Monday, February 1, 2010

Kallai Samainthu

கல்லாய்ச் சமைந்து...

வாசல் தோறும் உன்வரவை
எதிர்பார்த்துக் காத்து நிற்பேன்
யாசகம் என்றெண்ணி எட்டிநிற்பாய்.

அண்ணன் வருகை கண்டு
அண்ணார்ந்து பார்க்கும் நீ
அந்நியமாய் எனைக் காட்டிக்கொள்வாய்.

மழையென்று மரத்தடி ஒதுங்கி
தளையொன்றை உசுப்பி விட
ஏளனமாய் எனைப் பார்ப்பாய்.

கடலை வண்டிக் காரனிடமும்
கச்சான் விற்கும் சிறுவனிடமும்
கண்ணசைத்து ஜாடை காட்டிடுவாய்.

உனை ஆவலாய் முத்தமிட
நெருங்கும் போதெல்லாம் நீயென்னை
அரைவேக்காடு அசிங்கம் என்பாய்.

ஆசையாய் உன் கரம்பிடித்து
அன்பு மொழி பேசி
அழகழகாய் ஐந்தாறு பெற்றெடுத்து
அரசாள எண்ணி யிருந்தேன்.

சுனாமிப் பேயலை வில்லனாய்மாறி
உனை சுருட்டிச் சென்றபோது
கல்லாய்ச் சமைந்து நின்றேன்
எல்லாக் காலமும் போல்.

No comments: