Monday, January 5, 2026

இறைவனின் நாட்டம்.

 

20. இறைவனின் நாட்டம்.

சமீமா இம்முறையும் போட்டிப் பரீட்சை எழுதிவிட்டு வீடுவந்து சேர்ந்தபோது ஆறு மணியாகிவிட்டது. இது அவளெழுதிய ஐந்தாவது போட்டிப் பரீட்சை. பல்கலைக் கழகப் பட்டம் பெற்றதன்பின் ஏற்கனவே நான்கு போட்டிப் பரீட்சைகளுக்கு முகங்   கொடுத்துள்ளாள். மூன்று நேர்முகத்தேர்வுகளுக்கும் சமுகமளித்துள்ளாள். போட்டிப் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு முகங்கொடுத்துவிட்டு ஆவலுடன் காத்துக்கிடந்ததைத் தவிர வேறு எதையும் காணவில்லை. அவளுடன் போட்டிப் பரீட்சைகளுக்குச் சென்ற பக்கத்து வீட்டு பரீனா, இரண்டு தெரு தள்ளி வசிக்கும் மசிஹா எல்லாம் உத்தியோகம் பெற்று இரண்டு வருடங்களாகிவிட்டன. திருமணமும் முடித்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவர்களெல்லாம் சமீமாவைவிட போட்டிப் பரீட்சையில் குறைந்த புள்ளிகள் பெற்றவர்கள். எப்படித்தான் உத்தியோகம் பெற்றார்களென சமீமா அடிக்கடி யோசிப்பதுண்டு.

நேர்முகத் தேர்வு முடிந்து வீடு வந்ததும் முதலில் உம்மா ஓடிவந்து சமீமாவை உச்சி முகர்ந்து ஆறுதல் வார்த்தைகள் கூறுவாள். வாப்பா வீட்டிலிருந்தால் நன்கு விசாரித்து உற்சாகப்படுத்துவார். இன்று அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. உம்மா வாப்பா வீட்டிலதான் இருந்தார்கள். இருவரும் ஏதோ உரையாடுவது தெரிந்தது. “உம்மா, நான் வந்துட்டேன்” எனக் கூறிக்கொண்டு அவர்களை நோக்கிச் சென்றாள், சமீமா.

“எத்தனை பரீட்சைக்குத்தான் போய்வந்துட்டே. அவ்வளவுதான் மிச்சம். ஒன்னோட  சோதின எழுதினவளெல்லாம் உத்தியோகமும் எடுத்து கலியாணமும் பண்ணி புள்ளையும் பெத்துப்போட்டாளுகள். ஒனக்கு  மட்டும்தான்  இந்தக்கெதி.” – உம்மா அலுத்துக் கொண்டாள்.

“நான் என்ன செய்யிற உம்மா. அவளுகளுக்கெல்லாம் வாப்பா, காக்காமார் அவங்களுக்குத் தெரிஞ்ச அரசியல்வாதிகள, உயரதிகாரிகளப் புடிச்சி எப்படியோ எடுத்துக்கொடுக்கிறாங்க. எனக்கு யார் இருக்கா?” – சமீமாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“அதுதான் நானும் உங்க வாப்பாக்கிட்ட சொல்லுற. யாரையாவது புடிச்சி காசையாவது குடுத்து அவள்ள பிரச்சினயப் பாருங்கெண்டு. கேட்டாத்தானே. அல்லாஹ் நாடினதுதான் நடக்கும். அவளுக்கெண்டு ஒண்டு இல்லாமலா போயிடும். பாப்பம் பாப்பம் எண்டு காலத்தக் கடத்துறார். ஒண்ட தம்பியும் சயன்ஸ்தான்  படிக்கான். அவன நெனச்சாலும் பயமாத்தான் இருக்கு.” – பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ  என்ற கவலை சமீமாவின் உம்மாவுக்கு.

******

மூன்று மாதங்களின் பின் ஒரு காலைவேளை, சமீமாவின் தம்பி அவசர அவசரமாக சமீமாவின் அறைக்குள் நுளைந்து “தாத்தா, நீங்க போன இன்ரவியூ ரிசல்ட்ஸ் இணையத்திலே வெளியாகியிருக்காம். எண்ட பிறண்ட் றமீஸ் சொன்னான். அவன்ட நானாவுக்கும் கிடைச்சிருக்காம்.” எனக் கூறிவிட்டு நகர்ந்து சென்றான், தம்பி சமீர்.  

சமீர் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருப்பவன். காலத்தை வீணடிக்காது ஆங்கிலம் மற்றும் கணினிக்கல்வி வகுப்புகளுக்குச் சென்றுவருகிறான். தானும் தன்பாடும், வீடும் வகுப்புமென வாழ்ந்து வருபவன்.

சமீமாவுக்குக் கைகள் உதற ஆரம்பித்தன. இலேசாகப் பயமும் தொற்றிக்கொண்டது. இம்முறையாவது எடுபட்டுவிடவேண்டுமென இறைவனைப் பிராத்தித்தவளாக, கையடக்கத் தொலைபேசியில் இணையத்தை அணுகியவளின் முகம் வாடிப் போனது.

“சீ.. இம்முறையும் கிடைக்கவில்லை. நான் என்ன பாவம் செய்தேன். உம்மா வாப்பா என்னப் படிப்பித்து ஒரு பட்டதாரியாக்கி ஒரு தொழில் எடுத்தா என்னக் கல்யாணம் முடிச்சிக் கொடுத்திட்டு நிம்மதியா இருக்கலாமெண்டு கனவுகண்டாங்க. எண்ட கஷ்டகாலம் அவங்களையும் போட்டாட்டுது. அத நெனச்சாத்தான் பெரும் கவலையாயிருக்கு. மாப்பிள கேட்டுப்போனாலும் பொண்ணு என்ன உத்தியோகம் பாக்கிறா எண்டுதான் முதல்ல கேக்கிறாங்க. நான் கலியாணம் முடிக்காவிட்டாலும்  பரவாயில்ல. எப்படியாவது ஒரு தொழில அல்லாஹ் தருவான். தம்பிக்காவது நல்ல ரிசல்ட்ஸ் கிடைச்சுடனும். யூனிவர்சிடிலே நல்லதொரு இடங்கிடைச்சு படிப்ப முடிச்சிட்டானென்றால்  உம்மா வாப்பாவ நல்லா பாத்துக்குவான்.” – மனதில் பெரும் பாரத்தைச் சுமந்தவளாக, கவலைகள் எல்லாவற்றையும் படைத்தவனிடம் ஒப்படைத்துவிட எண்ணி, மதியநேர தொழுகையழைப்புக் காதில் விழும்வரை கட்டிலில் மெதுவாகச் சாய்ந்தாள்.

கையடக்கத் தொலைபேசி அலறியபோதுதான் கண்விழித்துப் பார்த்தாள். தொழுகை நேரம் கடந்துவிட்டதையறிந்து, அழைப்புக்குப் பதிலளித்துவிட்டுத் தொழுவோம் என எண்ணி அவசரமாக ‘ஹலோ’ என்றாள். சமீமாவின் தோழி பர்கானா நியூசிலாந்திலிருந்து அழைத்துக்கொண்டிருந்தாள்.

“சமீமா. அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு குட் நியூஸ். எண்ட மச்சான் வேலை செய்ற கம்பனியில வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு பத்து வீதம் இடம் கொடுக்கிறாங்க. நல்ல சான்ஸ். நல்ல சம்பளம். உன்னப் போல கெட்டிக்காரிகளுக்கு நல்ல வாய்ப்பு. உனக்கு இங்லிஷ், கொம்பியூட்டர் எல்லாம் தெரியுமென்பதால வேலை செய்யிறதும் லேசு. நான் ஒண்ட தகவல்கள கொடுத்திருக்கேன். இப்ப, நான் வட்ஸ்அப்பில கேட்டிருக்கிற இன்ஃபர்மேஷன் எல்லாத்திடயும் ஒரிஜினல் எடுத்து ஸ்கேன் பண்ணி நாளைக்கே வட்ஸ்அப் பண்ணு. பாஸ்போட் இருப்பதால அதுவும் லேசு. டிக்கட், விசாவெல்லாம் எண்ட பொறுப்பு.”

- அவள் பட படவெனத் தொடர்ந்தபோது சமீமாவுக்கு வியத்துக்கொட்டியது.

“அதில்ல பர்கானா. வெளிநாட்டுக்குப்போய் வேலைசெய்ய உம்மா வாப்பா சம்மதிப்பாங்கண்டு தெரியல்ல. அதுவும் குமர்ப்பிள்ளை. அதுதான் யோசிக்கிறேன்.”

“அட.. அங்ககெடந்து என்ன செய்யப்போற. எடுக்கிற சம்பளம் பத்து நாளைக்கும் காணாது. நானும் குமர்ப்பிள்ளையாத்தானே வந்தேன். அதக்கப்புறம்தானே பொண்ணுகேட்டு வந்தாங்க. நான் புருஷன் புள்ளயளோட நல்லாத்தானே இருக்கேன்.  விடு.. நான் இரவைக்கு உம்மா வாப்பாவோட கதைக்கேன். நீ ரெடியாகு. விஸ் யு மெனி மோர் கெப்பி லைப்.” எனக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தாள்.

*****

பல போராட்டங்களுக்கும் விவாதங்களுக்கும் மத்தியில் கண்ணீருடன் குடும்பத்தைப் பிரிந்து தொழிலுக்காக வெளிநாடு சென்ற சமீமா, ஒரு வருடத்துக்குள் தன் தம்பியை வைத்தியத்துறையில் கல்விகற்க ரஷ்யாவுக்கு அனுப்பிவைத்தாள்.  அவனும் நன்றாகக் கற்றுவருகிறான்.

காலம் மிக வேகமாகப் பறந்தோடியது. சமீமாவும் அங்கேயே தான் வேலைசெய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் நம் நாட்டைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரைத் திருமணம் முடித்து, இன்னும் இரு வாரங்களில் இரட்டைச் சமீமாக்களைப் பெற்றெடுக்கப்போகிறாள்.

*****

மகள் சமீமாவையும் பிறக்கப்போகும் தங்களது இரட்டைப் பேரப்பிள்ளைகளையும் நியூசிலாந்து சென்று கண்டு மகிழப்போகும் அவாவில், விமான நிலையம் நோக்கிய இன்றைய பயணத்தை ஆரம்பித்தார்கள், சமீமாவின் பெற்றோர்.  

- எஸ். ஏ. கப்பார்.

*****

( ஜீவநதி இதழ் 252 - மாசி 01-02-2025 மாத இதழில் பிரசுரிக்கப்பட்டது. பிரதம ஆசிரியர் க. பரணீதரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.)

No comments: