19. மனித நேயம்.
கடந்த இரு
மாதங்களாக நல்ல மழை. விளை நிலமெல்லாம் நீர்தேங்கி வடிந்தபாடில்லை.
பத்து
வருடங்களுக்கு மேலாக பதுருத்தீன் முதலாளியின் மரக்கறித் தோட்டத்தில் வேலை
செய்துவருகிறேன். என்னுடன் மேலும் ஆறு பேர் வேலை செய்கிறார்கள். மழைக் காலங்களில்
ஓரிரு மாதங்கள் இப்படி ஏற்படுவதுண்டு. தோட்டம் முழுவதும் மழை நீர் தேங்கிநின்று
கத்தரி, வெண்டி, பாகை, தக்காளி, மிளகாய் போன்றன அழுக ஆரம்பித்துவிடும். அறுவடைக்கு
ஒரு வாரம் இருக்கும் வேளைகளில் மழை பெய்தாலும் அன்றி வெள்ளம் தேங்கி நின்றாலும் எப்படியோ
அறுவடைசெய்து சந்தைகளுக்குக் கொண்டுசென்று மீள் விற்பனை செய்யும் வியாபாரிகளிடம்
கொடுத்துப் பணமாக்கிக்கொள்வார் எங்க
முதலாளி. ஆனால் இம்முறை அதிக மழையால் பல வீதிகள் சேதமடைந்து போக்குவரத்தும்
பாதிக்கப்பட்டதால் மரக்கறிகளைக் கொள்வனவு
செய்ய வியாபாரிகள் வரவில்லை. இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் மரக்கறிகளின்
விலை விஷம் போல் ஏறி மூன்று நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
நேற்று முதலாளி
எங்களை அழைத்து,
“இந்த வாரம்
பறித்த மரக்கறி எல்லாம் வீட்டில அப்படியே தேங்கிக்கிடக்கு. வித்துக் காசாக்க
முடியல்ல. வியாபாரிமார்களும் வரல. நாளைக்கு உங்களுக்கு இந்த வார சம்பளமும் தரவேணும். அது பிரச்சினையில்லை. நாளைக்கு
உங்க எல்லாருடையதும் சம்பளத்த வந்து வாங்கிட்டுப்போங்க. நான் இப்ப சொல்லவாரது என்னவென்றா நேத்து, முந்தயநாள் பறித்து வீட்டில
கிடக்கிற மரக்கறிகள் இனி வெச்சிருக்க முடியா. அழுகிப்போயிடும். அதனால கொஞ்சத்த
நீங்க ஆறு பேரும் வீட்டுக்கு எடுத்திட்டுப்போங்க. ஒங்கட சாதி சனத்துக்கும்
கொடுங்க. வெள்ளயன் சமீம் வரல்லபோல. அவனுக்கும் கொடுத்திடுங்க. மிச்சத்த நம்மட ஊரில
ரெண்டு மதரஸா இருக்கு. பக்கத்து கிராமத்திலே ஒரு முதியோரில்லமும் இருக்கு.
அவங்களுக்கு கொண்டு கொடுத்திட்டு வாங்க. திரும்பவும் மழை வரும்போல இருக்கு. நீயும்
காதரும் இந்த வேலையப் பாருங்க.” என என்னை நோக்கி கூறிவிட்டு உள்ளே சென்றார்.
முதலாளி
மிகவும் நல்ல மனிதர். கோபப்படமாட்டார். ஏசமாட்டார். பொய், களவு, ஏமாற்று வேலைகள்
அவருக்குப் பிடிக்காது. மனைவி மக்களுடன் மிகவும் அன்பாக இருப்பார். அவரது சொந்த
பந்தங்களுக்கெல்லாம் உதவிசெய்வார். அவரது வேலைக்காரர்களுக்கும் நல்லா
உதவிசெய்வார். இந்த மரக்கறித் தோட்டம் முதலாளியின் வாப்பா கஷ்டப்பட்டு உருவாக்கியதென்று
அடிக்கடி சொல்வார். தான் உயர்கல்வி வரையும் படித்து, படிப்பைத் தொடராது வெளிநாடு
சென்று சிலகாலம் வேலை பார்த்ததாகவும் சொல்லக் கேட்டதுண்டு. முதலாளியின் வாப்பா
காலமான பிறகுதான் ஊருக்கு வந்து வாப்பா செய்த தொழிலைத் தொடர்ந்ததாக எங்களுடைய மாமா
சொன்ன ஞாபகம் உண்டு.
முதலாளியின் விருப்பப்படி,
நானும் காதரும் மரக்கறிகளைப் பகிர்ந்துவிட்டு எங்களது பங்குகளையும்
எடுத்துக்கொண்டு வீடுகளுக்குச் சென்றோம்.
“ரெண்டுமூணு மாசமா
சப்பாத்து வாங்கித்தாங்க, சப்பாத்து வாங்கித்தாங்கெண்டு என்னப்போட்டு நார்
உரிக்கான். பள்ளிக்க பிள்ளைகளெல்லாம் பழிக்கானுகளாம். ரீச்சரும் ஏசினவாம். சாப்பாடில்லாட்டியும்
பரவாயில்ல. அத மொதல்ல வாங்கிக்கொடுங்க.” – உள்ளே நுழையுமுன் மனைவியின் கண்டிப்பான
குரல் என்னை மௌனிக்கவைத்தது.
“நாளை முதலாளி
சம்பளம் தருவதாகக் கூறியிருக்கிறார். சம்பளத்துடன் ஒரு மூவாயிரம் மேலதிகமாகக்
கேட்டுப்பார்ப்போம். நிச்சயம் தருவார். அடுத்த இரண்டு மூன்று மாதச்சம்பளத்தில்
கடனைத் திருப்பிக்கொடுத்திடலாம்.”
–
முணுமுணுத்தவாறு உள்ளே சென்றேன்.
அடுத்த நாள்
சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு அரிசிக் கடைக்கும் மளிகைக் கடைக்கும் கொடுத்துவிட்டு
மேலதிகமாகப் பெற்ற மூவாயிரம் ரூபாவை சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டு,
பொழுதுசாயும் நேரமாகையால் வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன்.
“வாப்பா கெதியா
வாங்க. உம்மா வாசல் படிக்கட்டில் சறுக்கிவிழுந்து காயம். நடக்க ஏலாம இருக்காங்க.
பக்கத்து வீட்டு ராகில் மாமிதான் பாத்துக்கிருக்காங்க. வாங்க கெதியாப்போவம்.” எனக்
கூறியவாறு கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.
வீட்டையடைந்ததும்
மனைவி படும் வேதனையைச் சகிக்கமுடியாமல் பக்கத்திலுள்ள சிறிய ஆஸ்பத்திரிக்கு
அழைத்துச்சென்றேன்.
“நோயாளிட கணவர்
யாரு? இங்க வாங்க. தந்த மருந்துகளை நேரம் தவறாம கொடுங்க. பிரச்சின ஒன்றுமில்ல.
அடிபட்ட காயம்தான். இரண்டு நாளிலே சரியாகிப்போயிடும். இந்தத் துண்ட பாமசியில
கொடுத்து அதில எழுதியிருக்கிற மருந்த வாங்கிக்கொடுங்க.” எனக் கூறியவாறு வைத்தியர்
என்னிடம் ஒரு துண்டை நீட்டினார்.
மருந்துத்
துண்டைப் பெற்றுக்கொண்ட நான், “ஐயா, வெளியில மருந்துவாங்க பணம் இல்ல.
ஆஸ்பத்திரியில இருந்தா கொடுங்க. நான் மரக்கறி தோட்டத்தில வேலை செய்யிறவன். காசு
கொடுத்து மருந்துவாங்க ஏலாது, ஐயா. என்ட மகன் சப்பாத்து வாங்கித் தரச்சொல்லி
மூணுநாலு மாசமா கரச்சல் படுத்துறான். மொதலாளிக்கிட்ட சொல்லி சப்பாத்து வாங்க இப்பதான்
கடன் வாங்கிவாறன். சப்பாத்து இல்லாட்டி பள்ளிக்குப் போகமாட்டேனென்று அழுறான். வேறு காசில்ல ஐயா.” வெட்கத்தைப் பாராமல்
புலம்பினேன்.
“நாங்க என்ன
செய்யமுடியும். இப்ப முன்புபோல ஆஸ்பத்திரியிலே எல்லா மருந்தும் இல்ல. இருந்தா
நாங்க தருவோம்தானே. அநேகம் பேர் கடையிலதான் வாங்குறாங்க” மனமுடைந்ததுபோல
கூறிவிட்டு இருக்கையில் சாய்ந்தார் வைத்தியர்.
செய்வதறியாது
நின்ற என்னைப்பார்த்த வைத்தியர் “அந்த மருந்த இரவைக்கு கொடுத்தால்தான் நோவு
குறையும். ஆயிரத்து அறுநூறு ரூபா மட்டில வரும். போய் எடுத்து வாங்க.” எனக்
கூறியதும் மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் நான் வீட்டுக்கு நேராக
வருவதாகவும் மகனிடம் சைகை காட்டிவிட்டு பார்மஸியை நோக்கி விரையலானேன்.
பார்மஸியிலிருந்து
வீடுவந்த நான், மனைவி இன்னும் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பாததால் எதற்கும் போய்ப்
பார்த்துவருவோமென நினைத்து வெளியே வந்தபோது, மகன் ஒரு பெரிய பையுடன் என்னை நோக்கி
ஓடிவந்து “வாப்பா, டொக்டர் மாமா என்ன கூப்பிட்டு விசாரிச்சு அவர்ட காரில
ஏத்திச்சென்று அழகான சப்பாத்தும் சொக்சும் வாங்கித்தந்தார். அவருக்கும் என்ற வயசுல
ஒரு மகன் இருக்கானாம். அவனும் நாலாம் வகுப்புத்தானாம்” என்றான். – அவனது
மகிழ்ச்சிக்கு முன் நான் தலைகுனிந்தேன்.
“இன்னும் மனித
நேயம் செத்துப்போகல்ல” என நினைக்கும்போது என் கண்கள் பனிக்கத் தொடங்கின.
- எஸ். ஏ. கப்பார்.
பிரான்ஸிலிருந்து வெளிவரும் ‘தமிழ்நெஞ்சம்’ நவம்பர் 2024 தீபாவளிச் சிறப்பிதழில் எனது ‘மனித நேயம்’ சிறுகதை பிரசுரமாகியுள்ளது. அதன் பிரதம ஆசிரியர் அமின் மொஹமட் அவர்களுக்கும் அதன் ஆசிரியர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

No comments:
Post a Comment