Saturday, January 30, 2010

Ennul Nee

என்னுள் நீ...

என்னுள் நீ ஆகிவிட்டாய்
உன்னுள் நான் ஆகுமுன்னே!
அழகில்லை நீ என்றார்கள்
அறிவும் உனக்கில்லை என்றார்கள்.

அடங்காப் பிடாரி நீ
ஆகாது குடும்பத்திற் கென்றார்கள்.
ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் அறியாப் பருவத்திலே!

கள்ளம் என்றனர் உன்னன்பு
கபடம் என்றனர் உன்காதல்.
வஞ்சகி என்றனர் உன்னை
வாழ்வுக்காகா நீ சூத்திரக்காரி என்றனர்.

ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் தெரியாப் பருவத்திலே!

என்னுள் நீயாக
உன்னுள் நானாக
என்மடியில் நீயாக
உன்மடியில் நானாக

நீ நானாக
நான் நீயாக....... ஜீரணிக்கமுடியாத
அந்தக் காதல் நிஜங்கள்
அற்றுப் போகவில்லை
இன்னும் என் மனதைவிட்டு.

ஆனாலும் என்னுள் நீ
ஆகிவிட்டாய் என்றோ!

நாளை நீ மணப்பெண்ணென்று
நாசுக்காய் கூறியபோது -
நான் நானாக இல்லாமை உணர்ந்தும்
நடைப் பிணமாகவில்லை.

அன்றும் நீ என்னுள்
ஆகிவிட்டவள் என்பதனால்!

நாட்கள் வாரங்களாகி
வாரங்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாகி
இருபது வருடங்கள் சென்றும்

இன்றும் என்னுள் நீ
ஆகிவிட்டவள் தான்!

காரும் பங்களாவும்
காசும் பணமும்
கசந்து போய்
இத்தனை வருடங்களின்பின்
உன்னுள் என்னை
உள்வாங்க நினைக்கிறாயே!
இது என்ன விந்தை!!

உள்வாங்கல் என்பது
வெளித்தள்ளல் போல்
அவ்வளவு லேசுப்பட்டதல்ல -
காதலைப் பொறுத்தவரை.

நானும் இன்று ஓர் இதயத்தின்
உள்வாங்கல்தான் -
என் செல்வங்களின்
உயிர்நாடிதான்.

ஆனாலும் என்னுள் நீ ஆகிவிட்டவள்
என்பதனால் உன்னில் ஒரு பரிதாபம்.

என்னுள் ஆகிவிட்ட
உன்காதலின் வெளித்தள்ளல்கள்
என் மரணத்தின்பின்
உன்னுள் உள்வாங்கப்படும்!

அப்போது நான்
ஆகியிருப்பேன் உன்னுள்!!

No comments: