Monday, January 5, 2026

மனமாற்றம்.


18. மனமாற்றம்.

கடந்த இரு வாரங்களாக மனதுக்குப் பெரும் பாரமாகவும் கவலையாகவும் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்.

அக்கா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் எனப் புரியவில்லை. திருமணம் முடித்து வீட்டுக்கு வந்த நாள்முதல் நிதாவும் அக்காவும் முரண்பாடுகள் எதுவுமில்லாது சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். மாமியார் மருமகள் சண்டையென்றால் என்னவெனத் தெரியாதளவுக்கு என் உம்மாவும் என் மனைவி நிதாவுடன் அன்பாகவும் பாசமாகவும்தான் இருந்தார். வீட்டு வேலைகளையும் மூவரும் சேர்ந்தே செய்துவந்தனர். வார இறுதி நாட்களில் வெளியிற் செல்வதென்றாலும் கடைகளுக்குச் செல்வதென்றாலும் ஒன்றாகத்தான் சென்று வருவார்கள்.

கடந்த இரு வாரமாகத்தான் வீட்டில் பிரச்சினையாக இருக்கிறது. கேட்டால் ஒருவருமே எதுவும் கூறுவதாய் இல்லை. மனைவி நிதாவிடம் வலிந்து கேட்டாலும் எதையாவது கூறிவிட்டு நழுவிச் செல்கிறாள்.

“மூன்று நாட்களுக்கு முன் நிதாவின் உம்மா வந்து நிதாவின் தங்கச்சிக்கு நல்ல இடமொன்று வருவதாகவும் தாமதியாது கல்யாணத்தை முடிச்சிட வேண்டுமென்றும் உம்மாவிடமும் தன்னிடமும் சொல்லிவிட்டுப் போனதாக அக்காதான் சொன்னாள். அதிக நேரம் கதைத்துக்கொண்டு இருந்ததாகவும்  கூறினாள். என்ன கதைத்ததென்று தெரியல்ல. அதற்குப் பிறகுதான் வீட்டிலுள்ள எல்லோரும் மௌன விரதம்” – மனதுக்குள் முணுமுணுத்தவாறு நாற்காலியில் அமர்ந்தேன்.

*****

நான் வேலை செய்யும் அலுவலகத்தில்தான் நிதாவும் வேலை செய்தாள். அவள் எனக்கு மூன்று வருடங்கள் இளையவள். நாளடைவில் நிதாவை எனக்குப் பிடித்துப்போகவே அவளைத் திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் அவளை அணுகி எனது எண்ணத்தைத் தெரியப்படுத்தினேன். ஆரம்பத்தில் தனக்கொரு தங்கை இருப்பதாகவும் அவளது படிப்புக்கும் அவளது திருமணத்துக்கும் உதவி செய்யவேண்டுமென்றும் தற்போது திருமணத்தைப்பற்றி முடிவெடுக்க விருப்பமில்லை என்றும் மறுப்புத் தெரிவித்தவள், பின் அவளது பெற்றோரினதும் தங்கையினதும் வேண்டுகோளுக்கிணங்க சம்மதித்தாள். திருமணமும் இனிதே நடந்தேறியது. 

வாப்பா மரணித்தபின் உம்மாதான் வீட்டு நிருவாகங்கள் அனைத்தையும் கவனித்து வந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்துவந்தேன். வீட்டில் உம்மாவுடன் நானும் அக்காவும் அக்காவின் இரண்டு பிள்ளைகளும் மட்டுமே வசித்துவந்தோம். அக்காவின் கணவர் மத்திய கிழக்கில் தொழில் செய்துவருகிறார். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மனைவி மக்களைப் பார்க்க வந்துபோவார். நல்லவர். மனைவி மக்கள் என்றால் அவருக்கு உயிர். எங்களது திருமணத்துக்கு வந்து ஒருவாரம் தங்கிவிட்டுப் போனவர்.

திருமணம் முடிந்து ஒரு மாதத்தின்பின் ஒரு நாள் நிதா என்னிடம் வந்து, “றமீஸ். உங்க உம்மாவும் அக்கா பிள்ளைகளும் ஆண்துணை இல்லாம வீட்டிலே தனியாத்தானே இருக்காங்க. நாம போய் கொஞ்ச நாளைக்கு உம்மா வீட்டிலே இருந்தா என்ன? அவங்களுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும். நமக்கும் ஒரு றிலக்ஸ் மாதிரி இருக்குமில்லே.” என வினவி நின்றாள்.

“நிதா, நீ சொல்லுறதும் சரிதான். உங்க உம்மா வாப்பா சம்மதிச்சா எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.” என்றேன். 

நிதா அவளது உம்மாவை அணுகி,

“உம்மா, மாமி மதினி பிள்ளைகள் எல்லாம் தனியா இருக்காங்க. அதனாலே மாமி வீட்டுக்குக்குப்போய் கொஞ்ச நாளைக்கு இருப்போம் என விரும்புறோம்.” எனக்கூறி உம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.

“அதனால் என்னடி. புருஷன் கூப்புட்டா கடல் கடந்தும் போகத்தானே வேணும்.”

உம்மா கூறி முடிப்பதற்குள், “இல்ல உம்மா நான்தான் சொன்னேன். அவர் ஒண்ணும் சொல்லல்ல.” என்றாள், பயந்தவாறு.

“நான் மாப்பிள சொன்னதெண்டு சொன்னேனா?. சந்தோஷமாப்போய் இருடி. இங்கே வாப்பா தங்கச்சியெல்லாம் இருக்காங்கதானே.” எனக்கூறி நிதாவின் தலையைத் தடவிவிட்டார்.   

ஒரு வாரத்தில் நிதாவின் விருப்பப்படியே உம்மாவின் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

திருமணத்தின்பின் ஒரே அலுவலகத்தில் கணவன் மனைவி தொழில் புரிய முடியாததால் நிதாவுக்குப் பக்கத்துக் கிராமத்திலுள்ள அலுவலகத்துக்கு மாற்றம் கிடைத்திருந்தது. உம்மாவின் வீட்டிலிருந்து இரண்டே கிலோ மீட்டர் தூரம். ஆகையால் நிதாவை மோட்டார் சைக்கிளில் கூட்டிச்சென்று அவளது அலுவலகத்தில் இறக்கிவிட்டு, எனது அலுவலகத்துக்குச் செல்வது இலகுவாக இருந்தது. வேலை முடிந்ததும் ஆட்டோவில் வீடுவந்து சேர்வாள்.          

*****

எப்படியோ இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. ஒரு நாள்,  

“உம்மாவும் வாப்பாவும் இன்று பின்னேரம் வீட்டுக்கு வாறாங்களாம். தங்கச்சிட கல்யாணம் சம்மந்தமா கதைக்க வேணுமாம். அதனால சோர்ட் லீவு எடுத்துக்கு நேரத்தோட வாங்க. நானும் நேரத்தோட போறேன். சரிதானே.” அலைபேசியில் அழைத்துக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தாள் நிதா.

வரும் வழியில் பூட்வே கோணரில் சமுஷா, ரோல்ஸ் போன்ற உறைப்பு சிற்றுண்டிகளையும் வாங்கிக்கொண்டு வீடுவந்து சேர்ந்தபோது மாமா, மாமி, நிதா உட்பட அனைவரும் வீட்டில் இருந்தார்கள். அக்காவை அழைத்து வாங்கிவந்த பொருட்களைக் கொடுத்தேன். அக்கா ஒரு வார்த்தைகூடக் கதைக்கவில்லை. மற்றவர்களும் அமைதியாகத்தான் இருந்தார்கள்.

பேச்சைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் “மாமா. மாமி. வந்து மிச்ச நேரமா? மதினிய கூட்டி வரல?” என ஆரம்பித்தேன்.

“இல்ல மாப்பிள. அவ கல்யாணப் பொண்ணு. வெக்கத்தில நான் வரல்ல நீங்க போய்வாங்க எண்டு எங்கள அனுப்பிட்டா.” என மாமா ஆரம்பித்தார்.

“ரெண்டும் பெண் புள்ளையல். அந்தக் கடை வளவில எல்லாருக்கும் ஒரு கண். எவ்வளவு கஸ்டம் வந்தும் அத கை இழக்கல. வாற மாப்பிள வீட்டுக்காரங்க கடைய முழுசாகத்தான் கேட்டாங்க. அத நான் உங்க மாமிக்கிட்ட சொன்னேன். அவ அவசரப்பட்டு இங்க வந்தவ சொல்லியிருக்கா. அதனால இங்க கொஞ்சம் குழப்பம் போல. ‘மச்சான் கேட்டதுக்கும் ஒண்ணும் சொல்லல்ல’ எண்டுதான் நிதா சொன்னா. எனக்கு புள்ளையல் ரெண்டும் ரெண்டு கண்ணுக மாப்பிள. வாற மாப்பிள வீட்டுக்காரங்கிட்ட கதச்சி ரெண்டு பிள்ளைகளுக்கும் கடை அறைய சரி சமனா பிரிச்சு கொடுக்கணும் என்றேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க.” மாமா கூறி முடித்ததும் எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சியின் கீற்றுகள் மின்னி மறைந்தன.  

தேநீர் தயாரிக்க எழுந்த நதாவை அமரச்சொல்லி சைகை காட்டிவிட்டு, மலர்ந்த முகத்துடன் சமையலறையை நோக்கி விரைந்தாள் என் அக்கா.

(முற்றும்)            

- எஸ் ஏ கப்பார்.

 

தொடர்பு: 0776968671

மின்னஞ்சல்: kavignarsagaffar@gmail.com

(06-10-2024 தமிழன் வாரமஞ்சரியில் பிரசுரிக்கப்பட்டது.)

 

No comments: