Friday, December 1, 2023

சிறுகதை 7 - தோழி ஜெனீறா.

 சிறுகதை.

தோழி ஜெனீறா.

இன்று தோழி ஜெனீறாவின் மகளின் திருமணம். மனைவியும் நானும் பிள்ளைகளுடன் திருமண மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

ஜெனீறாவும் நானும் ஒன்றாக ஒரே பாடசாலையில் படித்தவர்கள். தரம் ஆறு தொடக்கம் உயர்தர வகுப்பு வரை இரண்டொரு ஆண்டுகள் தவிர, ஏனைய அனைத்து ஆண்டுகளிலும் ஒரே வகுப்பறைதான்.

எங்களது வகுப்பு மாணவிகளில் ஜெனீறா மிக அழகானவள். திறமைசாலி. கள்ளங் கபடமற்றவள். எல்லா மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் அன்பாகப் பழகுபவள். க.பொ.த. (சாஃத) பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் அதி விசேட சித்திபெற்று பாடசாலைக்கு நன்மதிப்பைப் பெற்றுக் கொடுத்தவள். 

தொடர்ந்து அதே பாடசாலையில் உயிரியல் உயர்தரப் பிரிவில் சேர்ந்து கல்வி கற்றோம். க.பொ.த. (உஃத) பரீட்சையில் மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்றிருந்தும் எங்கள் இருவருக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. 

ஏதாவது அரச தொழிலொன்றைப் பெறும் நோக்கத்தில் நான் இரண்டாவது முறையாக பரீட்சைக்குத் தோற்ற விரும்பவில்லை. ஆனால் ஜெனீறா இரண்டாவது முறையும் தோற்றி, பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் சென்றுவிட்டாள். அதன் பின் அவளை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.

சில மாதங்களுக்குள் எதிர்பாராதவிதமாக எனக்கும் ஓர் அரச தொழில் கிடைத்தது. தொழில் கிடைத்தவுடன் வீட்டில் என் பெற்றோர்கள் எனக்குத் திருமணம் முடித்துவைக்க விரும்பி அவசரப்படுத்தினார்கள்.


''அம்மா! திருமணத்துக்கு இப்ப என்ன அவசரம்? உத்தியோகம் கிடைத்து இரண்டொரு வருஷமாவது போகட்டுமே. நானும் கையில ஏதாவது சேர்த்துக்கிட்டு கல்யாணம் முடிக்கிறது நல்லதுதானே அம்மா!'' என்றேன்.

''சரி மகன். உன்ட தங்கைச்சிக்கும் இருபத்து மூன்று வயசாகிறது. எங்களுக்கும் வயசாயிடுச்சு, அதுதான் எங்கட கண்ணோட இருவரினதும் கல்யாணத்தை முடிச்சிடலாமென நினைக்கிறோம். காலா காலத்தில அவளுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து முடிச்சிடணும். அவ என்னடாவெண்டா அண்ணா முடிச்ச பொறகுதான் முடிப்பேன் என்று அடம்பிடிக்கிறா.'' 

அம்மா அழாக்குறையாகக் கூறினாள்.

அம்மாவின் வார்த்தைகளும் நியாயமாகத்தான் இருந்தன. தொடர்ந்து அப்பாவும் வற்புறுத்தத் தொடங்கினார். நான் ஒத்துக்கொள்ளாதது அப்பாவுக்குச் சங்கடமாக இருந்தது. நான் யாரையாவது விரும்பிக்கொண்டிருக்கிறேன் என்ற சந்தேகமும் அப்பாவுக்கு ஏற்பட்டது. எனது நண்பர்களை அணுகி விசாரித்திருக்கிறார். ஜெனீறாவும் நானும் நல்ல நண்பர்கள் என்றும் ஒருவேளை அவளை நான் விரும்பலாம் என்றும் அதனால் ஜெனீறாவின் பெற்றோரிடம் ஒரு முறை கேட்டுப்பாருங்கள் என்றும் அப்பாவிடம் கூறியிருக்கிறார்கள். அப்பாவும் ஜெனீறா வீட்டுக்குச் சென்று விசாரித்திருக்கிறார். ஜெனீறாவின் அம்மாவுடன் கதைத்திருக்கிறார்.

இந்த விடயம் ஒரு விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த ஜெனீறாவைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்றபோதுதான் எனக்குத் தெரியவந்தது.

''டேய்! எப்படி இருக்காய்டா. தொழில் எல்லாம் நல்லம்தானே? அவசரமா உனக்கு பொண்ணு பாக்கிறாங்களாமே? உண்மைதானா? எங்க அம்மாதான் சொன்னா. உங்க அப்பாதான் உனக்கு நல்ல பொண்ணொன்று பார்க்கவேண்டுமென்று அம்மாக்கிட்ட சொன்னாராம்.'' 

சொல்லி முடித்த ஜெனீறா கலகலவெனச் சிரித்தாள். 

நீயும் நல்ல பொண்ணுதானே எனச் சொல்ல நினைத்த என்னை நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட அவளது கள்ளமில்லாச் சிரிப்பொலி தடுத்து நிறுத்திவிட்டது.

எனது அப்பாவும் அவளது அம்மாவும் எவ்வளவு நாகரீகமாகவும் பண்பாகவும் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது அவர்கள் மீது எனக்குப் பெரும் மரியாதை ஏற்பட்டது.

நான் அமைதியாக இருந்தேன். அவதானித்த ஜெனீறா,

''நான் படிப்பை முடித்து பட்டம் பெற்று ஒரு தொழிலைப் பெற வேண்டும். அதற்குப் பிறகுதான் என்ட கல்யாணம். எப்படியோ மூன்று நாலு வருஷம் போகும்.'' என்றாள்.

ஜெனீறா நாசூக்காக அவளது முடிவைச் சொல்லுகிறாள் எனப் புரிந்துகொண்டு அவளிடமிருந்து விடைபெற எழுந்தேன். 

''டேய்! கல்யாணத்தை நான் விடுமுறையில நிற்கிற நாளாப் பாத்து வைச்சிடுடா. நானும் கலந்துகொள்ள வேணுமில்ல.'' 

மீண்டும் கலகலவெனச் சிரித்தாள். முத்துக்கள் தெறித்தது போலிருந்தது அவளது சிரிப்பு.

நானும் பதிலுக்குப் போலிச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு விடைபெற்றேன்.

ஓரிரு மாதங்களில் எனக்குத் திருமணம் நடந்தேறியது. மனைவியும் அரச நிறுவனமொன்றில் தொழில்புரிபவள். 

திருமணத்தின் பின் எங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. ஆணொன்று பெண்ணொன்று என இரு பிள்ளைகள். இருவரும் தற்போது பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரிகள். தொழில் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தொழில் கிடைத்தபிறகுதான் திருமணம் என்று சொல்லிவிட்டார்கள்.

என் திருமணம் நடந்து இரண்டு வருடங்களில் என் தங்கை மற்றும் ஜெனீறா ஆகியோரின் திருமணங்களும் இனிதே நடைபெற்றன. ஜெனீறாவின் திருமண நிகழ்வில் அப்பா, அம்மா, மனைவியுடன் சென்று கலந்துகொண்டேன்.

ஜெனீறாவின் குடும்பத்துடனான உறவு மேலும் மேலும் வலுப்பெற்றது. ஜெனீறாவின் கணவர் ஒரு மின் பொறியியலாளர். பண்பானவர். எங்களது குடும்ப நன்மை தீமை எல்லாவற்றிலும் தராதரம் பாராது கலந்துகொள்பவர். ஜெனீறாவின் தூய்மையான நட்பு பல ஆண்டுகள் கடந்தும் ஓர் அணுவளவுகூட மாறவில்லை.

இன்று ஜெனீறாவின் மகளின் திருமணம். என் மகளைவிட இரண்டு வயது இளையவள். நானும் மனைவியும் கல்யாண மண்டபத்தை நோக்கி குடும்ப சகிதம் சென்றுகொண்டிருக்கிறோம்.

திருமண மண்டபத்தை அடைந்ததும் யாருமே எதிர்பாராவண்ணம் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டு 

என் இளைய மகனைக் கூட்டிச்செல்கிறான் ஜெனீறாவின் மூத்த மகன்.

என் மனைவியும் ஜெனீறாவும் வியப்பு மிகுதியால் அவர்களையே பார்த்து நின்றனர்.

- எஸ். ஏ. கப்பார்.

29-05-2023

(04-06-2023 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)

No comments: