Tuesday, February 28, 2023

சிறுகதை 4 - சித்தியின் வருகை.

 சிறுகதை. 

சித்தியின் வருகை

'சித்தி... சித்தி... சித்தி... எப்ப பார்த்தாலும் சித்திதான்' சீறிப் பாய்ந்தாள் அக்கா.

'சிடுமூஞ்சி. இப்ப என்ன நடந்ததென்று ஆத்திரப்படுறாய்? சொல்ல வந்ததை என்னவென்று காது கொடுக்காமலே கோபப்பட்டால் எப்படி?' பதிலுக்கு நானும் எனது தொனியைக் கடுமையாக்கினேன்.

என் அக்கா ஒரு பட்டதாரி ஆசிரியை. ஊரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றுகிறார். பாடசாலையில் அக்காவுக்கு நல்ல பெயர். மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் அன்பாகப் பழகும் ஓர் ஆசிரியை என அறியப்பட்டவர். அவரது கணவரும் ஒரு பட்டதாரிதான். தற்போது தலைநகரில் பிரபல நிறுவனமொன்றில் நல்ல சம்பளத்துடன் கடமையாற்றிவருகிறார். ஆண் ஒன்று பெண் ஒன்று என அவர்களுக்கு இரு பிள்ளைகள். இருவரும் பாடசாலை செல்லும் சிறுவர்கள். மச்சான் இரு வாரங்களுக்கொரு முறை மனைவி மக்களை வந்து பார்த்துச் செல்வார். 

'அக்கா! நீ நினைப்பதுபோல சித்தி மோசமானவ இல்ல. ஆரம்பத்தில நானும் சித்திமேல வெறுப்பாகவும் கோபமாகவும்தான் இருந்தேன் என்பது உனக்கு நல்லா தெரியும். மாமா வந்து எல்லா விடயங்களையும் தெளிவாக விளங்கப்படுத்தி நம்மட சம்மதத்தைப் பெற்ற பிறகுதானே அப்பா நம்மைவிட்டுப் பிரிந்து போன அம்மாவின் வீட்டுக்கு சித்தியைக் கூட்டிவந்தார். சித்தி புறப்படும் வேளையாவது நீ ஒரு வார்த்தை பேசேன்' 

நான் தொடர்ந்தேன். அக்கா எதையும் காதுக்கெடுத்துக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அமைதியானேன்.

நான்கு வருடங்களுக்கு முன்...

சித்தி அம்மாவின் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அறவே பிடிக்கவில்லை என்பது உண்மைதான். சில வருடங்கள் சுகயீனமுற்றிருந்த எங்கள் அம்மா அவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் பிரிந்துவிடுவார் என கனவிற்கூட எண்ணியதில்லை. கவலையை மறப்பதற்கு பல மாதங்களாயின. அக்காவுக்கு பக்கத்துக் காணியில் எல்லா வசதிகளும் கொண்ட தனி வீடுகட்டி சிறப்பான முறையில் திருமணத்தையும் செய்துவைத்ததில் அம்மாவின் பங்கு அளப்பரியது. நானும் திருமணம் முடித்து நன்றாகத்தான் வாழ்ந்துவருகிறேன். அம்மாவின் மரணம் சில காலம் அக்காவின் பிள்ளைகளுக்கும் அக்காவுக்கும் பெரும் இழப்பாக இருந்தது. மறுபுறம் அப்பாவின் நிலைமை பெரும்பாடாகி விட்டது. முன்புபோல தனது வியாபாரத்தில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. ஏனோ தானோவென்று தனது கடமைகளை நிறை வேற்றுவதை அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு நாட்கள் நகர்கையில் ஒரு நாள் மாமா எங்களது வீட்டிற்கு வந்தார். மாமா மீது எங்களுக்கு அபரிதமான மரியாதை. அவரது வார்;தைக்கு யாரும் மறுப்புத் தெரிவிப்பதில்லை. கதைக்கும் போது இடையில் குறுக்கறுத்து ஒருபோதும் பதிலளிப்பதுமில்லை.

'இஞ்ச பாருங்க. எனக்கும் பெரும் ஆச்சரியமாத்தான் இருக்கு. இது எப்படி சாத்தியமானது என்று எனக்கு தெரியல. நேத்து தம்பி சமீம் அவரது வீட்டுக்கு வரச்சொல்லி போன நான். தம்பி சமீம் அவர்ர பெண்டாட்டியையும் கூட்டிவந்து அம்மாவுக்கு துணையா அந்த வீட்டிலதான் இருக்கார். அம்மாவுக்கு ஒரேயொரு மகன். சமீம் தம்பிக்கு பிள்ளைகளும் இல்ல. அவரது அப்பா காலமாகியும் பல வருடங்களாகிவிட்டன.'

மாமா என்ன சொல்லவருகிறார் எனப் புரியாமல் அக்காவும் நானும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டோம்.

மாமா தொடர்ந்தார்.

'தம்பி. அவவும் உங்க அப்பாவும் ஒரே வகுப்பில படிச்சவங்களாம். படிச்ச காலத்துல நல்ல நண்பர்களாகவும் இருந்திருக்காங்க. உங்க அம்மா மரணத்திற்குப் பிறகு அவ உங்க அப்பாவோட கதைச்சிருக்கா. ஒங்க அப்பா ஆரம்பத்தில அடியோட மறுத்திருக்காரு. அப்பாவ முழுமையா கவனிக்கிறதுக்கு ஒண்ட அக்காவாலோ உன்னாலேயோ முடியா. நீயும் வேலைக்குப் போற. அவவும் வேலைக்குப் போற. அக்காவுக்கு சின்னப் பிள்ளைகளும் ரெண்டு. அப்பாவுக்கும் உடல் நிலை அவ்வளவு நல்லா இல்ல. அதனால உங்கப்பாவ அவ மறுமணம் செய்து உங்க அம்மாவின் வீட்டுக்கே வந்து இருக்கப்;போறாவாம்.'

சிறிது நேரம் தலையைச் சொறிந்துவிட்டு மாமா தொடர்ந்தார்.

'இத ஆரம்பத்தில தம்பி சமீமும் மறுத்திருக்கார். பிறகு அம்மா சொன்ன காரணங்களை நியாயமா கருதி ஒத்துக்கிட்டிருக்கார். அதனால உங்க அப்பாகிட்ட கதைக்கிறதுக்கு முன்னே உங்கட சம்மதத்தைக் கேட்கணு மென்றுதான் வந்த நான்'

முதற்தடவையாக மாமாவின் பேச்சுக்கு இடைநிடுவே குறுக்கறுத்தாள் அக்கா.

'என்ன நியாயம் மாமா இது? யாரோ ஒருவளைக் கூட்டி வந்து இவதான் இனி அம்மா என்றால் நாங்க ஏத்துக்குவோம் என்று நினைக்கிறீங்களா? அப்பா கண்ணுக்குப் பிறகு சொத்துக்களையும் அம்மாட நகைகளையும் சுருட்டிக் கொண்டு போய்விடலாம் என்று திட்டமிடுராங்க போல.  அப்பாவுக்கு நல்ல புத்தி சொல்லாம நீங்களும் துணை போகிறீங்க. சீ...'

அக்காவின் வார்த்தைகளைச் சற்றும் எதிர்பாராத மாமா நிலைகுலைந்துவிட்டார். அவரது முகம் கறுத்துப்போனது. என்னால் அவரது முகத்தைப் பார்க்கப் பெரும் சங்கடமாக இருந்தது.

'அக்கா. என்ன கதையிது. மாமா என்று ஒரு மரியாதை இல்லாமல்...'

எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று மெல்லிய குரலில் அக்காவைக் கண்டித்தேன்.

'இந்த இளவெல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி அப்பா சித்தி கித்தி என்று யாரையாவது கூட்டிவந்தா என்ர வளவுக்குள்ள ஒருவரும் வரப்போடா. என்ர பிள்ளைகளையும் பார்க்கக்கூடா.'

அக்காவின் வார்த்தைகள் அனலாகப் பறந்தன. தொடர்ந்து நானும் மாமாவும் மாறிமாறி அப்பா சார்பான நியாயங்களை எடுத்துக்கூறி வாதிட்டோம். அவள் மசியவில்லை. இறுதியில் அக்காவைச் சமாதானப்படுத்த முடியாமல் மாமாவும் நானும் அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிட்டோம்.

நான் தினமும் அம்மா வீட்டுக்குச் சென்று அப்பாவை நலம் விசாரித்து அவரது தேவைகளையும் கவனித்து வந்தேன். வெளியேறும்போது அக்காவையும் பிள்ளைகளையும் பார்த்துவருவதையும் வழக்கமாக்கிக்கொண்டேன்.

சுமார் மூன்று மாதங்களின் பின் எங்கள் வீட்டிற்கு சித்தி வரப்போவதாக மாமா மூலம் அறிந்தேன். பதிவுத் திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் தானே முன்னின்று செய்துமுடித்ததாகவும் மகன் என்ற உரிமையில் என்னால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் என்னை மாமா வினயமாக வேண்டிக்கொண்டார்.

காலம் மிக வேகமாக கடந்து சென்றது. சித்தி அம்மா வீட்டுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நான்கு வருடங்களில் ஒரு நாளாவது அக்காவின் வீட்டுப் படிக்கட்டில் கூட சித்தி காலடி எடுத்து வைக்கவில்லை. அக்கா சித்தியை ஒருபோதும் அப்பாவின் மனைவியாக ஏற்றுக்கொள்ளவுமில்லை. மதிக்கவுமில்லை. ஆனால் அக்காவின் பிள்ளைகள் சித்தியைப் பார்ப்பதையும் சித்தி அக்காவின் பிள்ளைகளுக்கு ஏதாவது உணவுப் பண்டங்கள் கொடுப்பதையும் அக்கா தடைசெய்யவில்லை. 

திடீரென ஒரு நாள் அப்பா மயக்கமுற்று கீழே விழுந்து மூர்ச்சையாகிவிட்டார். அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். சிகிச்சை பலனளிக்கவில்லை. அப்பா சித்தியையும் எங்களையும் விட்டுப் பிரிந்துவிட்டார். இறுதிக் கடமைகளைச் சிறப்பாக செய்துமுடித்தோம்.

அப்பா மரணித்து ஏழு நாட்களின் பின் சித்தி என்னை அழைத்தார். மாமா என்னிடம் ஏற்கனவே கூறிய விடயமாகத்தான் இருக்கும் என்பதால் என்னை நானே தைரியப்படுத்திக்கொண்டேன்.

'மகன், அப்பா மரணித்து ஏழு நாட்களாகிவிட்டன. அவருக்கு நான் செய்யவேண்டிய மார்க்கக் கடமைகள் பல உள்ளன. நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்ததில்லை. நல்ல நண்பர்களாகத்தான் வாழ்ந்தோம். இருந்தபோதும் ஊர் உலகத்துக்கு கட்டுப்படவேண்டியது நமது கடமை இல்லையா?'

'நானும் உங்கப்பாவும் ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்கள்தான். படிக்கும் காலத்திலேயே அவர் நல்ல கவிதைகளையும் கதைகளையும் எழுதுவார். மாணவ மன்றங்களிலெல்லாம் கவிதை பாடுவார். நான் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி ஆரவாரப்படுவேன். சக மாணவர்கள் என்னையும் அப்பாவையும் காதலர்களாகக் கற்பனை பண்ணியதுண்டு. ஒரு முறை உங்கப்பா பத்திரிகைக்கு அனுப்பிய சிறுகதை ஒன்று முதற்பரிசு பெற்றது. அது அவ்வார இதழில் வெளிவந்தது. வகுப்பு மாணவர்கள் ஒன்றுசேர்ந்து ஆழுக்கொரு பிரதி வாங்கி வீட்டுக்கு கொண்டுவந்து படித்தோம்.' 

'மறுநாள் எங்களது வகுப்பு மாணவத் தலைவன் எழுந்து உங்கப்பாவைப் பாராட்டி மாலை அணிவித்தான். யாரும் எதிர்பாராதவாறு, 'இந்தக் கதையில் வருவதுபோல் கதாநாயகனின் மனைவி இறந்தால் வகுப்பு மாணவி யாராவது அவரை மறுமணம்  செய்துகொள்வீர்களா?' என வேடிக்கையாகக் கேட்டு கை உயர்த்தச் சொன்னான். யாருமே முன்வரவில்லை, என்னைத் தவிர. அன்று விளையாட்டாகச் செய்தது. இன்று உண்மையாகிவிட்டது.'

சித்தியின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்தேன். சித்தி தொடர்ந்தார்.

'உங்க அம்மா மரணித்து சில நாட்களின் பின் உங்கப்பாவை வைத்தியசாலையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாவின் மரணம் பற்றி விசாரித்து ஆறுதல் கூறினேன். மிகவும் கவலையுடன் காணப்பட்டார். தனக்குள்ள நோய்கள் பற்றி வேதனைப்பட்டார். நோயின் தாக்கம் அதிகரிக்கும் காலத்தில் தன்னைக் கவனிக்க மனைவி இல்லையே என ஆதங்கப்பட்டார். பிள்ளைகளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் தானும் மரணித்துவிட வேண்டுமெனக் கூறினார். அதனால் என்ன இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்களேன் என்று கூறினேன். வசதி வாய்ப்புகள் இருக்கும்போது மார்க்கமும் அதனை அனுமதிக்கிறதுதானே என்றேன். அவர் மறுத்துவிட்டார்.'

சித்தி இடைநிறுத்தி ஒரு பெருமூச்செறிந்தார். அதன் பின் நடந்தவற்றை என்னிடம் கூற சங்கடப்படுகிறார் என உணர்ந்த நான் சித்தியிடம் மேலும் எதுவும் கேட்கவில்லை.

சித்திதான் தொடர்ந்தார்.

'மகன் நான் இன்றிரவு என் வீட்டுக்குப் போறன். அப்பா போன பிறகு எனக்கு இங்கு என்ன வேலை. நீங்க உங்கப்பாவையும் என்னையும் நல்லா பாத்துக்கிட்டீங்க. நீங்க நல்லா இருப்பீங்க. அக்காதான் உங்கப்பாவின் நிலைமையையும் என்னையும் புரிஞ்சுக்கல்ல. அக்காவையும் பிள்ளைகளையும் கூட்டிக்கு வாங்க. நான் அவக்கும் சித்திதான்.'

சித்தி என்னை அணைத்து உச்சி முகர்ந்தார். நான் திகைத்துப்போய் அமைதியாக நின்றேன். 

இருள் கவ்வத் தொடங்கி வெகு நேரமாகிவிட்டது. சித்தி உள்ளே சென்று அவரது உடுப்புகள் கொண்ட கைக்கடக்கமான ஒரு பையை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து எனது காரின் பின் பக்கம் வைக்கச் சொன்னார். ஏதோ நினைத்தவராக வெளியே வந்து அக்காவின் வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வைத்தவர் தொடர முடியாமல் பின்வாங்கிவிட்டார்.

'மகன் வாங்க, போவோம்.'

சித்தியின் பையினை எடுத்துக்கொண்டு எனது வாகனத்தை நோக்கி நடந்தேன். காரின் பின் கதவைத் திறக்க முற்பட்டபோது கண்களில் முட்டியிருந்த கண்ணீர் தடுத்தது. அதற்குள் சித்தி திறந்து கொண்டு உள்ளே அமர்ந்துவிட்டார்.

காரின் முன்பக்கமாக நடந்து சென்று முன் கதவைத் திறந்து, இருக்கையில் அமர்ந்து வாகனத்தை இயக்க முற்பட்டபோது செல்பேசி அலறியது.

'சித்தியின் வருகைக்காக அவரது மகனும் மருமகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்'- முணுமுணுத்தவாறு வாகனத்தை நகர்த்தினேன்.

- எஸ். ஏ. கப்பார்.

26-02-2023.

(26-02-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)














No comments: