Monday, January 5, 2026

தலைமுறை மாற்றம்.

23. தலைமுறை மாற்றம்.

நிலோஜினியின் 37 ஆவது பிறந்த நாளன்று, அவளது ஒரே மகள் அனோஜாவுக்கும் 16 ஆவது பிறந்த நாள். சொல்லி வைத்தாற் போல் இருவரும் ஜனவரி ஒன்பதாம் திகதி பிறந்தவர்கள். அதனால் தாயும் மகளும் ஒரே தினத்தில் அவர்கள் வழக்கமாகச் செல்லும் ஹோட்டலுக்குச்; சென்று ஒரு சில நண்பர்களுடன் தங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதுண்டு. அனோஜாவின் வயதைப் பார்த்தால், நிலோஜினி 20 அல்லது 21 இள வயதில் திருமணம் முடித்து ஓரிரு ஆண்டுகளில் அனோஜா பிறந்திருக்க வேண்டும்.

அனோஜாவின் அம்மா நிலோஜினி புகழ்பெற்ற நாகரிகமான ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவள். சாதாரண தரத்துடன் தனது படிப்பை நிறுத்திக் கொண்டவள். அனோஜாவின் அப்பா கருணாகரன் பிரபல்யமான வர்த்தகர். தனியாக ஏற்றுமதி இறக்குமதிக் கம்பனி ஒன்றை சொந்தமாக நடத்திவருகிறார். அவருக்கு வயது 57. தோற்றத்தில் 47 வயது மதிக்கத்தக்கவர். திடகாத்திரமானவர். நன்றாகப் படித்தவர். மும்மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். நிலோஜினியை இரண்டாந் தாரமாகக் கைப்பற்றியிருக்க வேண்டுமென நினைப்பவர்கள் அதிகம். சிலர் சொத்துக்காக நிலோஜினியை அவளது பெற்றோர்கள் வயது முதிர்ந்தவருக்குத் திருமணம் முடித்து வைத்து விட்டதாகக் கூறுவதுண்டு. இன்னும் சிலர் காதல் திருமணம் என்றும் வீடடில் சொல்லிக்கொள்ளாமல் பெற்றோரை வெறுத்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டவர்கள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் உண்மை எதுவென யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

நிலோஜினி பணக்காரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் பண்பாகவும் நாகரிகமாகவும் நடப்பவள். மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவள். கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவள். மற்றவர்களைப் போல் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களிலோ அன்றி கைத்தொலைபேசியிலோ மூழ்கிக்கிடப்பவள் அல்ல. வீட்டில் வேலைக்காரி இருந்தாலும் தன்னுடைய சொந்த வேலைகளைத் தானே செய்வதோடு சமையல் வேலைகளிலும் வேலைக்காரிக்கு உதவி செய்வாள். எவருடனும் கடிந்து பேச மாட்டாள். இரக்க குணமுள்ளவள்.

ஆனால் மகள் அனோஜா நாகரிகத்தில் ஊறிப்போய் மற்றவர்களை மதிக்கும் பண்பு அற்றுப் போனவள். முன்கோபக்காரி. எடுத்தெறிந்து பேசுபவள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என வாதிடுபவள். நண்பர்களுடன் சகஜமாகப் பழகுபவள். ஆண் நண்பர்கள் அதிகம். முழு நேரமும் கைத்தொலைபேசியுடன் உறவாடுபவள். ஆனாலும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. 'ஒரே பிள்ளையென்று அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்தாலும் இப்படித்தான் பிள்ளைகள் வளர்வதுண்டு' என வருத்தப்பட்டுக் கொள்வாள் நிலோஜினி.

'மேடம். மேல் மாடி றூம் ஓகே மேடம்.' - முதலாவது மாடியில் அமர்ந்திருந்த நிலோஜினியிடம் வெயிட்டர் வந்து பக்குவமாகக் கூறியதும், தனது பெண் நண்பிகளுடன் மேல் மாடி நோக்கிச் சென்றாள் நிலோஜினி. மேல் மாடியில் விசாலமான அறை ஒன்று பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்ற வகையில் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனது ஐந்தாறு நண்பிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, கேக் வெட்டி, மதிய உணவு வழங்கி பிறந்த நாளைக் கொண்டாடுவது வழக்கம். சில வேளைகளில் அவளது கணவர் கருணாகரனும் குறித்த நேரத்துக்கு வந்து உணவருந்திச் செல்வதுண்டு.

நிலோஜினி தனது கைத்தொலைபேசியை உயிர்ப்பித்து, 'அனோஜா, மேலே நாங்க காத்திருக்கோம். உன் நண்பிகளை அழைத்துக்கொண்டு மேலே வா.' என மகளை அழைத்தாள்.

'என்ன அம்மா. அவசரப்படுத்துற. நண்பிகள் எல்லாம் வந்துட்டாங்க. போய்ஸ்தான் இன்னும் வரல்ல. நீங்க ஆரம்பிங்க. இதோ வந்திடுவோம்.' எனக் கூறித் தொடர்பைத் துண்டித்தாள். மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி 'என்னடி விசர்க்கதை கதைக்கிற. எத்தனை தடவை சொல்லியிருக்கேன், போய்ஸைக் கூப்பிடாதே என்று. இன்று அப்பாவும் வருவதாகக் கூறியிருக்கார். எனக்குத்தான் பேசப் போறார்.' எனக் கடிந்து கூறினாள்.

'அம்மா, அப்பாவை நான் எப்படியோ சமாளிச்சுக்குவேன். நீங்க உங்கட நண்பிகளைக் கவனியுங்க. வயது போன ஆட்கள். மயங்கிக் கியங்கி கீழே விழுந்துடப் போறாங்க.' சிரித்தவாறே தொடர்பைத் துண்டித்தாள்.

சிறிது நேரத்தில் அனோஜாவின் நண்பர்களும் கலந்து கொள்ள வௌ;வேறாகக் கேக் வெட்டி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி, மதிய உணவும் பரிமாறப்பட்டது. அனோஜாவின் அப்பா வருவதாகக் கூறியதால் என்னவோ அனோஜாவின் ஆண் நண்பர்கள் மிகவும் அமைதியாகவும் ஆர்ப்பாட்டங்களில்லாமலும் அமர்ந்திருந்து உணவருந்தி அனோஜாவை வாழ்த்திவிட்டு பிரிந்து சென்றனர். ஆனால் அலுவலக வேலைப் பழு எனக் கூறி அவளது அப்பா வரவில்லை. அப்பா வராதது அனோஜாவுக்குச் சிறிது ஏமாற்றமாகவும் அதேவேளை அவளது அம்மாவுக்கு நிம்மதியாகவும் இருந்தது.

வீடு வந்து சேர்ந்த நிலோஜினி நீண்ட நேரம் யோசித்தாள். தனது மகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னிட்டு இனிமேல் தனது பிறந்த நாட்களைக் ஹோட்டலிலோ அன்றி வீட்டிலோ கொண்டாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள். அவள் விரும்பியது போல் அனோஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மட்டும் வீட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பெரும்பாலும் அனோஜாவின் அப்பாவும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் ஓரிரு கொண்டாட்டங்களுக்குச் சமுகமளித்த ஆண் நண்பர்கள் தொடர்ந்துவந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதில் நின்றும் படிப்படியாகத் தவிர்த்துக் கொண்டனர்.

காலங் கடந்து சென்றது. அனோஜா நன்றாகப் படித்து வந்தாள். இம்முறை உயர்தரப் பரீட்சையில் நன்றாகச் சித்தியடைந்து தான் விரும்பியது போல் பல்கலைக் கழகம் சென்று ஒரு வைத்தியராக வரவேண்டுமென எண்ணியிருந்தாள். ஆனால் அவளொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது. பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி இருந்த போதும் வைத்தியத் துறைக்குத் தெரிவாகவில்லை. மிகவும் மனமுடைந்து காணப்பட்டாள். தன் கனவுகள் நனவாகவில்லையே என எண்ணி அடிக்கடி அழுதாள். 

'அனோஜா, ஏன் மகள் இவ்வளவு கவலைப்படுற. இன்னும் இரண்டு தடவை எடுக்கலாம்தானே! உனக்கு சின்ன வயது தானே. இன்னுமொரு தடவை எடுத்துப் பாரு. அப்பா வந்ததும் சொல்லி டியூஷன் ஏற்பாடு ஏதாவது செய்து தொடர்ந்து படி.' என ஆறுதல் கூறினாள், அம்மா.

வரவேற்பறை சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அனோஜா அம்மாவின் ஆறுதல் வார்த்தைகளுக்கு எதுவுமே கூறாது, எழுந்து சென்று தனது படுக்கையறைக் கட்டில் மீது சாய்ந்துகொண்டு தலையணையை முகத்தில் அழுத்தியவாறு அழுதாள்.

சில மணி நேரத்தில் அப்பா வந்ததும் எழுந்து வந்து 'அப்பா! நான் வெளிநாடு சென்று படிக்கப் போறேன். ஏற்பாடு செய்யுங்க' - இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள். கேட்டுக் கொண்டிருந்த அம்மா அனோஜாவை நோக்கிச் சென்றதும் அவளது விசும்பல் சத்தங் கேட்டு, எதுவுமே கூறாது வெளியே வந்துவிட்டாள்.

வைத்தியக் கல்வி கற்க கடல் கடந்து வெளிநாடு சென்று ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. வருடத்தில் ஒரு முறை வீடு வந்து அப்பா அம்மாவுடன் ஒன்றரை அல்லது இரு மாதங்கள் தங்கியிருந்து மீண்டும் செல்வதுண்டு. வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில் முன்புபோல் அம்மாவுடன் அவ்வளவாக உரையாடுவதில்லை. தானும் தன் பாடும் என்பது போல் தனது படுக்கையறையிலேயே நேரத்தைக் கழிப்பாள். அப்பாவுடன் சில வேளை சிரித்துப் பேசுவாள். 

இம்முறை வீடு வந்த தனது மகளில் ஏற்பட்டிருக்கும் விசித்திர மாற்றங்களைக் கடந்த ஒரு மாதமாகக் கண்டும் காணாதது போல் அவதானித்து வந்தாள் நிலோஜினி. பிந்திய இரவு நேரங்களில் நீண்ட நேரம் கைத்தொலைபேசியில் உரையாடுவாள். அம்மா நடமாடுவது தெரிந்தால் கதவை தாளிட்டுக்கொள்வாள். இது இறுதி வருடம் என்பதாலும் இறுதிப் பரீட்சை எழுதவேண்டி உள்ளதாலும் மகள் பதற்றமாக இருக்கிறாள் என நினைத்து ஆறுதல் அடைந்தாள். இருந்தும் பெற்ற தாயின் உள்ளம் கடந்த ஒரு மாதமாகப் பரிதவிப்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

இன்று மீண்டும் பயணிக்கும் நாள். நேரம் நெருங்க நெருங்க பரபரப்பாகத் தொடங்கினாள் அனோஜா. ஓரிரு கைத்தொலைபேசி அழைப்புகளையும் தவறவிட்டிருந்தாள். அவள் வோஷ் றூம் சென்றபோது ஓர் அழைப்பு நீண்டு கொண்டு செல்லவே உள்ளே சென்று கைத்தொலைபேசியை எடுத்தாள், நிலோஜினி. அழைப்பு முடிவுற்ற போதும் திரையில் 'மை லிட்டில் கார்ட்' என மிளிர்ந்தது. 

அப்படியே வைத்துவிட்டு வெளியே வந்த நிலோஜினிக்கு 'மை லிட்டில் கார்ட்' என்ற பெயர்  சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தியது. தனது மகள் யாரையாவது காதலிக்கிறாளா? அப்படியானால் 'மை கார்ட்' என்றுதானே போட்டிருப்பாள். அது என்ன 'மை லிட்டில் கார்ட்?'. பயணம் புறப்படும் போது பிரச்சினைப் பட்டுக்கொள்ளக் கூடாது என எண்ணி பிறகு பார்ப்போம் என விட்டுவிட்டாள்.

விமான நிலையத்தை அடைந்து விடைபெறும்போது அம்மாவைக் கட்டியணைத்து  முத்தமிடுவது வழக்கம். அன்றும் அவ்வாறுதான் அம்மாவை நோக்கிவந்து முத்தமிட்டாள், அனோஜா. ஆனாலும் அம்மாவின் கண்களை நேரடியாகப் பார்க்க முடியாமல் தடுமாறினாள். இதனை அவதானித்த அவளது அம்மா 'எங்கோ ஏதோ தப்பு நடக்கிறது என்பது மட்டும் தெளிவாத் தெரியுது' என எண்ணி வருந்தத் தொடங்கினாள்.

வீடு வந்து சேர்ந்த நிலோஜினி இரண்டு நாட்கள் இருப்புக் கொள்ளாது தவித்தாள். எதற்கும் தன் மகளுடன் படிக்கும் பக்கத்துக் கிராம வினோதினியின் அம்மாவைத் தொடர்பு கொண்டு வினோதியின் வட்ஸ்அப் இலக்கத்தைப் பெற்றுக் கொண்டாள். எப்படியாவது தன் மகள் மீது ஏற்பட்ட சந்தேகத்தைத் துடைத்தெறிந்துவிட வேண்டுமெனத் துடியாய்த் துடித்தாள். அவசரப்பட்டு கணவனிடம் ஏதும் கூறிவிடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்தாள். தாமதியாது வினோதினியைத் தொடர்புகொண்டு தன் மகள் பற்றி விசாரிக்கவேண்டுமென எண்ணி அழைப்பை ஏற்படுத்தினாள். மூன்று முறை அழைத்தும் அழைப்புக்குப் பதில் கிடைக்கவில்லை. அழைப்பு இலக்கம் சரியா என ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அழைத்தாள். நான்காவது முறையும் வெற்றி கிடைக்கவில்லை. ஏமாற்றத்தில் சோர்ந்து போய் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தாள். கழுத்தில் தனது இடது புறங் கையை வைத்துப் பார்த்தாள். உடல் வேகமாகச் சூடாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. உள்ளே சென்று இரண்டு பனடோல் மாத்திரைகளை வாயில் இட்டு நீரை அருந்திவிட்டு திரும்பியபோது கைத்தொலைபேசி அலறியது. கைகள் நடுங்க கைத்தொலைபேசியை எடுத்து ஹலோ என்றாள்.

'அன்ரி. நீங்க அனோஜாவோட அம்மாதானே. உங்கட நம்பர் எங்கிட்ட ஏற்கனவே இருக்கு. அவசரத்துக்குத் தேவை என்றா நல்லம் என்று அனோஜாதான் கொடுத்து வைச்சா. இப்ப எங்களுக்கு பாடம் நடக்கிறதாலே உடனே எடுக்க முடியல்ல' என்று கூறி என்ன விடயம் என வினவினாள்.

 அனோஜா பற்றி நாசுக்காக வினவினாள் நிலோஜினி.

'சரிம்மா. பதற்றப்படாதீங்க. அனோஜா எனக்குப் பக்கத்தில்தான் இருக்கா. இப்ப பாடம் நடக்கிறதால கதைக்க முடியாது. அவ றூமுக்குச் சென்றதும் உங்களோட கதைக்கச் சொல்றேன். அனோஜாட விடயம் எல்லாம் உங்களுக்கு தெரியும் என்றுதான் நினைச்சேன். இதெல்லாம் இங்க சகஜம் அம்மா. சரிம்மா சரி. கவலப்படாதீங்க' - நமக்கேன் வீண் வம்பு என நினைத்து பட்டும் படாமலும் கூறிவிட்டு நழுவிக் கொண்டாள் வினோதினி.

அனோஜாவின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலோஜினிக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. கடவுளே! நான் நினைப்பது போல் விபரீதமாக எதுவுமே நடந்துவிடக்கூடாது என எண்ணி இல்லாத தெய்வங்களை எல்லாம் வேண்டி நின்றாள். நா வறண்டது. சிறிது நீர் அருந்தினால் நலம் என எண்ணி எட்டிக் கால் வைத்தவளை கைத்தொலைபேசியின் அலறல் தடுத்து நிறுத்தியது.

விரைந்து சென்று, 'அனோஜா, மகள் அனோஜா' என்றாள்.

'அம்மா, எப்படியாவது உன்னிட்ட சொல்லணும் என்றுதான் நினைத்து பல தடவை முயற்சி செய்தேன்;, ஆனா முடியல்ல, அம்மா. என்னை வெறுத்திடுவீங்க என்ற பயமா? அல்லது அப்பா என்மீது வைத்திருக்கிற பாசத்தின் வெளிப்பாடு நிலை குலைந்துவிடும் என்ற எண்ணமா? அல்லது உங்களப் போன்ற பழைய தலைமுறைக்கு இத எப்படிப் புரிய வைப்பது என்ற வருத்தமா? எனத் தெரியவில்ல. இந்த வருஷம் என் படிப்பு முடிஞ்சதும் லண்டனுக்குப் போகலாம் என்று எண்ணியிருக்கோம். ஏற்பாடு எல்லாவற்றையும் அவர் செய்திட்டிருக்கார். பிள்ளையக் கூட்டிச் செல்வதில்தான் சின்ன சிக்கல். இன்னும் அவக்குப் பிறப்புப் பதிவு வைக்கல்ல. எங்கட திருமணப் பதிவு கூட இன்னும் செய்யல்ல. எப்படியும் இம்முறை ஊருக்கு வரக் கிடைக்காது. அவரும் அவங்க அம்மா வீட்டுக்குப் போகமாட்டார். நாங்க நேரா லண்டன் போயிடுவோம்.' - சர்வசாதாரணமாகச் சொல்லி முடித்தாள் அனோஜா.

அனோஜா சொல்லச் சொல்ல நிலோஜினிக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டது. அடி பாவி எங்களை ஏமாத்திப் போட்டியேடி என மனம் பதைபதைத்தவளாக தன் அடிவயிற்றை வலது கையால் அழுத்திப் பிடித்தவாறு தொடர்ந்தாள்.

'என்னடி சொல்ற. பெத்து வளத்து வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பி நாட்டுக்குச் சேவை செய்ய ஒரு டொக்டரா வருவாய் என்று பார்த்தா, ரோஷம் மானம் மரியாதை எல்லாம் இழந்து யாரோ ஒரு தறுதலையை காதலிச்சு கல்யாணம் பண்ணினதும் இல்லாம குடும்பம் நடத்தி பிள்ளையும் பெத்துக்கிட்டியா? எப்பிடிடி உனக்கு இந்த மனசு வந்தது? நம்மட கலாச்சாரம் சம்பிரதாயங்கள் குடும்ப கௌரவம் எல்லாத்தையும் ஒரு நொடியில குழிதோண்டிப் புதைச்சிட்டயே. ஊரிலே எப்படி நாங்க தலைநிமிர்ந்து வாழுற? உங்க அப்பன் அறிஞ்சா உன்ன மட்டுமில்லடி என்னையும் ரெண்டு ரெண்டு துண்டா வெட்டிப் போட்டிட்டு அவரும் செத்திடுவார். யார் செய்த பாவமோ எங்கட தலையிலே மண்ணள்ளிப் போட்டிட்டயே. ' - என செய்வதறியாது புலம்பினாள்.

'அம்மா! குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்கிறது என்பதெல்லாம் பழைய கதை. உங்களப் போல பழசுகள் எல்லாம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று அப்பா அம்மா காட்டுறவன் கட்டை என்றாலும் குட்டை என்றாலும் சொட்டை என்றாலும் கழுத்த நீட்டின காலம் மலை ஏறிப்போச்சு. இது நவீன காலம். நாங்க விரும்புறவனோடு கைகோர்த்துக் கொண்டு பழகி அவனைப் புரிந்து கொண்டு பிடிச்சா வாழ்ந்து பார்க்கிற காலம் இது. பிடிக்காட்டி இருவரும் டீசண்டா பிரிஞ்சிடுவோம். தப்பித் தவறி குழந்தை கிடைச்சாக் கூட அது தப்பில்லை. அப்படிப் பிறந்த குழந்தைகளை வளர்க்கிறதுக்கென்றே இங்கே நிறைய இடம் இருக்கு.'

'இதைத்தான் அம்மா - லிவ் இன் ருகெதர் (Live in together) என்று சொல்வாங்க. சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்வது. இருவரும் தானாக முன்வந்து ஒன்றாக வாழ ஒப்புக்கொள்வது. இந்த உறவுகள் சட்ட அல்லது மத விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுவதில்லை. பரஸ்பர புரிதலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலும் பொருந்தக்கூடிய தன்மையை ஆராய்வதற்கும் திருமணம் அல்லது நீண்டகால உறுதிப்பாட்டைத் தீர்மானிக்கு முன் ஆழமான தொடர்பை உருவாக்குவதற்கும் ஒரு வழியாகக் காணப்படுகிறது இந்த லிவ் இன் ருகெதர். விரும்பினா வாழ்ற இல்லாட்டி விட்டிட்டுப் போற'

அனோஜா கதைக்கக் கதைக்க நிலோஜினியில் தலை விறைக்கத் தொடங்கியது. கைகள் நடுங்கின. கால்கள் இருப்புக் கொள்ளாது தள்ளாடின. வியர்த்துக் கொட்டியது. கையிலிருந்த கைத்தொலைபேசி நழுவிக் கீழே விழுந்து வேறுவேறாகிய இரு பாகங்கள் எட்டாத தூரத்தே சிதறிக் கிடந்தன.

'அம்மா, அம்மா! டோன் வொறி. டேக் இட் ஈஸி' என்ற வார்த்தைகள் நிலோஜினியை விட்டும் தூரமாக, மிகத் தூரமாக விலகிச் சென்றுகொண்டிருந்தன.

(முற்றும்)

- எஸ். ஏ. கப்பார்.


ஜீவநதி ஆடி மாத இதழில் (01-07-2025) பிரசுரிக்கப்பட்டது. அதன் பிரதம ஆசிரியர் க. பரணீதரன் அவர்களுக்கு மிக்க நன்றி.


No comments: