Monday, February 1, 2010

Sari Paathi

சரி பாதி

பள்ளி நாட்களில் உன்னை
பாதி என்றுதான் சொல்வோம்
பாணிலும் பாதி கேட்பாய்
பல்லிமிட்டாயிலும் பாதி கேட்பாய்.

அப்பியாசக் கொப்பியிலும் பாதிகேட்பாய்
அழி இறப்பரிலும் சரிபாதிகேட்பாய்
அள்ளியுண்ணும் உணவிலும் நீ
அரைவாசி கேட்பாய் அன்பாக.

பின் அன்பிலும் பாதிகேட்டதனால்
ஆண்டிறுதிப் பரீட்சை தனை
ஆளுக்கு அரைவாசி பூர்த்திசெய்து
ஆசையாய் கரம் பிடித்தோம்.

அழகழகாய் அன்புச் செல்வங்கள்
ஆளுக்கு இரண்டு என
ஆண் இரண்டும் பெண்ணிரண்டும்
அதிசயமாய்ப் பெற் றெடுத்தோம்.

ஆழிப் பேரலை உன்னைமட்டும்
ஆவேசமாய் அள்ளிச் சென்றபோது
கையாலாகா அரை உயிராய்
கதிகலங்கி நின் றிருந்தேன்.

நிவாரணங்கள் நிறையவே வந்தபோது
நிஜமாக உனை நினைத்து
சரியாக பாதிதனை கொடுத்துவிட்டேன்
சண்டாள சனியன்களுக்கு இலஞ்சமாக!

No comments: