Monday, January 5, 2026

சாம்பல் நிறப் பூனை.

15.  சாம்பல் நிறப் பூனை.

மூன்று மாதங்களின் பின் இன்றுதான் வீடு வந்து சேர்ந்தேன். 

தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பு ஒன்றுக்காக நானும் எனது சக ஊழியர்கள் மூவரும் கொழும்பிலிருந்து விமானம் மூலம் இந்தியா சென்றிருந்தோம். அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் பணிபுரியும் அலுவலகம் பொறுப்பேற்று செய்துமுடித்து, எங்களை அனுப்பிவைத்தது. பயிற்சி வகுப்புகளும் எவ்வித இடையூறுகளுமின்றி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. நேற்று முற்பகல் நாட்டை வந்தடைந்தோம்.

இந்த மூன்று மாதங்களுக்குள் வீட்டுச் சூழல் முற்றாக மாறியிருப்பதை என்னால் உணர முடிந்தது. வழக்கமாக வீட்டில் சேரும் உணவு மிகுதிகளைக் கொட்டிவிடும் வீட்டின் கிழக்குப்பக்க மூலை, பழைய தட்டு முட்டுச் சாமான்களைப் பாதுகாக்கும் இடமாக மாறியிருந்தது. அம்மாவிடம் விசாரிக்கலாம் என எண்ணி அம்மாவை அழைத்தேன். 

'அம்மா. என்ன இது? மீதி உணவுகளைப் போடும் இடத்தை மறித்து சின்னக் குடில் மாதிரி ஒன்று கட்டி அதற்குள் பழைய சாமான்களெல்லாம் போட்டிருக்கே!' என விசாரித்தேன்.

'இப்பவெல்லாம் மிஞ்சிப்போன உணவுகளை வெளியே போடக்கூடாதாம். பாதுகாப்பா சேர்த்துவைத்து குப்பை அள்ளவாற வண்டியிலதான் போட வேண்டுமாம். ஒண்ட அக்காதான் சொன்னா. அதனாலதான் குப்பை போட்ட இடத்தை துப்புரவாக்கி உங்க அக்கா அவட புருஷனோடு சேர்ந்து ஒரு கொட்டில் அமைத்து பழைய சாமான்களை அங்ககொண்டு போட்டிருக்காங்க.' எனக் கூறிவிட்டு அம்மா மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

எங்களது கிராமம் தற்போதுதான் படிப்படியாக வளர்ச்சியடைந்து வரும் கிராமம். நல்ல சூழல். இடநெருக்கடி என்பதே கிடையாது. கிராமம் என்றாலும் இங்கு படித்தவர்கள் அதிகம். நாய், பூனை, பறவைகள் போன்ற ஜீவராசிகளை நேசிக்கும் மனிதர்களும் அதிகம். 

எங்களது வீடு அமைந்திருக்கும் வளவு மிகப்பெரியது. தற்போது அமைக்கும் வீடுகள் போல் அமைப்பதாயின் நான்கு வீடுகளாவது அமைக்கலாம். அவ்வளவு விசாலமானது. மரம், செடி, கொடிகள் அதிகம் கொண்ட இயற்கைச் சூழல்.

அப்பா உயிருடன் இருக்கும் போது கட்டியதுதான் தற்போது நாங்கள் குடியிருக்கும் வீடு. ஓரளவு பெரிய வீடு. இரண்டு குடும்பங்கள் வாழக்கூடிய தாராளமான வீடு. எதிர்கால நன்மைகள் கருதி வளவின் மேற்குப்பக்க மூலையில் ஓர் ஓரமாகக் கட்டப்பட்டது. 

அதற்கு நேர் எதிர் மூலையில் கிழக்குப் பக்கமாக ஒரு பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. நான் சிறு பிள்ளையாக இருந்த காலம் தொடக்கம் அதில்தான் சாப்பிட்டபின் மிச்சமுள்ள உணவுகளைக் கொண்டு கொட்டுவோம். அந்த உணவுகளை உண்பதற்காக நாய், பூனை, காகம் போன்றன நேரத்துக்கு நேரம் வந்து போகும். 

அப்பாவுக்கு ஜீவராசிகள் மீது அளவு கடந்த இரக்கம். அதனால் வீட்டிலுள்ள யாருமே அவர் செயல்களுக்கு மறுப்புத் தெரிவிப்பதில்லை. ஆனால் அம்மாவுக்கு நாய்களைப் பிடிப்பதேயில்லை. அது ஏன் என்று எங்களுக்குத் தெரியாது. 

எனக்கு நினைவு தெரிந்த நாள் தொடக்கம் அந்தக் கிழக்கு மூலையில் பூனைகளின் சகவாசம் அதிகம். வண்ண வண்ண நிறங்களில் அழகழகான பூனைகளைக் காணலாம். சில வேளை குறிப்பிட்ட ஓரிரண்டு  பூனைகள் பல நாட்களுக்குக் கண்ணுக்குத் தெரியாமல்போய்விடும். அந்தப் பூனைகளுக்கு என்ன நடந்தன எனத் தெரியாமல் தவிப்பதுண்டு. ஆனால் ஒருசில நாட்களுக்குள் பல வர்ணக் குட்டிகளைக் கௌவிக்கொண்டு தான் வாழும் இடம் நோக்கி வந்துவிடும். எங்கு மறைந்திருந்து, குட்டிகளை ஈன்றெடுத்து, பாதுகாத்து உரிய இடத்துக்கு அழைத்துவருகின்றன என்பது புதிராகவே இருந்தது.

அன்று ஒரு நாள் அழகிய சாம்பல் நிறப் பூனைக்குட்டியொன்று 'மியா, மியா' எனக் கத்திக்கொண்டே இருந்தது. அதன் தாய் அதனைத் தன் வாயில் கௌவிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்தது. எனக்குப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது. பூனைக்குட்டிக்கு ஏதும் பசி ஏற்பட்டுவிட்டதோ என எண்ணத் தோன்றியது. அதனால் ஒரு பாத்திரத்தில் நீரும் இன்னொரு பாத்திரத்தில் உணவும் இட்டுக்கொண்டு அந்த கிழக்கு மூலையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். அன்றிரவு நீண்ட நேரம் பூனைக்குட்டியின் அலறல் கேட்டுக்கொண்டேயிருந்தது. எனக்கும் கவலையாக இருந்தது.

அடுத்த நாள் அதிகாலை என்ன நடந்தது எனப் பார்க்க அந்த கிழக்கு மூலையை அடைந்த போது, அந்த சாம்பல் நிறப் பூனைக்குட்டி தன் தாயின் வயிற்றில் தன் முன்னங்கால்களை வைத்துக் கொண்டு சோகமே உருவாக முனகிக்கொண்டிருந்தது. எனக்கு என்னவோ போலாகிவிட்டது. அருகில் சென்று அதன் தாயின் உடலை அவதானித்தபோது, அது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

அக்காவை அழைத்து, 'அக்கா, வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கிற மண்வெட்டியை எடுத்துவா. பூனை ஒன்று செத்துப் போயிட்டு. வெட்டிப் புதைப்போம்.' என்றேன்.

'இந்த சனியன்களை எல்லாம் வளர்த்துக்கிட்டு அதுக்கு வேற மரணச் சடங்கு. அடிச்சு விரசாம பாத்துக்கிட்டு...' - அக்கா கூறியவாறு மண்வெட்டியைப் போட்டுவிட்டுச் சென்றாள்.

அன்று தொடக்கம் தன் தாயை இழந்த அந்த சாம்பல் நிறப் பூனைக்குட்டி மீது எனக்கு அலாதிப் பிரியம்.

இன்று, மூன்று மாதங்களின் பின், அந்தப் பூனைக்குட்டியின் ஞாபகம் வரவே, புதிதாகக் குடிசை அமைக்கப்பட்ட இடத்தை நோக்கி விரைந்தேன். அவ்விடம் வெறிச்சோடியது போல் காணப்பட்டது. இந்த மூன்று மாதங்களுக்குள் அங்கு வாழ்ந்த பூனைகளின் இருப்பிடங்கள் அகற்றப்பட்டு, பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுவிட்டன என நினைக்கும் போது வருத்தமாக இருந்தது. சுற்றுமுற்றும் கண்கள் எதையோ தேடின. கொட்டிலுக்கு அருகிலுள்ள ஒரு வெளிப்பகுதியிலிருந்து மெல்லிய குரலில் 'மியா, மியா' என்ற சத்தம் கேட்கவே, சத்தம் வந்த திசையை நோக்கினேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

நான் இந்தியா செல்லும்போது கொழுகொழுவென இருந்த அந்த சாம்பல் நிறப் பூனை எலும்பும் தோலுமாகக் காணப்பட்டது. எனது இந்தியப் பயணத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பூனையின் வாழ்விடத்தை முற்றாக அபகரித்து, அதன் உணவுக்கான உரிமையையும் மறுத்து, பட்டினி போட்டு சாகடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. 

தன்னுடன் வாழ்ந்த ஏனைய உறவுகள் தினந்தோறும் தங்களுக்கு நடக்கும் அக்கிரமங்கள் தாளாது பிரிந்து சென்றுவிட்டபோதும், தானும் தனது பெற்றோரும் பிறந்து வளர்ந்த இந்த மண்ணைவிட்டு தான் மரணிக்கும் வரை நகரப் போவதில்லை என்ற வைராக்கியத்துடன் என் சாம்பல் நிறப் பூனை தன் வாழ்நாளைக் கழிப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

அம்மாவை நோக்கி விரைந்துசென்ற நான் 'அம்மா, பாவம்தானே அம்மா. பூனைகளை எல்லாம் சாப்பாடு போடாம அடிச்சு விரட்டி இருக்கயளே. அப்பா இருக்கும்போது ஜீவராசிகள் மீது எப்படியெல்லாம் பாசமா இருந்தார். மிஞ்சிற சாப்பாடுகளைத் தானே அதுகளுக்குப் போடுறம். கடையிலே காசு கொடுத்தா வாங்கிக் கொடுக்கிறோம்?' என ஆத்திரத்துடன் வினவினேன். 

அம்மா ஒன்றுமே கூறவில்லை. அமைதியாக இருந்தார்.

என்னைக் கடந்து சென்ற அக்காதான் அம்மாவை நோக்கி 'இன்னும் நாலஞ்சு பூனைகளை வளர்த்து  உங்கட மகன் கல்யாணம் முடிச்சிட்டுப் போகும்போது கூடவே அனுப்பிவையுங்க.' எனச் சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றாள். 

- எஸ். ஏ. கப்பார் (இலங்கை).

(இச் சிறுகதை தமிழ்நெஞ்சம் ஜூலை 2024 இதழில் பிரசுரமானது. தமிழ்நெஞ்சம் பிரதம ஆசிரியர் அமின் மொஹமட் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.)



No comments: