Monday, January 5, 2026

எனது மரணம்.

 17. எனது மரணம்.

நான் மரணித்து ஐந்து நாட்கள் என நினைக்கிறேன். 

என் மரணத்தைத் தொடர்ந்து கடந்த மூன்று நான்கு நாட்களாக நான் குடியிருந்த வீட்டில் கேட்ட அழுகுரல்களும் ஆரவாரங்களும் அடங்கிவிட்டன போல் தெரிகிறது. 

மூத்தவளினதும் இளையவளினதும் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து ஓடி விளையாடுகின்றார்கள். அவர்களது அம்மா அப்பாவின் குரல்களில் தொற்றிக் கொண்டிருந்த கரகரப்பு இன்னும் தீரவில்லை போலும். முகங்கள் வாடிப்போய் இறுக்கமாக இருக்கின்றன. 

எனது ஒரே மகனின் நடமாட்டத்தைக் காணவில்லை. வழமைபோல் தன் நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்றிருப்பான் போல் தெரிகிறது.

மனைவியின் நினைப்பு இப்போதுதான் வருகிறது. அவளது அறையை எட்டிப்பார்க்கிறேன். அவள் தொழுது கொண்டிருக்கிறாள். அதனால் அவளது பின்புறம்தான் தெரிகிறது. தொழுது முடிந்து எழுந்து வரும் வரை பொறுமையாகக் காத்திருக்கிறேன். திடீரென எழுந்து என்னை நோக்கி வருகிறாள். அவளது கண்கள் கலங்கி முகம் வீங்கியிருக்கிறது. இன்னும் அழுது கொண்டிருக்கிறாள் போல் தெரிகிறது. 

நான் மரணித்து நாற்பது நாட்கள் சென்றுவிட்டன என நினைக்கிறேன்.

நான் வசித்த வீடும் வாசலும் மிகவும் அழகாகத் தோன்றியது. கழுவிச் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். மதிய வேளையில் உறவினர்கள் எல்லாம் வந்திருப்பது போல் தெரிகிறது. ஓரிரு மௌலவிமார்களும் மதரசா மாணவர்களும் திருக் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கிறார்கள். சமையல் வாசனை மூக்கைத் துளைக்கிறது. இன்று 40 ஆவது நாள் திருக் குர்ஆன் ஓதி விருந்து வைக்கிறார்கள் என அனுமானித்துக் கொள்கிறேன்.

மகனின் குரல் கேட்டு நடக்கும் சம்பாஷனையை உற்று நோக்குகிறேன். இது அடுத்த நாளாகத்தான் இருக்க வேண்டும். அதாவது நாற்பத்தோராவது நாள்.

'அந்தப் புத்தகங்கள் எல்லாம் வாப்பாவுடையது. மிகப் பெறுமதியான புத்தகங்கள் எனச் சொல்லியிருக்கிறார். கடலை வண்டிக்காரனுக்கோ பழைய பேப்பர்காரனுக்கோ கொடுக்கக் கூடாது என்றும் பல்கலைக்கழகத்திற்கோ அல்லது  பாடசாலை லைப்ரரிக்கோ மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்றும் என்னிடம் பல தடவைகள் கூறியிருக்கிறார். நீங்க சும்மா இருங்க. அத நான் பாத்துக்கிறேன்.' என மகன் கூறுகிறான்.

'இதையெல்லாம் கொண்டு கொடுக்க நமக்கேது நேரம். பழைய பேப்பர் வேண்டுறவனுக்கு கொடுத்துப் போட்டு வேலையைப் பாக்காம' - மூத்த மருமகனின் குரல் தெளிவாகக் கேட்கிறது.

நான் நிமிர்ந்து பார்க்கிறேன். எனது புத்தக அலமாரி வெறிச்சோடிக் கிடக்கிறது. எத்தனையோ நூல் வெளியீட்டு நிகழ்வுகளுக்கெல்லாம் சென்று, காத்திருந்து போட்டோவுக்கெல்லாம் போஸ் கொடுத்து, பணங் கொடுத்து வாங்கி வந்த கவிதை நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுப்புகள், இந்தியாவுக்குச் செல்வோரிடம் காசு கொடுத்து வாங்கிய நூல்கள், சஞ்சிகைகள் அத்தனையும் தரையிற் பரந்து கிடக்கின்றன.

சுமார் நான்கு வருடங்களின் பின் நான் வசித்து வந்த வீட்டுக்கு வருகிறேன். என்னால் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கிறது. வீட்டின் முகப்பே மாறியிருக்கிறது. ஒரு பெரிய வீடு இரண்டு சிறிய வீடுகளாக மாறியிருக்கிறது. வளவின் இடது பக்க மூலையில் நான் நட்டு நீருற்றி வளர்த்த முருங்கை மரமும் வீதியின் வலது பக்க வளைவில் என்னால் வாங்கிக் கொடுத்து மின்சார சபை ஊழியர் ஒருவரால் பொருத்தித் தரப்பட்ட மின் விளக்கும் எனது வீட்டு வாசலை இலகுவில் அடையாளப்படுத்துகின்றன.

வெளிக் கேற் பூட்டியபடியே காணப்படுகிறது. தள்ளிப் பார்க்கிறேன். திறபடவில்லை. அதனால் கேற் இடுக்கினூடாக உள்ளே பார்க்கிறேன். இரண்டு அழகிய கார்கள் தெரிகின்றன. இரண்டு கார்களையும் நிறுத்துவதற்கேற்ப வீடு மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. ஆளரவம் தெரியவில்லை. மூத்த மகளின் பெயர் கூறி அழைக்க முயன்றபோதும் வாயிலிருந்து சொற்கள் வெளிவர மறுக்கின்றன. சூடான காற்று மட்டுமே வெளிவருகிறது. சுற்றுமுற்றும் நோட்டமிடுகிறேன். ஒருவரையும் காணவில்லை. ஏதோ நினைவு வந்தவனாக எனது பழைய மோட்டார் சைக்கிளைத் தேடுகிறேன். எனது மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. அவ்விடத்தில் வேறொரு அழகிய புதிய ரக மோட்டார் சைக்கிள் பளபளக்கிறது. இது மகனுடையதாக இருக்குமென நினைத்துக் கொள்கிறேன்.

என்ன இது? ஒருவரைக்கூடக் காணவில்லையே என மீண்டும் கவலைப்படுகிறேன். 

திரும்பிவிடும் நோக்கத்துடன் இடது காலைப் பின்னோக்கி வைத்தபோது, ஒரு மரக் கட்டையில் கால் தடுக்கி விழுந்து என் மண்டையில் பலமாக அடிபடுகிறது.

நடுநிசியில் என்ன நடந்தது என அறியாத என் மனைவி அவளது கண்களைக் கசக்கிக்கொண்டு எனது முன் நெற்றியில் ஏதோ தைலம் பூசிக் கொண்டிருப்பதை உணர்ந்து மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன். கட்டிலிலிருந்து விழுந்த எனக்குப் பலமான அடி.

இருந்தும், நான் விரைவில் மரணித்து விடுவதற்கான அறிகுறிக் கனவாக இது இருக்குமோ என நினைத்த போது எனது உடல் இலேசான நடுக்கத்துடன் வியர்க்கத் தொடங்குகிறது. 

(முற்றும்)

- எஸ். ஏ. கப்பார்.

(08-09 2024 ஞாயிறு தமிழன் வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)


No comments: