Wednesday, February 15, 2023

சிறுகதை 3 - தாய் வீடு.

 சிறுகதை.

தாய் வீடு.

இன்று மூன்றாவது நாள்.

என்னோடு கோபித்துக் கொண்டு அவளது தாய் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அடுத்த நாளோ அல்லது இரண்டாவது நாளோ வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை மூன்று நாட்களாகியும் வரவில்லை. எனக்கு என்னவோ போலிருந்தது. ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. பிரிவை நினைக்கும் போது நெஞ்சு பாரமாக இருந்தது. அப்படி எங்களுக்குள் சண்டை என்று பெரிதாக ஒன்றுமில்லை. பரஸ்பர புரிந்துணர்வு போதாது, அவ்வளவுதான். இத்தனைக்கும் நாங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நான் ஒரு முன்கோபி. எதையும் எடுத்தெறிந்து பேசும் சுபாவம். அதுவும் உண்மைதான். மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்றோ அல்லது அவமானப்படுத்த வேண்டும் என்றோ நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தவறுகளும் அநியாயங்களும் எங்கு நடந்தாலும் அங்கு என் குரல் ஒலிக்கும். அதை சிலர் பிழையாக விளங்கிக்கொண்டு என்னை விமர்சிப்பார்கள். அதை நான் ஒரு பொருட்டாக கொள்வதுமில்லை. 

என் மனைவிகூட என்னை ஒரு பிடிவாதக்காரன் என்றும் எதையும் ஒத்துக்கொள்வதில்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். எடுத்ததற்கெல்லாம் கோபித்துக் கொண்டு அவ்வளவு தாய் வீடு செல்வது வழக்கமாகிவிட்டது. எனக்கு அவமானத்தையும் பக்கத்து வீட்டாரிடையே ஒருவகை தன்மானப் பிரச்சினையையும் தோற்றுவித்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. இதன் எதிர்விளைவுகளை எண்ணிப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இலேசாக வியர்க்கத் தொடங்கும்.

நாளை ஹஜ்ஜுப் பெருநாள். இருவர் மனதிலும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குடிகொண்டிருந்ததை இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு நாளைய பெருநாளைக் கொண்டாட ஆயத்தமாக இருந்தோம். பலகாரங்களையும் உணவுப் பொருட்களையும் தயாரிப்பதில் அவள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு ஒத்தாசைகள் செய்து கொண்டிருந்தேன். திடீரென ஏதோ நினைவு வந்தவளாக உள்ளே சென்றாள். அலுமாரி திறக்கும் சத்தம் எனக்கு கேட்டது. நேற்று அவளுக்காக வாங்கி வந்த அழகிய விலையுயர்ந்த செருப்புச் சோடியை எடுத்து வந்தாள். 

'என்ன? நல்லதென்று திரும்பத் திரும்ப பார்க்கிறாயா?' என்றேன். 

'இல்ல! நல்ல அழகாத்தான் இருக்கு. விலைதான் மிச்சம் அதிகம் என்றாள். 

'இப்ப என்னதான் விலையில்ல. எல்லாம் ஆனை விலதான்' என்றேன். 

நான் கூறியதை அவள் கவனிக்கவில்லை என்பது எனக்கு நன்கு புரிந்தது. ஏதோ ஒன்றை அவள் கூர்ந்து அவதானிப்பதும் தெரிந்தது. எனக்கு லேசாகப் பயம் பரவத்தொடங்கியது. நாளை பெருநாள். விபரீதமாக ஏதும் நடந்துவிடக் கூடாதென இறைவனை வேண்டிக்கொண்டேன். 

'இஞ்ச பாருங்க, இந்தப் பட்டியை. பிஞ்சு போய் திரும்ப ஒட்டி இருக்கான் போல.' 

அவளது குரல் கேட்டு எனக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு விட்டது. புதுச் செருப்பைப் போய் யாராவது ஒட்டி இருப்பானா? - எனது கேள்வி எடுபடவில்லை. கடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்து வேறொன்று மாற்றிவரச் சொன்னாள். நான் மறுத்தேன். முடிவு அவள் தாய் வீடு சென்றுவிட்டாள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பெருநாளைக்கு அவள் தாய்வீடு சென்றுவிட்டாள் என்றும் இன்றிரவே வீடு வந்துவிடுவாள் என்றும் பொய் சொன்னேன். அது பொய்யல்ல, மெய்யென நிரூபிக்க அவள் அன்றிரவே வந்துவிட்டாள்.

இன்னொரு நாள் அவளது நண்பியின் திருமணம். வேலைக்குப் போவதற்குமுன் பத்துத் தடவையாவது சொல்லி இருப்பாள். 

'பாருங்க, என் உயிர் நண்பியின் திருமணம். நான் கட்டாயம் நாலு மணிக்கெல்லாம் அங்கு இருக்கவேணும். ஏதும் பிரச்சினை என்றால் சொல்லிடுங்க. லீவு போட்டுவிட்டு இருந்திடலாம் என்றாள். 

'இல்லை ஜெஷி, நான் இண்டைக்கு கட்டாயம் வேலைக்குப் போகவேண்டும். எப்படியாவது நாலு மணிக்குள்ளே வந்திடுவேன்' என்றேன். 

'இஞ்சபாருங்க, நாமளும் நாலு கல்யாண வீடு, சாவீடென்று போனாத்தான் நம்மட சாவு வாழ்வுக்கும் நாலுபேர் வருவாங்க. வேலை வேலை என்று திரிந்தால் நம்மள ஊர் ஒதுக்கிடும்.' அவளது புத்திமதி எனக்கு உறைத்தது.

அன்று வழக்கத்திற்கு மாறாக நேரத்தோடு வெளிக்கிட்டு வேலைக்குப் புறப்பட்டேன். ஆனால் அவளுக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் ஐந்து மணிக்கு வந்து நின்று விழிபிதுங்கினேன்.  அவள் ஒன்றுமே கூறாமல் திருமண வீட்டுக்குப்போக ஆயத்தமாக நின்றது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இருவரும் திருமண வீடுசென்று மணமக்களை வாழ்த்திவிட்டு இரவு எட்டு மணியளவில் வீடு வந்தடைந்தோம். எனக்குக் கை கால்கள் எல்லாம் வலித்தன. விழுந்து படுத்தால் சுகமாக இருக்கும் போலிருந்தது. அப்படியே முன்ஹாலில் கிடந்த சோபாவில் மெதுவாகச் சாய்ந்தேன். நித்திரை என்னை ஆட்கொண்டுவிட்டது. விழித்துப் பார்த்தபோது மணி பத்தரை ஆகிவிட்டது. கண்களைக் கசக்கி கைகளை உயர்த்தியபோது தொலைபேசி அலறியது. ரிஸீவரைத் தூக்கினேன். 

'என்ன மச்சான் எப்ப பார்த்தாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அக்கா சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு வருவதும் போவதுமாக. நாலு அறை அறைந்து அடக்கி வைக்கத் தெரியாதா உங்களுக்கு? உம்மா அழுது கொண்டே இருக்கா. வாப்பா ஆத்திரத்தில் கத்திக்கொண்டிருக்கிறார்.' 

அவளது தங்கையின் குரல் கேட்டு எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ரிஸீவரைக் கீழேவைத்துவிட்டு அவள் வருகைக்காக வாசலில் காத்துநின்றேன்.

மூன்று நாட்கள் தனிமையில் எவ்வாறு காத்துக்கிடந்தேன் என எனக்கே புரியவில்லை. மனதுக்கு மிகப் பாரமாக இருந்தது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளாமல் தவிப்பதும் தாங்களாகவே பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு பரிதவிப்பதும் எனக்கு மட்டுமல்ல, அவளுக்கும் நன்கு புரியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ இன்னும் பழகிக்கொள்ள முடியவில்லையே என எண்ணும்போது கவலையாகவே இருந்தது. அதற்கான வாய்ப்புக்கூட ஏற்படவில்லை, ஒரு குழந்தை வடிவிலாவது. என்னதான் இருந்தாலும் அவள் என் ஜெஷp. அவளை எப்படியாவது சமாதானப்படுத்தி அழைத்துவர நினைத்து எழுந்த என்னை முச்சக்கர வண்டிச் சத்தம் வேகமாக நிமிர்ந்துபார்க்க வைத்தது. அவள் திரும்பி வந்துவிட்டாள்.

எழுந்த நான் அப்படியே நின்றேன். உள்ளே வந்தவள் என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மின்விளக்குகளையும் மின்விசிறியையும் உயிர்ப்பித்தாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது வீடும் நானும் உறங்கிக்கிடந்தது. மின்விசிறியின் அரட்டலில் விழித்துக்கொண்ட அவ்வார இதழொன்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது. அதைக் கையிலெடுத்து மீண்டும் சோபாவில் சாய்ந்தேன், இன்னும் சில நாட்களுக்கு என் ஜெஷp என்னைத் தவிக்கவிட்டு தாய்வீடு செல்லமாட்டாள் என்ற நம்பிக்கையுடன்.

- எஸ். ஏ. கப்பார்.

(22-01-2023 ஞாயிற்றுக்கிழமை தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)

No comments: