Monday, January 5, 2026

அவன் வகுத்த வழி.

 

21. அவன் வகுத்த வழி.  

வாப்பா இப்படிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. உம்மா ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் கண் கலங்கியபடி அமர்ந்திருந்தார்.

“எல்லாம் இந்த புரோக்கர் சாயிவுத்தம்பி பார்த்த வேலை. நம்மள நல்லா ஏமாத்திப்போட்டான். தூரத்து சொந்தக்காரன் எண்டுதான் நானும் நம்பின. இவன் இப்படிச்செய்வானெண்டு நான் நம்பல. மாப்பிளட உம்மா, வாப்பா, தம்பி கூட ஒரு வார்த்தை சொல்லல்ல.” – கண்களில் கசிந்த நீரை தனது வலதுபக்கச் சட்டையில் துடைத்துவிட்டு பக்கத்திற் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார், வாப்பா.

“சரி. மாப்பிள வீட்டுக்காரங்கதான் ஆயிரம் பொய்யச்சொல்லி ஒரு கலியாணத்த நடத்தி முடிச்சிட்டாங்க. இந்த ஊர் ஒலகமெல்லாம் திரிஞ்சி ஆயிரம் பேருக்கு புத்தி சொல்லுற நீங்க ஒரு மனிசனுக்கிட்டாயாலும் விசாரிக்கல்லய? தொடர்ந்து படிக்கப்போறன் எண்டவளப் படிக்கவும் விடல்ல. நீங்கதான் நல்ல மாப்பிள்ள. இஞ்சீனியர் மாப்பிள்ள. இதயும் விட்டா மாப்பிள தேடுறது கஷ்டம் எண்டும், நாம கண்ண மூடுறதுக்குள்ள அவள்ள விஷயத்த முடிச்சிடுவமெண்டு அவசரப்பட்டு முடிச்சிட்டயள்.” – உம்மா இவ்வளவு துணிச்சலாகக் கதைப்பார் என நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

நல்லது கெட்டதுக்கெல்லாம் வந்து என்ன ஏது என விசாரிச்சிட்டுப் போகும் பக்கத்து வீட்டு ஜெசிமாட உம்மா,  “மச்சி, எதுக்கும் மாப்பிளய பத்தி நல்லா விசாரிச்சுக்க. பக்கத்து ஊர்க்காரங்க எண்டாலும் நமக்கு அவங்கள நல்லா தெரியா. அவங்கட சாதி சனத்தோடயும் பழக்கமில்லை. இப்பல்லாம்  இஞ்சீனியர் இஞ்சீனியர் எண்டு முடிச்ச மாப்பிள்ள எல்லாம் ஒரு தொழிலும் இல்லாம, குடும்பங்களும் விரிசலாகி பெரிய பிரச்சினயாக் கிடக்கு.” என உம்மாவிடம் கூறியதையும் அதற்கு, பக்கத்திலிருந்த வாப்பா “கலியாணத்தக் குழப்ப சனம் ஆயிரம் பொய் சொல்லும். அதுக்கெல்லாம் காது கொடுத்தா நாம ஒண்டுமே செய்ய ஏலா” எனக் கூறியதையும் இப்போது  நினைத்துப் பார்க்கும் வேளை எனக்குப் பயமாக இருக்கிறது.

“வாப்பா நீங்க ஒண்டுக்கும் கவலப்படாதீங்க. உம்மாவோடயும் சண்டை பிடிக்காதீங்க. எல்லாம் அவன்ட நாட்டம். இது நீங்க தெரியாமச் செஞ்ச தவறு. இந்த விஷயத்திலே எண்ட பிழையும் இருக்கு. பொண்ணு பாக்க வந்தவர்கிட்ட அவர்ர தொழில், படிப்பு சம்மந்தமாக நல்லா விசாரிக்கல்ல. சிவில் என்ஜினியரிங் படிச்ச எண்டுதான் சொன்னார். அவர் உண்மையான என்ஜினியர் இல்ல என்பது ஒண்ணரை வருஷம் கழிச்சு பிள்ளையும் பொறந்த பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. அவரில வேற எந்தக் குறையுமில்ல வாப்பா. என்னோடயும் பிள்ளையுடனும் அன்பாத்தான் இருக்கார்.” எனச் சமாதானப்படுத்திவிட்டு நகர்ந்து எனது அறைக்குச் சென்றேன்.

நான் உயர்தரக்கல்வி முதலாம் ஆண்டு படிக்கும்போதே எனக்கு மாப்பிள பாக்கத் தொடங்கிட்டாங்க. அதுவும் டொக்டர் மாப்பிள. நான் தொடர்ந்து படிக்க விரும்பியும் வாப்பா கேட்கவில்லை.

“இங்க பாரு மகள். எங்களுக்கு நீ ஒரே பிள்ளை. எனக்கும் வயசு போகுது. உம்மாவுக்கும் சுகமில்ல. ஒனக்கு என்ன குறை. வீடும் கட்டிமுடிஞ்சு. நான் இவ்வளவு காலம் சம்பாதிச்சதெல்லாம் ஒனக்குத்தான். எங்கட உசிர் போரத்துக்குள்ளே ஒண்ட கலியாணத்த முடிச்சிப்பார்த்து பேரப்புள்ளயளையும் கண்டுகொள்ள வேணும் என்டதுதான்  உம்மாவுடையதும்  என்னுடையதும் ஆசை. நானும் ஒரு டொக்டர் மாப்பிளை எடுக்கலாமெண்டு படாத பாடுபட்டேன். கிடைக்கல்ல. இந்த  மாப்பிளையையும் தட்டிவிட்டால் நல்ல மாப்பிளை எடுக்கிறது கஷ்டம் மகள். படிச்சு நீ என்ன உத்தியோகம் பார்க்கவா போற? இருக்க சொத்து நாலு ஜென்மத்துக்குப் போதும்.” - வாப்பாவின்  பரிதாபத்தைப் பார்க்க முடியாமல்தான்  திருமணத்துக்குச் சம்மதித்தேன்.

திருமணம் முடித்து ஐந்து மாதங்களில், கட்டாரில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது என்று கூறிப் பயணத்தை ஆரம்பித்தார். அப்போது நான் மூன்று மாதக் கர்ப்பிணி.

கடந்த ஆறு ஏழு மாதங்களாக தினமும் இரண்டு மூன்று தடவை என்னுடன் தொலைபேசியில் உரையாடத் தவறமாட்டார். வயிற்றில் வளரும் அவரது குழந்தை பற்றியும் என்னுடைய உம்மா வாப்பா பற்றியும் அன்பாக விசாரிப்பார்.

என்னுடைய மாமா மாமியும் எங்களோடு அன்பாகத்தான் இருந்தார்கள். மாமி வாரத்தில் இரண்டு தடவை வீட்டுக்கு வந்து போவார். இப்போதெல்லாம் வருவதில்லை.

என் கணவர் கட்டார் சென்று நான்கு ஐந்து மாதங்களுக்குள் எனக்கு அழகியதொரு பெண் குழந்தை கிடைத்தது. பிள்ளை கிடைத்ததும் கட்டாயம் ஊருக்கு வருவதாகக் கூறியவர் வரவில்லை. வேலைப்பளு என எண்ணிக்கொண்டேன்.

பிள்ளை கிடைத்ததும் கட்டாயம் ஊருக்கு வருவதாகக் கூறியவர் வரவில்லையே  என உம்மாவிடம் வருத்தப்பட்டுச் சொன்னபோது, பக்கத்திலிருந்த வாப்பா,

“எப்படி வருவார். அவர்தானே என்ஜீனியர் எண்டு நம்மளையெல்லாம் ஏமாத்தி சொத்துக்கு ஆசைப்பட்டு ஒண்ட வாழ்க்கையப் பாழாக்கிப்போட்டார். ஒண்ட புருஷன் சூப்பர் மார்க்கட்டுல வேலை செய்கிறாராம். சலீம் நானாட மகன் ஊருக்கு வந்தபோது அவன்ட வாப்பாக்கிட்ட சொல்லியிருக்கான். சலீம் நானா ஒரு ஓட்டை வாயன். இந்த ஊரெல்லாம் சொல்லியிருக்கான். கடையிலே இருக்கமுடியல்ல. வாறவன் போறவனெல்லாம் இதத்தான் கேட்கிறான். நீ நிறைமாதக் கர்ப்பிணியா இருந்ததால  ஒணக்கிட்ட சொல்லல்ல.” – வாப்பா மீண்டும் பொரிந்து தள்ளினார்.  

என்ன செய்வதென்று புரியவில்லை. எதற்கும் பொறுமையாக இருந்து கணவரிடம் இதுபற்றி விசாரிக்கவேண்டும். இது எனது வாழ்க்கைப் பிரச்சினை. கையில் ஒரு குழந்தை. வாப்பா சொல்வது போல தூக்கியெறிந்துவிட முடியாது. பிள்ளையினதும் என்னுடையதும் எதிர்காலத்தை யோசித்துத்தான் முடிவெடுக்கவேண்டும். முதலில் பிள்ளைக்குப் பதிவு வைக்க வேண்டும் என எண்ணியவாறு கணவரின் பிறப்புச் சான்றிதழிலுள்ளவாறு தகவல்களைப்பெற, அவரது முக்கிய ஆவணங்கள் கொண்ட  கோப்பைத் திறந்தேன். அப்போதுதான் அவரது மேற்படிப்புப் பட்டம் முடித்ததிற்கான  சான்றிதழ் கண்சிமிட்டியது. “சிவில் என்ஜினியேறிங் உயர் டிப்ளோமா” எனக் காணப்பட்டது.  சிவில் என்ஜினியேறிங் உயர் டிப்ளோமா முடித்ததன் பின், சில தனியார் கல்வி நிறுவனங்களில் என்ஜினியேறிங் படிப்பைத் தொடர்வதுண்டு. அவ்வாறு தொடர்ந்தாரோ தெரியவில்லை. எதற்கும் இதுபற்றி இன்றே கணவருடன் கதைக்கவேண்டுமென எண்ணிப் பிள்ளையைத் தூங்கவைத்துவிட்டு ஆயத்தமானேன்.

“நான் ஆயிஷா. அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வஸ்ஸலாம் ஆயிஷா. இப்பதான் எங்க வாப்பாவுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். நான் உம்மா வாப்பாவுக்கு பொய் சொல்லினதால அவங்க என்னை என்ஜினியர் எண்டு சொல்லி உனக்கு கலியாணம் முடிச்சிக் கொடுத்ததாகவும் இப்ப நான் சூப்பர் மார்க்கட்டுல வேலை செய்யிறதாகவும் ஊரில கதைக்கிறாங்களாம். ஊரில தலகாட்ட முடியல்லயாம். அவங்கட முகத்தில முழிக்கக்கூடாதாம். மாமாவும் வாப்பாக்கிட்ட மிச்சம் மனவருத்தப்பட்டு பேசியிருக்காங்க. சொத்துக்காக ஏமாத்தி எண்ட புள்ளட வாழ்க்கைய நாசமாக்கிப்போட்டியள் எண்டு சொன்னாராம். உண்மையாக நான் ஏமாத்தல்ல ஆயிஷா.” எனக் கவலையுடன் கூறினார்.

“நானும் ஒரு முடிவு எடுக்கவேண்டுமென்றுதான் இப்ப கோள் எடுத்த. பிள்ளை பிறந்ததும் வருவேன் என்ற நீங்க இதுவரைக்கும் வரல்ல. ஒவ்வொரு நாளும் கதைக்கிற நீங்க இதுபற்றி ஒரு வார்த்தைகூடக் கதைக்கல. பிள்ளைக்கு பதிவு வைக்க உங்கட பிறப்புச் சான்றிதழை தேடும் போதுதான் உங்கட சிவில் என்ஜினியேறிங் உயர் டிப்ளோமா முடித்த சான்றிதழைக் கண்டேன். இப்பதான் எனக்கும் தெரியிது, நீங்க என்ஜினியர் இல்ல எண்டு” – நான் பேசி முடிப்பதற்குள் இடையில் குறுக்கிட்டவர்,

“அப்படியில்ல ஆயிஷா. நான் ஃபைனல் என்ஜினியர் எக்ஸாம் எடுத்தேன்,. ஆனால் பெயில் ஆகிட்டேன். இன்னும் ஒரு வருடத்துக்குள்ளே பாஸ் பண்ணிடலாம். கையிலே காசு இல்லாததாலும் உம்மா வாப்பாவ தொடர்ந்து சிரமப்படுத்தப்போடாது என்பதாலும் அப்ப நான் இருந்த நிலையில எக்ஸாம் பாஸ் பண்ணியதாக சொல்லிட்டேன். இங்கவந்து ஒரு நல்ல கம்பனியிலே வேலைசெய்யலாம் என்றுதான் முயற்சிசெய்தேன். ஆனா நல்ல இடம் கிடைக்கல்ல. சும்மா இருக்கக்கூடாது என்றுதான் சூப்பர் மார்க்கட்டுல தற்காலிகமாக வேலைசெய்றேன். அதுக்குள்ள இப்படியாப்போயிட்டு.” - அவரது குரல் தளதளத்தது. நான் மெளனமானேன். தொடர்ந்தும் அவரே பேசினார்.

“என்னக் கல்யாணம் பண்ணிக்கச்சொல்லி உம்மாவும் வாப்பாவும் அவசரப்படுத்தியதாலேதான் ‘எனக்குப் பெண் பிடிக்கல்ல என்று சொல்லி தப்பிக்கலாம்’ என நினச்சு உன்ன பெண்பார்க்க வந்தேன். ஆனா உன்னப் பார்த்து இரண்டு வார்த்தை பேசியதும்  நீதான் என் மனைவியெண்டு முடிவெடுத்திட்டேன். இப்பகூட நீ எந்தவித பிழையான முடிவையும் எடுக்கமாட்டாய் எனத் தெரியும். உன்னையும் பிள்ளையையும் உசிராக மதிக்கிறேன். எனக்கு நீ வேண்டும். என் பிள்ளை வேண்டும். குடும்பத்தோடு சந்தோஷமா வாழ வேண்டும். நீ என்னை மன்னிச்சிடு ஆயிஷா. – அவரது குற்ற உணர்வு என்னை ஒரு கணம் தடுமாறவைத்தது.

“சரி. ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க. போய்த் தூங்குங்க. நடந்தது நடந்து போயிட்டு. எல்லாம் நன்மைக்குத்தான். நாளை கதைப்போம்” எனக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்த எனக்கு நா வறண்டது. சிறிது நீர் அருந்தினால் நன்றாக இருக்குமென எண்ணி வெளியே வந்தபோது நள்ளிரவு இரண்டு மணியாகியும் உம்மாவும் வாப்பாவும் தூங்காது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். நான் கண்டும் காணாததுபோல் நீரை அருந்திவிட்டு எனது படுக்கையறைக்குச் சென்றேன். அன்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை. என்ன செய்யலாம் என விடியும்வரை யோசித்தேன்.

அடுத்த நாள் காலை வாப்பாவிடம் சென்று “வாப்பா அவர் நம்மள ஏமாத்தவேண்டுமென்று பொய் சொல்லித் திருமணம் செய்யவில்லை. என்னையும் பிள்ளையையும் உசிரா மதிக்கிறார் வாப்பா. அவர் நல்லவர். நல்ல வேலை ஒன்று கிடைச்சா அவர்ர படிப்ப முடிச்சிடலாமென்றுதான் வெளிநாடு சென்றிருக்கார். ஆனா வேலைகிடைக்கல்ல. நல்ல வேலையொன்றைத் தேடும்வரை காலத்த வீணாக்கக்  கூடாதென்றுதான் சூப்பர் மார்க்கட்டுல வேலை செஞ்சாராம். என்ஜினியர் என்று பெரிய எடத்துல கலியாணம் செஞ்சவர் சூப்பர் மார்க்கட்டுல வேலை செய்யிறத்த கண்ட நம்மட ஊர் மக்கள் ஊரில கதைய பரப்பிட்டாங்க.” நான் சொல்லி முடித்ததும் வாப்பா ஏதாவது சொல்லுவார் என எதிர்பார்த்தேன். ஒன்றுமே சொல்லவில்லை. ஏமாற்றமாக இருந்தது. அதனால் நான் தொடர்ந்தேன்.

“வாப்பா நான் அவர ஊருக்கு வரச்சொல்லப்போறன். வந்ததும் உங்கட கடையில  கணக்கு வழக்குகளை பாத்துக்கொண்டு ஒரு வருஷம் இருக்கட்டும். அவருக்கு நீங்க விரும்பின சம்பளத்தக் கொடுங்க. அந்தக் காசுல அவர்ர படிப்ப முடிக்கட்டும். பொறகு யாரு என்ன கதைக்காங்க என்று பார்ப்போம்.”

எனது வேண்டுகோளைப் புறக்கணிப்பதுபோல் எழுந்து அடுத்த அறைக்குச் சென்று விட்டார் வாப்பா.

ஈற்றில் எனது எண்ணமே ஈடேறியது. எனது கணவர் நாடு திரும்பிவந்து எனது வாப்பாவின் கடையை முகாமைத்துவம் செய்து ஒரு வருடத்துக்குள் தனது படிப்பையும் பூர்த்திசெய்துவிட்டார்.

முகத்தை முறித்துக்கொண்டு பல மாதங்கள் பகைத்துக்கொண்டிருந்த சம்மந்திகள் சிரித்த வதனங்களோடு மகிழ்ச்சியாக கொழும்பு நோக்கிய எங்கள் பயணத்தோடு இணைந்துகொண்டனர்.

நாளை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அதில் எனது கணவரும் பொறியியல் பட்டம் பெறப்போகும் தருணத்தைக் கற்பனைசெய்தவாறு மகிழ்ச்சிக்கடலில்  மூழ்கினேன்.

(முற்றும்)

எஸ். ஏ. கப்பார்.

 *****

தொடர்பு: 0776968671

மின்னஞ்சல்: kavignarsagaffar@gmail.com

  

(,r; rpWfij jkpo;neQ;rk; xf;Nlhgu; 2024 ,jopy; gpuRukhdJ. jkpo;neQ;rk; gpujk Mrpupau; mkpd; nkh`kl; mtu;fSf;Fk; Mrpupau; FOtpw;Fk; kdkhu;e;j ed;wp.)

No comments: