Tuesday, February 9, 2021

என்ன வாழ்க்கையிது!

 என்ன வாழ்க்கையிது!
 
ஆடுகள் மாடுகள்
அணில்கள் ஓணான்கள்
பறவைகள் வண்ணத்துப் பூச்சிகள்
அத்தனையும் உல்லாசமாய்
ஆரவாரமின்றி திரிகின்றனவே... அந்தச்
சின்னச் சிறு மான்களின்
கால்கள் எவ்வளவு
இலாவகமாக நடனமாடுகின்றன.
மரஞ் செடிகள் கூட
சப்தமிட்டு கானம் இசைக்கின்றனவே!
 
என் கால்கள் மட்டும்
ஏன் தடுமாறுகின்றன?
முகத்தையும் நன்றாக மூடியிருக்கிறேன்
மற்றவர்களிடமிருந்தும் விலகியிருக்கிறேன்
கைகளைக் கழுவிக் கழுவி
கைகளும் தேய்ந்துவிட்டன.
தனிமைப் படுத்தப்படப் போகிறோம்
என்றதும் தொடை நடுங்குகிறதே!
 
கொலைக்களம் கொண்டு செல்லப்படும்
மனித மிருகமாகிவிட்டேனா?
அங்கு சென்றதும் வீடு செல்வேனா? மன்னிக்கவும்
கருகி மடியும் காலன்மடி செல்வேனா?
என் நெஞ்சை ஏதோ இறுக்கிப் பிடிக்கிறதே
என்ன சோதனை இறைவா!
 
நாதியற்ற ஏழைகளின் வாழ்க்கையென்பது
நாளடைவில் நாறிப்போகும் என்பது
நாமறிந்த உண்மைதானா?
என்ன வாழ்க்கையிது
என்னையே முறைத்துப் பார்க்க
வேண்டும் போலிருக்கிறது.
 
படைத்தவனிடம் முறையிடுவோம்
பயம் கவலை தவிர்ப்போம்
இல்லையென்று சொல்லும் மனம்
இல்லாதவன் இறைவன் அவனொருவனே!
 
கவிஞர் எஸ். ஏ. கப்பார்.

No comments: