கிறதுக்கு உங்களுக்கும் சம்பளம் தருது. நீங்க பாடசாலை நேரத்தில படிப்பிக்கலாம்தானே. எல்லாத்துக்கும் காசு காசு என்று கேட்டா நாங்க எங்கே போறது?' - அழாக்குறையாக சொல்லிவிட்டு அமர்ந்தார்.

'நீங்க சொல்லுறதும் சரிதான். இஞ்ச பாருங்க. எங்கட தேவைக்கு நாங்க காசு கேட்கவில்லை. பிள்ளைகளுக்கு ஒரு வாரத்துக்கு ஒரு முறை பரீட்சை வைக்க வேண்டும். அதைத் திருத்தி அவர்களது புள்ளிகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பரீட்சை பேப்பரெல்லாம் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களிலிருந்துதான் எடுக்க வேண்டும். நீங்க விரும்பினாத்தான் கொடுங்க. நாங்க கட்டாயப்படுத்தல்ல' - சிறிது கடுமையான குரலில் பதிலளித்தார் சுலைமான் ஆசிரியர்.

வந்திருந்த ஏனைய பெற்றோர்களும் தங்கள் தங்கள் கருத்துகளைக் கூறி இறுதியில் தாய்மார் தரப்பிலிருந்து மாதந்தோறும் நாலாயிரம் ரூபா கொடுப்பதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் ஆண்கள் தரப்பில் முழுமனதுடன் இம்முடிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதை அவதானித்த சுலைமான் ஆசிரியரின் நரி மூளை வேலை செய்யத் தொடங்கியது. வருகைதந்திருக்கும் தாய்மாரின் பிள்ளைகளைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தி பணம் பண்ணிவிடலாம் என நினைத்து,

'சரி. எல்லாப் பிள்ளைகளும் நூத்துக்கு நூறு எடுக்க வேண்டுமென்பதுதான் எங்கட நோக்கம். எதிர்வரும் வியாழக்கிழமை பாடங்கள் ஆரம்பமாகும். எல்லோரும் கட்டாயம் வாங்க' எனக் கூறிவிட்டு சுலைமான் ஆசிரியர் சென்றுவிட்டார்.

ஓரிரு மாதங்கள் ரியூசன் பாடங்கள் எல்லா மாணவர்களுக்கும் ஒழுங்காக நடைபெற்றன. மாணவர்களும் தங்கள் பெற்றோர்களின் வசதிக்கேற்ப கொடுத்தனுப்பிய தொகையினை சுலைமான் சேரிடம் கொடுத்தனர். தான் எதிர்பார்த்த தொகையினைக் கொண்டுவந்த பிள்ளைகளை வேறாகப் பிரித்தெடுத்து அவர்களை மட்டும் தனது வீட்டுக்கு வருமாறும் ஏனைய பிள்ளைகளை பாடசாலையில் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார். 

சுலைமான் சேரின் மனிதாபிமானமற்ற இந்தச் செயலினால் அதிக பணம் செலுத்த முடியாத நல்ல கெட்டிக்காரப் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இதைத் தட்டிக் கேட்க யாருமே முன்வராததால் சுலைமான் சேரின் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.

அறுவை மரப்பலகைகளாலும் பழைய கூரைத்தகடுகளாலும் அமைக்கப்பட்டிருந்த ரியூசன் கொட்டில் தற்போது புதியரக இருக்கைகளும் மின்விசிறிகளும் நவீன ஒலிபெருக்கிச் சாதனங்களும் கொண்ட கவர்ச்சிகர வகுப்பறைகளாக மாறின. சுலைமான் சேரின் வருமானம் பல்கிப் பெருகி புதிய வீடு, கார் என அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. 

காலப்போக்கில் சுலைமான் சேரின் மனதில் குடிகொண்டிருந்த நிம்மதி எங்கோ பறந்துபோய்விட்டது. பச்சிளம் குழந்தைகளைப் பகடைக்காயாக உபயோகித்து ஆடம்பரமாக வாழ நினைத்தவர் தனது மனைவி மக்களின் எதிர்காலம் பற்றி எண்ண மறந்துவிட்டார். மூத்த மகன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் போதை மாத்திரைகள் உட்கொள்ளும் நபராக மாறிவிட்டான். இளைய மகன் அவருக்குத் தெரியாமல் காரை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாகி வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் நாலைந்து மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இவற்றையெல்லாம் மனதிற் சுமந்துகொண்டு அவரது மனைவியும் ஒருவித மனநோயாளியாக மாறிவருவது சுலைமான் சேருக்குத் தெரியாமலில்லை.

நடந்தது நடந்ததுதான். இனி யோசித்துப் பயனில்லை. தனது முதுமைக்கால வாழ்க்கை மற்றும் மனைவி மக்களின் எதிர்காலம் பற்றிய பயம் சுலைமான் சேரை மெல்ல மெல்லக் கொல்லத் தொடங்கியது.

- எஸ் ஏ கப்பார்.

25-06-2023

(23-07-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

No comments: