Saturday, January 30, 2010

En Kaathal Neethan

என் காதல் நீதான்...

பள்ளி வகுப்பறை முன் பந்தியிலே
கள்ளிபோல் என் பக்கம் வந்தமர்ந்து
விரல் நுனிகொண்டு புறங்கால் வருடி
விழிபிதுங்கும் என்னை வேடிக்கை பார்ப்பாள்.

விட்டென்று விலகி விரல்படா தூரம்தாண்டி
விந்தையாய் அவள் விழிகளை நோக்கின்
விஷமத்தனம் செய்யும் சிறு பிள்ளையாய்
விழியுருட்டி வேடிக்கை காட்டிடுவாள்.

பள்ளி விட்டு வெளியில் வரும்போதும்
தள்ளி நின்று கை அசைத்து
தந்திரங்கள் பல செய்து சுமை
தாங்கவொனா என் இதயத்தைத் தாக்கிடுவாள்.

கடைத் தெருவினிலும் கல்யாண வீட்டினிலும்
கல்லூரி விழாக்களிலும் களியாட்ட நிகழ்ச்சியிலும்
தன் இடக்கண் மடித்து இமையுயர்த்தி
என் இதயம் ஒருகணம் நிறுத்திவைப்பாள்.

வெலவெலத்து சுற்றும் முற்றும் பார்ப்பேன்
வெள்ளரிப் பழம்போல் அவள்முகம் தோன்றும்
வெட்கித் தலைகுனிந்து - அவளல்ல நான்தான்
வெயர்ப்புத் தோன்றி விரல்களைப் பிசைவேன்.

கல்லூரிப் படிக்கட்டின் முடி நிலைக்
கட்டொன்றில் கால்தடுக்கி எனை விழவைத்து
கட்டிக்கப் போறவள் கைபிடித்துக் காப்பாற்றினாற்
களங்கம் வந்திடுமோ உன் கற்புக்கென்றாள்.

இத்தனையும் செய்த அவள் ஏனென்னை
இச்சையின்றி வெருவலர் போல் வெருட்டுகிறாள்?
பூனையாய் இருந்த என்னைப் புலியாக்கிவிட்டு
பூச்சிகாட்டுகிறாளா பூட்கை இன்றி!

எட்டி உதைத்து எச்சில் உமிழ்ந்து
ஏளனப்படுத்தி என்மீது எரிகணை வீசிடினும்
அடித்து இழுத்து ஆலமரத்தில் ஏற்றி
அங்கிருந்து தள்ளிவிட்டு ஆனந்தப் பட்டாலும்

மூக்குடைந்து முன் பல் குத்தி
நாக்குடன் உதடு கிழிந்து உதிரம்
கொப்பளித்து உள் மூச்சு வாங்கிடினும்
என் காதல் நீதான் என்றுரைப்பேன்.

இப்போதே வந்துவிடு இல்லையேல் நானுன்னை
ஈசனுக்கு இன்றே இரையாக்கி விடுவேன்
இன்னொருவன் என் போல் இனிமேலும்
இறு நிலை கொள்ளாமல் இருப்பதற்கு.

No comments: