Wednesday, February 15, 2023

சிறுகதை 1 : துரோகம்

சிறுகதை.

துரோகம்.

பொலிஸ் நிலையத்தை நெருங்க நெருங்க...

என் மனம் பதைபதைத்தது. பாசம் பரிதவித்தது. அதேவேளை நாட்டுப் பற்று மறுதலித்தது.  உடல் கனலாகக் கொதித்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன... குளமாகின... கால்கள் நடக்க மறுத்தன... 

நான் ஓர் ஆசிரியை. எனது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். எங்களுக்கு ஒரேயொரு பெண்பிள்ளை. படிப்பில் மட்டுமல்ல, பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு அவளது திறமையை வெளிக்காட்டிய கெட்டிக்காரி. நான் கற்பித்தது பெண்கள் பாடசாலை. ஆகையால், அப்பாடசாலையிலேயே என் மகளையும் சேர்ப்பித்தேன். எங்கள் இருவரையும் என் கணவர்தான் காலையில் பாடசாலைக்குக் கூட்டிச்சென்று விட்டு விட்டு வேலைக்குச் செல்வார். பாடசாலை முடிந்ததும் முச்சக்கரவண்டியொன்றில் வீடு வந்து சேர்வோம்.

இருவரது வருமானமும் எங்களது சின்னஞ்சிறு குடும்பத்தை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும்  வாழ வழிவகுத்தது. மகளின் எதிர்காலம் ஒளி மயமானதாக இருக்கவேண்டும் என்பதில் இருவரும் மிகக் கவனமாக இருந்தோம். க. பொ. த. (சாஃத) பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று எங்களது பாடசாலைக்கும் எங்களுக்கும் பெருமை சேர்த்தாள். அதே பாடசாலையில் உயர்தர வகுப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. உயர்தர வகுப்புப் பாடங்கள் ஆரம்பமாகி ஓரிரு வாரங்களில் முழு உலகையும் ஆட்டிப்படைத்த கொரோனா எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. அடிக்கடி பாடசாலைகள் மூடப்படுவதும் நாட்டின் வௌ;வேறு பகுதிகள் இடைக்கிடை 'லொக் டவுன்' செய்யப்படுவதும் ஊரடங்குகள் அமுலாக்கப்படுவதும் எங்களது குடும்பத்தையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்தன. 

இதன் விளைவாக எனது கணவர் ஒழுங்காகத் தொழிலுக்குச் செல்வதில் உண்டான தடங்கல்கள் அவரது வருமானத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  வேலைக்குச் செல்லாமல் பல நாட்கள் வீட்டில் தனியாக தங்கியிருந்தார். அவர் வேலை செய்த நிறுவனமும் தொழிலைக் கொண்டு நடத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. அவரது சொந்தச் செலவுகளுக்கே என்னிடம் பணம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவருக்கொரு தன்மானப் பிரச்சினையை ஏற்படுத்தி அவரது மனோநிலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் எங்கள் குடும்பத்தில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நாளாந்தம் கிடுகிடுவென்று ஏறிச்சென்றது. எனது மாதச் சம்பளம் இரு வாரங்களுக்கே போதுமானதாக இருந்தது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் விழிபிதுங்கி நின்றோம்.

வேறுவழியின்றி கணவரிடம் நாசூக்காகப் பேசி அவரை ஒரு தொழிலைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றேன். அவரும் பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு நல்ல இடத்தில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறினார். நல்ல சம்பளம் என்றும் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது. 

மாதங்கள் பல கடந்தன. நாட்டின் நிலைமைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்ப ஆரம்பித்தன. நாட்டு மக்கள் வழமைபோல் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். திருமண நிகழ்வுகளும் உல்லாசப் பயணங்களும் சமய நிகழ்வுகளும் களைகட்டத்தொடங்கின. பாடசாலைகளும் ஒழுங்காக நடைபெற்றன. 

இப்போதெல்லாம், கணவரின் தொழில் வேலைப் பழு காரணமாக, அவர் வீட்டில் தங்குவது மிகவும்  குறைந்தது. எங்களைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வதுமில்லை. வீட்டு வேலைகளிலும் பங்குகொள்வதில்லை. எங்கள் மீதுள்ள அக்கறை படிப்படியாகக் குறைந்து வருவதை உணரக்கூடியதாக இருந்தது. நாங்களும் பொறுமையாக இருந்து நாட்களைக் கடத்தி வந்த வேளையில், என்  உறவினர் ஒருவர் மூலம் கிடைத்த ஒரு தகவல் என்னையும் என் மகளையும் கதிகலங்க வைத்தது. 

ஒரு நாசகாரக் கும்பலுடன் சேர்ந்து போதை தரக்கூடியதும் பாடசாலை  மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடக் கூடியதுமான  ஒரு வகை போதை மாத்திரைகளை என் கணவர் விநியோகம் செய்கின்றார் என்ற தகவல்தான் அது. என் கணவர் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக ஆரம்பத்தில் இத்தகவலை எனது மனம் நம்ப மறுத்தது. பின்னர் படிப்படியாக அவரது நடவடிக்கைகள் அவரது தேசவிரோதச் செயலை உறுதிப்படுத்தின. இது எமது எதிர்கால மாணவ சமூகத்திற்குச் செய்யும் பாரதூரமான துரோகம் எனச் சுட்டிக்காட்டி இச் செயலை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். அழுதேன். அவரோ இணங்கவில்லை. என்னைத் துன்புறத்திக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினார். 

இறுதியாக, இந் நாட்டின் எதிர்காலச் செல்வங்களான  மாணவ சமூகத்தின் விடிவுக்காக எனது மனதைக் கல்லாக்கிக்கொண்டு எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் இன்றி எனது கணவரின் தேசவிரோதச் செயலை நாட்டுக்குப் பறைசாற்றி தண்டனை வழங்கக் கோரி பொலிஸ் நிலையத்தை நோக்கி நடக்கலானேன்.

பொலிஸ் நிலையத்தை நெருங்க நெருங்க...

- எஸ். ஏ. கப்பார்.

(18-12-2022 ஞாயிறு தமிழன் - வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. ஆசிரிய பீடத்திற்கு மிக்க நன்றி.)


No comments: