Tuesday, February 9, 2021

விரட்டிடுவோம் கொரோனாவை!

 

விரட்டிடுவோம் கொரோனாவை!

 உயிர்கொல்லி கொரோனா போல்

உயருள்ளம் நமக்கும் வேண்டும்

ஏழை பணக்காரன்

உயர்ந்தோன் தாழ்ந்தோன்

படித்தவன் படிக்காதவன்

வெள்ளையன் கறுப்பன்

முதியோன் இளையோன்

ஆடவர் பெண்டிர் என்றெல்லாம்

பேதம் பார்ப்பதில்லை

பேரிடியாய் வந்த இந்தக் கொரோனா.

 

கொரோனா போல்

கொந்தளிக்கும் வீரம் வேண்டும்

வீழ்த்த வீழ்த்த வீரியங் கொண்டெழும்

வேட்கை நமக்கும் வேண்டும்.

 

மானிடராய்ப் பிறந்த நாம்

மரிப்பதற்கென்றுதான் பிறந்தோம்

எரிந்து சாம்பலாகி

ஏழனப் படுவதற்கல்ல.

 

கனவு மெய்ப்படும் வாழ்வு வேண்டும்

காலமெலாம் நம்வாழ்வு மேம்பட வேண்டும் - ஆதலால்

கொரோனாக் கொலைக்களம் தவிர்த்து

கௌரவமாய் வாழத் துணிந்திடுவோம்.

 

நீயும் நானும் தாயும் சேயும்

நலமுடன் மீள வேண்டுமென

நாயனை வேண்டி நிற்போம்

மானிட உணர்வுகளை

மதித்து நடப்போம்

மக்களுடன் மக்களாய்

மகிழ்வுடன் வாழப் பழகிடுவோம்.

 

பெரும்பான்மை சிறுபான்மை

பேதம் நமக்கு வேண்டாம்

சாதி மத ஏற்றத்தாழ்வும்

சதவீதமும் நமக்கு வேண்டாம்.

 

கைகளை நன்கு கழுவிடுவோம்

முகத்தினை முறையாக மூடிடுவோம்

கூடுவதைத் தவிர்த்திடுவோம்

தள்ளி நின்றும் வேடிக்கை பார்க்காது

ஒன்றுபட்டு விரட்டிடுவோம்

பாடம் புகட்டவந்த கொரோனாவினை

பாரில் நின்றும் வெகு தூரம்.

 

- கவிஞர் எஸ். ஏ. கப்பார்,

 மருதமுனை.

என்ன வாழ்க்கையிது!

 என்ன வாழ்க்கையிது!
 
ஆடுகள் மாடுகள்
அணில்கள் ஓணான்கள்
பறவைகள் வண்ணத்துப் பூச்சிகள்
அத்தனையும் உல்லாசமாய்
ஆரவாரமின்றி திரிகின்றனவே... அந்தச்
சின்னச் சிறு மான்களின்
கால்கள் எவ்வளவு
இலாவகமாக நடனமாடுகின்றன.
மரஞ் செடிகள் கூட
சப்தமிட்டு கானம் இசைக்கின்றனவே!
 
என் கால்கள் மட்டும்
ஏன் தடுமாறுகின்றன?
முகத்தையும் நன்றாக மூடியிருக்கிறேன்
மற்றவர்களிடமிருந்தும் விலகியிருக்கிறேன்
கைகளைக் கழுவிக் கழுவி
கைகளும் தேய்ந்துவிட்டன.
தனிமைப் படுத்தப்படப் போகிறோம்
என்றதும் தொடை நடுங்குகிறதே!
 
கொலைக்களம் கொண்டு செல்லப்படும்
மனித மிருகமாகிவிட்டேனா?
அங்கு சென்றதும் வீடு செல்வேனா? மன்னிக்கவும்
கருகி மடியும் காலன்மடி செல்வேனா?
என் நெஞ்சை ஏதோ இறுக்கிப் பிடிக்கிறதே
என்ன சோதனை இறைவா!
 
நாதியற்ற ஏழைகளின் வாழ்க்கையென்பது
நாளடைவில் நாறிப்போகும் என்பது
நாமறிந்த உண்மைதானா?
என்ன வாழ்க்கையிது
என்னையே முறைத்துப் பார்க்க
வேண்டும் போலிருக்கிறது.
 
படைத்தவனிடம் முறையிடுவோம்
பயம் கவலை தவிர்ப்போம்
இல்லையென்று சொல்லும் மனம்
இல்லாதவன் இறைவன் அவனொருவனே!
 
கவிஞர் எஸ். ஏ. கப்பார்.