Friday, December 1, 2023

சிறுகதை 5 நாமொன்று நினைக்க...

 சிறுகதை.

நாமொன்று நினைக்க...

சலீம் ஹாஜியார் புதிய இடத்திற்கு வந்து நாலைந்து வருடங்களாகின்றன. இதற்கு முன் இதே இடத்தில் சமது ஹாஜியாருடைய ஒரே மகன் றமீஸ் செல்பேசி மற்றும்  உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையொன்றை நடாத்திவந்தார். வியாபாரம் அவ்வளவு பெரிதாக எதிர்பார்த்தபடி நடைபெறாததால் வருமானம் போதியளவு கிடைக்கவில்லை. அதனால் அக்கடையைக் கைவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். 

சமது ஹாஜியார் நல்ல மனிதர். பாவ புண்ணியத்திற்குப் பயந்தவர். உதவி செய்யும் மனப்பான்மையுள்ளவர். மற்றவர்களுக்குத் தான தர்மங்கள் செய்வதிலும் பின்னிற்காதவர். அறுபத்தைந்து வயதிலும் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் தானே தனியாகச் செய்துகொள்ளுமளவிற்கு திடகாத்திரமானவர். தன் மனைவியுடன் மூத்த மகளின் வீட்டில்தான் வசித்து வருகிறார். மருமகன் இரண்டொரு தெரு கடந்து சொந்தமாக ஒரு பலசரக்குக் கடை நடாத்தி வருகிறார்.  நேர்மையானவர்.

சலீம் ஹாஜியாரும் சமது ஹாஜியாரும் ஒரு வகையில் தூரத்து உறவினர்கள். ஒரு நாள் பள்ளிவாசலில் சந்தித்து இருவரும் உரையாடியபோது முதலில் சலீம் ஹாஜியார்தான் நேரடியாக விடயத்திற்கு வந்தார். 

'பூட்டிக்கிடக்கிற உங்க மகன்ட கடையிலே என்ட சில்லறைக் கடையை கொண்டுவந்து நடத்தலாமென்று நினைக்கிறேன். மாதா மாதம் வாடகையைக் கறக்டா தந்திடுவேன். நீங்க சம்மதிச்சா சரிதான்.'

'இப்ப கடை இருக்கிற இடமும் நல்ல இடம்தானே.'

உரையாடலைத் தொடர சமது ஹாஜியார் வினவினார்.

'இல்ல ஹாஜி. இப்ப அவடத்தில சனப் புழக்கம் குறைவு. வியாபாரமும் போதாது'

சலீம் ஹாஜியார் ரொம்ப கறாரான மனிதர் என்பதால் சமது ஹாஜியார் சிறிது யோசித்துவிட்டு,

'மகனிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு சொல்றேன்' என்றார்.

இரண்டொரு வாரங்களில் சமது ஹாஜியாரின் மகனிடமிருந்து அனுமதி கிடைத்ததும் சலீம் ஹாஜியார் தனது சில்லறைக் கடையை இடம்மாற்றிவிட்டார். திறப்பு விழாவும் ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சலீம் ஹாஜியார் கடை திறந்து ஓரிரு வாரங்களில் கொரனாவின் தாக்கம் உலகை ஆட்டிப்படைத்தது. நமது நாடும் அதற்கு விதிவிலக்கில்லை. ஆரம்பத்தில் சலீம் ஹாஜியார் கவலைப்பட்டாலும் நாட்கள் செல்லச் செல்ல கொரனாவின் அதிகரிப்பு அவருக்கு அதிஸ்டத்தைக் கொண்டுவந்தது. 

பொருட்களின் விலைகள் கிடுகிடுவென ஏறியதும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதும் பொருட்களைக் கூடுதலான விலைக்கு விற்பதற்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது சலீம் ஹாஜியாருக்கு. கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த நினைத்தவர், தான் விரும்பியவாறு விலைகளைக்கூட்டி தனது வியாபாரத்தை வளப்படுத்தினார். நல்ல வருமானமும் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சலீம் ஹாஜியாரை மேலும் மேலும் அதிஸ்டசாலியாக்கியது. தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தார். பொருட்களின் விலைகள் இரண்டு மூன்று மடங்குகளாக உயர்ந்த போது சலீம் ஹாஜியாரின் காட்டில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. 

இந்த அதிஸ்டம் சலீம் ஹாஜியாருக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை.

தொடர்ந்து மக்களிடையே ஏற்பட்ட மனமாற்றங்களும் தொழில் இல்லாப் பிரச்சினைகளும் சலீம் ஹாஜியாரின் வியாபாரத்தில் ஓரளவு தளர்வை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஹாஜியாரின் கடையில் பொருட்களுக்குக் கூடுதலான விலை எனவும் வேண்டுமென்றே பொருட்களைப் பதுக்கிவைத்து விற்கிறார் எனவும் மக்கள் பேசிக்கொண்டனர்.

ஒரு நாள் சமது ஹாஜியார் வழமை போல் சாமான்கள் வாங்க கடைக்கு வந்தார். 

'என்ன சலீம் ஹாஜியார், வியாபாரம் எல்லாம் நல்லா போகுதுதானே? நம்மட சாயிவுத் தம்பிட மகன் றசாக் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கான். நானும் போய் பார்த்தேன். நல்ல வசதியோடதான் வந்திருக்கான் போல தெரியுது. அவனும் அவன்ட மாமாட கடையில பெரிய சில்லறைக் கடைதான் போடப்போறானாம். இனி வெளிநாடு போய் உழைச்சது போதும் என்கிறான்.'

சமது ஹாஜியார் சொன்னதைக் கேட்டதும் சலீம் ஹாஜியாருக்கு என்னவோ போலாகிவிட்டது. நமது தொழிலுக்குப் போட்டியாக ஒருவன் முளைத்துவிட்டான் என நினைத்துக் கவலைப்பட்டவர், தொடர்ந்து

'முன்னையப் போல இப்பவெல்லாம் வியாபாரம் இல்லை ஹாஜி. நானும் நல்லா உழைச்சதான். இப்ப சனங்களுக்கிட்ட காசு இல்ல. லாபமும் மிகக் குறைவு. விட்டுட்டு வேற ஏதாவது தொழிலைச் செய்யச் சொல்லுங்க.'

'கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேணும்தானே. அவனுக்கு அமைச்சது அவனுக்கு. நமக்கு அமைச்சது நமக்கு'

பதிலளித்துவிட்டு எழுந்து தான் வாங்க வந்த பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றார், சமது ஹாஜியார்.

இரண்டு மூன்று வாரங்களில் புதிய கடை வெகு விமர்சையாகத் திறக்கப்பட்டது. சலீம் ஹாஜியாரும் திறப்பு விழாவிற்குச் சென்று வந்தார்.

மாதங்கள் பல சென்றன. சலீம் ஹாஜியாரின் கடைக்கு வாடிக்கையாளர்களின் வருகை படிப்படியாகக் குறையத்தொடங்கியது. தனது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் புதுக் கடையில் பொருட்கள் வாங்குவதைக் காணும் போதெல்லாம் வயிறு பற்றியெரிந்தது.

கவலையும் குடிகொண்டது. வருமானமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. நோயும் தொற்றிக்கொண்டது. பார்ப்பவர்களெல்லாம் சலீம் ஹாஜியாரிடம் நலம் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக சலீம் ஹாஜியாரின் கடை பூட்டிக்கிடந்ததை அவதானித்த றசாக் தனது கடைக்கு வந்தவர்களிடம் விசாரித்ததில் சலீம் ஹாஜியாருக்குச் சில நாட்களாகச் சுகமில்லை என அறிந்துகொண்டான். கடையினை அடைத்ததும் அவரது வீட்டுக்குப் போய் பார்த்துவர வேண்டுமென எண்ணிக்கொண்டான்.

இரவு ஒன்பது மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு சலீம் ஹாஜியாரின் வீட்டையடைந்து 'ஹாஜியார்... ஹாஜியார்...' என கூப்பிட்டபடி கதவைத் தட்டினான். கதவு பூட்டப்பட்டிருந்தது. மீண்டும் 'நான் றசாக் வந்திருக்கேன்' என சத்தமிட்டான். உள்ளேயிருந்து அவரது மனைவி வந்து கதவைத் திறந்து வரும் படி அழைத்ததும் அவரது மனைவியின் பின்னால் றசாக் சென்று அமர்ந்தான்.

இரண்டொரு வருடங்களுக்குள் புதிதாக கட்டிய மாடி வீடு. கீழ்பகுதி மட்டும் பூரணப்படுத்தப்பட்டிருந்தது. மேற்பகுதியின் வேலைகள் ஆரம்ப நிலையில் காணப்பட்டன. வீடு அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. 

'ஹாஜியாரைப் பார்க்கத்தான் வந்த நான்.'

அமைதியைக் கலைக்க எண்ணி ஆரம்பித்தான்.

'ரெண்டு மூணு நாளா அவங்களுக்கு நெஞ்சு நோவு. ஆஸ்பத்திரிக்குப் போங்க எண்டு சொன்னேன். பாப்பம் பாப்பம் எண்டு இருந்தாங்க. பின்னேரம் நோவு அதிகமா இருக்கெண்டு சொல்லிக் கொண்டிருந்தாங்க. அவங்கள பாக்கவந்த நம்மட சமது ஹாஜியார்தான் கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு வாட்டில வச்சிருக்காங்க. நானும் மகளும் இப்பதான் சாப்பாடு கொண்டு குடுத்திட்டு வந்திருக்கோம். நானும் மகளும் தனியே இருக்கதாலேதான் கதவைப்பூட்டி வைச்சிருக்கோம்.'

சலீம் ஹாஜியாரின் மனைவி மிக வேதனையோடு கூறினார். 

'இஞ்ச பாருங்க தம்பி. மூணு நாலு வருஷமா நல்ல வியாபாரம்தான். ஒன்றையும் செய்றதுக்கு நம்மட ஊர் உடமாட்டா. எல்லாரும் எல்லாத்தையும் செய்யனுமென்டா எப்படி? நூல் கடை போட்டா எல்லாரும் நூல் கடைதான். நகைக் கடை போட்டா எல்லாரும் நகைக் கடைதான். சில்லறைக் கடை போட்டா எல்லாரும் சில்லறைக் கடைதான். அதாலதான் ஒருவரும் ஒண்டும் செய்ய ஏலாது.'

றசாக்கிற்கு பொறியில் தட்டியது போல் இருந்தது.

'நாங்களும் எப்படியோ வீட்ட முடிச்சு மகளுக்கு ஒரு கலியாணத்த பண்ணிடலாமென்டுதான் நினைச்சோம். நாம் ஒண்ணு நினைக்க படைச்சவன் ஒண்ணு நினைக்கான்'

பெருமூச்சுடன் றசாக்கை நிமிர்ந்து பார்த்த சலீம் ஹாஜியாரின் மனைவியின் முகத்தை அவனால் ஏறிட்டுப்பார்க்க இயலவில்லை.

தான் வெளிநாடு சென்று திரும்பிவந்து ஒரு நிரந்தரத் தொழிலைச் செய்ய வேண்டுமென நினைத்தபோது தனது உறவினர்களினதும் நண்பர்களினதும் ஆலோசனைப்படிதான் றசாக் சில்லறைக் கடையொன்றை ஆரம்பித்தான். இது சலீம் ஹாஜியாரின் குடும்பத்தைப் பாதிக்குமென்று நினைக்கவில்லை. அப்படியாயின் வேறு ஒரு கடையை ஆரம்பித்திருக்கலாம் என எண்ணி வேதனைப்பட்டான். ஹாஜியாருக்கு எப்படியும் உதவ வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. நாளை வைத்தியசாலை சென்று சலீம் ஹாஜியாரைப் பார்த்து அவரது வைத்தியச் செலவுகளுக்கு உதவுவதோடு அவரது வங்குரோத்து நிலைக்குச் சென்ற வியாபாரத்தினையும் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென உறுதிகொண்டான்.

'உம்மா, இந்தாங்க ரீ ' 

மறைவிலிருந்து தேனீர் தட்டை நீட்டிய மகளிடமிருந்து தேனீரைப் பெற்று றசாக்கிடம் வழங்கினார், ஹாஜியாரின் மனைவி. 

குழம்பிப்போயிருந்த றசாக் தேனீரைப் பெற்று அருந்திவிட்டு,

'நீங்க ஒன்றுக்கும் பயப்பட வேணாம். நான் காலைல கடை திறக்கிறதுக்கு முன் ஆஸ்பத்திரி போய் ஹாஜியாரைப் பார்த்து வாரேன். வருத்தத்தைப் பற்றி கவலைப்பட வேணாம். கொழும்புக்குக் கூட்டிப்போய் செக் பண்ணுவம். கடையையும் திறக்கச் சொல்றேன். என்ன உதவி எண்டாலும் செய்றேன். நீங்களும் எங்கட வாப்பாவோட சொந்தம்தான்.'

குற்ற உணர்வோடு விடைபெற்றுக்கொண்டு வெளியேறிய றசாக் எப்படியும் நாளை வைத்தியசாலை சென்று ஹாஜியாரைப் பார்த்து அவரை தைரியப்படுத்த வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் வீட்டையடைந்தான்.

அடுத்த நாள் அதிகாலை எழுந்து ஆஸ்பத்திரிக்குச் சென்று ஹாஜியாரைப் பார்த்துவிட்டு கடையைத் திறக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் வீதிக்கு வந்தான் றசாக்.

'தம்பி, நம்மட சலீம் ஹாஜியார் ஆஸ்பத்திரியில மௌத்தாகிட்டாராமே. இன்னும் வீட்டுக்கு கொண்டு வரல்லயாம்.'  

பக்கத்து வீட்டு மாமா சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மரணச் செய்தி கேட்ட றசாக் செய்வதறியாது விக்கித்துப்போய் சிலையாக நின்றான்.

- எஸ் ஏ கப்பார்

(12-03-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு நன்றி.)


No comments: