சிறுகதை.
நோன்பின் மாண்பு
அமீனுல்லா வீட்டை விட்டு வெளியேறி இன்றுடன் ஒரு மாதமாகிவிட்டது.
அமினா அமீனுல்லாவின் மனைவி. ஏழைக்
குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது தந்தை ஓர் கூலித்தொழிலாளி. தினமும் கூலி
வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில் தன் குடும்பத்தை
ஓட்டி வந்தார். அமினாவின் உம்மா வீட்டில் இடியப்பம் செய்து உறவினர்களுக்கும்
அயலவர்களுக்கும் விற்று வந்தார். அப்போது அமினாவுக்கு 13 வயது. பாடசாலை செல்லும் நேரங்கள் தவிர ஏனைய
நாட்களில் உம்மாவுக்குத் துணையாக இருந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து
வந்தாள். படிப்பில் நல்ல கெட்டிக்காரி. எப்படியோ கஷ்டப்பட்டு உயர்தரம் வரை
படித்தவளுக்குப் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிட்டவில்லை. வீட்டின் நிலைமை
காரணமாக தொடர்ந்து படிக்க விரும்பாத அமினா ஒரு தனியார் கம்பனியில் வேலைக்குச் சேர
விரும்பி தன் உம்மாவின் அனுமதி வேண்டி நின்றாள்.
'என்ன மவ சொல்றீங்க. நானும் உங்க வாப்பாவும் இத்தன நாளும் கஷ்டப்பட்டது இதுக்குத்தானா? நீங்க படிச்சு ஒரு டீச்சர் வேலையாவது
பார்ப்பீங்க என்றுதானே நெனச்சம். தனியார் கம்பனில வேலை செய்றதல்லாம் மிச்சம்
கஷ்டம் என்று சொல்றாங்க. அதுவும் பொம்புள புள்ளகள தனியார் கம்பனிக்கு வேலைக்கு
அனுப்பக் கூடாதென்று சொல்றாங்க' என கவலைப்பட்டார் அமினாவின் உம்மா.
'அப்படி எல்லாம் இல்ல உம்மா. எங்க போனாலும் நாம மானம் மரியாதையோட
இருந்தா சரிதான் உம்மா. நமக்குத் தாற வேலைய நாம செய்து போட்டு நேரத்துக்கு
வீட்டுக்கு வந்தா சரிதானே உம்மா' என தனது முடிவை நியாயப்படுத்தினாள் அமினா.
'என்னவோ நான் உலகம் தெரியாதவ. என்னவெண்டாலும்
உங்க வாப்பா வந்ததும் கேட்டுப் பாரு' எனக் கூறியவாறு நகர்ந்து சென்றார், அமினாவின் உம்மா.
இவ்வளவு காலமும் எத்தனையோ சிரமங்களையும்
தியாகங்களையும் மேற்கொண்டு தன்னை உயர்தரம் வரை கற்பித்த தன் பெற்றோரை மேலும்
மேலும் சிரமப்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தை தனது தந்தையிடம் எவ்வாறு
தெரியப்படுத்துவது என அறியாது வருந்தினாள் அமினா. எதுவாகிலும் ஒரு தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு வாப்பா வந்ததும் எப்படியாது இணங்க வைத்து அடுத்த வாரம் முதல் வேலைக்குச்
செல்ல வேண்டுமென முடிவெடுத்தாள் அமினா.
அன்று மாலை நேரம் வேலைகளை முடித்துவிட்டு வீடு
வந்த வாப்பாவை அணுகி,
'வாப்பா. எனக்கு தொடர்ந்து படிக்க விருப்பமில்லை
வாப்பா. இத்தோடு நிறுத்திக் கொண்டு ஏதாவது நல்ல வேலயில சேரலாம் என
விரும்புறேன். நம்மட காசிம் மாமாட மகளும் அந்த கம்பனியில்தான் வேல செய்யிறா. நல்ல
சம்பளமும் கொடுக்கிறாங்களாம். வேலையும் அவ்வளவு கஷ்டமில்லையாம். வேலைக்கு இன்னும் ஆட்கள் தேவையாம். அதுதான் நானும்
போகலாம் என விரும்புறேன் வாப்பா. நீங்க ஆம் என்று சொன்னால் போறன். நம்மட
கஷ்டங்களும் கொஞ்சம் கொஞ்சம் சரியாகிடும். உங்களுக்கும் வயசாகிப் போகுது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்களும்
உம்மாவும் இப்படி கஷ்டப்படுற. சரி என்று சொல்லுங்க வாப்பா' எனக் கெஞ்சி நின்றாள்.
மிக நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த
அமினாவின் வாப்பா ஒரு பெரு மூச்சு விட்டவாறு,
'நான் என்னம்மா சொல்ல இருக்கு. நீ விரும்பிக் கேட்ட எதைத்தான் இல்லண்டு சொல்லியிருக்கேன். நான் படிக்காதவன்.
உனக்குத்தான் நல்லது கெட்டது தெரியும். உங்க உம்மா விரும்பினா வேலைக்குப் போ.
அவ்வளவுதான் நான் சொல்ல ,ருக்கு' எனக் கூறிவிட்டு எழுந்து சென்று தொழுகைக்குச்
செல்ல ஆயத்தமானார்.
அமினா சந்தோசமடைந்தாள். அடுத்த வாரம் முதல்
வேலைக்குச் செல்ல ஆயத்தமானாள்.
சுமார் ஐந்து வருடங்களின் பின் அமினாவுக்குத்
திருமணம் முடித்து வைக்க மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமானது. எப்படியாவது ஓர் அரச
தொழில் புரியும் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். முடியவில்லை. இறுதியில் அமினாவின் தூரத்து உறவுக்காரர் மூலம்
வெளிநாடு சென்று திரும்பி வந்து சொந்தமாக ஆட்டோ வைத்துத் தொழில் புரியும்
அமீனுல்லா மாப்பிள்ளையாகக் கிடைத்தான். திருமணமும் நல்ல முறையில் எளிமையாக
நடைபெற்றது. முதல் ஒரு வருடம் எந்தவொரு பிரச்சினையும் ,ல்லாமல் வாழ்க்கை ஓடியது. ஓர் அழகிய ஆண்
குழந்தையும் கிடைத்தது.
நாட்கள் செல்லச் செல்ல அமீனுல்லாவின் மாத
வருமானம் குறைந்து கொண்டே செல்ல தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு இருவர் உழைத்தும் ஈடுகொடுக்க முடியாது
தடுமாறினான். இதன் நிமித்தம் இடைக்கிடை இருவருக்கிடையேயும் மனத்தாபங்கள் ஏற்படத்
தொடங்கின.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் உணவருந்தும் போது
பரிமாறிய உணவில் ஒரு தலை முடி கிடந்ததால் ஏற்கனவே அமினாவுடன் கோபத்தில் இருந்த அமீனுல்லா,
'சீ... என்ன இது. கண்ணை எங்க வைத்துக் கொண்டு சமைக்கிறது. வர
வர கழுத தேஞ்சு கட்டெறும்பான கதையாப் போச்சு. நல்லாப் பாரு. கண்ணத் தொறந்து பாரு' என ஆத்திரப்பட்டு சாப்பாட்டுத் தட்டைத் தட்டி
விடவும் அமினாவின் உம்மா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
இண்டைக்கு லீவு நாள். நான் சமைக்கிறன் எண்டுதான்
சொன்னேன். உம்மாதான் வழக்கம் போல சமைச்சாங்க. வயது போன காலத்துல தவறுதலா முடி
விழுந்தத கவனிக்கல்ல போல. இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி ஆட்டம் போட்டா எப்படி?' என்றாள் அமினா.
மனைவிதான் சமைத்தாள் என நினைத்து ஆர்ப்பாட்டம்
செய்த அமீனுல்லாவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு
மீண்டும் உணவுத் தட்டை அருகில் எடுத்து உணவருந்தி விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு
வெளியே சென்று விட்டான்.
'உம்மா, கொஞ்சம் பார்த்து சமைக்கிறதுதானே. சாப்பாட்டில
முடி கிடந்தது என்று கத்துறார். பாத்தாய் தானே' என்றாள் அமினா.
ஒன்றுமே பேசாமல் நகர்ந்து விட்டார் அமினாவில்
உம்மா. சில நாட்களாக மருமகனின் செயற்பாடு அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. ஆதலால்
ஏதாவது கதைத்து பிரச்சினையைப் பெரிதாக்கிக் கொள்ள விரும்பவில்லை.
நாட்கள் சில கடந்தன. ஒரு நாள் 'இஞ்ச பாருங்க. அடுத்த மாதம் நோன்பு
ஆரம்பமாகுது. தலை நோன்புக்கு மாமி வீட்டுக்கு நோன்புச் சாமான்கள் அனுப்ப வேண்டும்.
உங்கட உம்மா வாப்பா தங்கச்சிக்கெல்லாம் உடுப்பும் எடுக்க வேண்டும். இப்படியே தொழில் இல்ல தொழில் இல்ல என்று வீட்டிலேயே இருந்தா எப்படி. என்ட சம்பளம் சாப்பாட்டுக்கு
மட்டும்தான் போதும். மத்த வேலைகள் எல்லாத்துக்கும் நீங்கதான் ஒரு வழி பண்ண
வேண்டும்.' என அமினா கூறிய வார்த்தைகள் அமீனுல்லாவின்
மனதைப் புண்படுத்தின. தான் தொழில் செய்யாது வெட்டியாக வீட்டில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிக் கதைக்கிறாள் என
எண்ணி வருந்தினான்.
பெற்றோல் விலையேற்றத்தின் பின் ஆட்டோ தொழிலில்
சரியான வருமானம் கிடைக்காததையிட்டு கவலைப்பட்டான். வேறு தொழில் செய்யவும்
தெரியவில்லை. தனது ஆட்டோவை விற்றுவிட்டு மனைவி மக்களைத் துறந்து மீண்டும் வெளிநாடு
சென்று உழைத்தால் என்னவென யோசிக்கலானான். வெளிநாடு செல்லும் வரை தன் மனைவியைப்
பிரிந்து தனது உம்மாவின் வீட்டில் தங்கியிருப்பதாக பிழையானதொரு முடிவெடுத்து
உம்மாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டான் அமீனுல்லா.
தன் கணவனின் செயலைச் சற்றும் எதிர்பாராத அமினா
வேதனையடைந்தாள். தன் மாமியின் வீட்டுக்குப் பல தடவைகள் சென்று தன் கணவனை
வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். ஆனால் அமீனுல்லாவின் பிடிவாதம் விட்டுக் கொடுக்க
மறுத்தது. வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அமினாவின் மாமி நல்ல வார்த்தைகள் கூறி
நம்பிக்கையூட்டி அனுப்பிவைப்பார். பிள்ளைகளின் செயல்களுக்குத் தாய்மார் என்ன செய்ய
முடியும்.
நாளை தலை நோன்பு. தலை நோன்புக்குரிய ஈச்சம்
பழம், கோழி இறைச்சி, அரிசி, தேயிலைத் தூள், சீனி, பால் மா, குளிர்பானம் போன்ற பொருட்களெல்லாம் வாங்கிக் கொண்டு தனது மகனையும் உம்மாவையும்
அழைத்துக் கொண்டு மாமியின் வீட்டுக்குச் சென்றாள், அமினா. அவ்வேளை அமீனுல்லா வீட்டில் இருக்கவில்லை.
பேரப்பிள்ளையைக் கண்ட சந்தோசத்தில் ஓடி வந்த
அமினாவின் மாமனார் தன் பேரப்பிள்ளையைத் தூக்கி உச்சி முகர்ந்து ஆனந்தப்பட்டார்.
'மவ, இஞ்ச வாங்க. யாரு வந்திரிக்காங்க என்று பாருங்க'
வாப்பாவின் குரல் கேட்டு வெளியே வந்த அமினாவின்
மதினி,
'வாங்க மாமி. வாங்க மதினி. டேய் செல்லக் குட்டி.
வாடா' என வாப்பாவின் கையிலிருந்த அமினாவின் மகனை
பெற்றுக்கொண்டாள். இதற்கிடையில் குசினியில் வேலை செய்து கொண்டிருந்த அமினாவின்
மாமி வெளியே சத்தம் கேட்பது அறிந்து வெளியே வந்தார்.
'சம்மந்தி, வாங்க வாங்க. அமினா வாப்பாவைக் கூட்டி வரல' என அன்போடு கேட்டார்.
'இல்ல மாமி. வாப்பா என்னவோ அலுவலா வெளியே
போயிட்டாங்க. பொறகு வருவாங்க. இத உள்ளே கொண்டு வையுங்க' எனப் பதிலளித்தவாறு கொண்டு வந்த தலை நோன்புச்
சாமான்களை மாமியின் கையில் கொடுத்தாள்.
உள்ளே சென்று நாற்காலிகளில் அமர்ந்த அமினா
சுற்று முற்றும் பார்ப்பதைப் புரிந்து கொண்ட அமினாவின் மாமி,
'அமீனுல்லா இப்பதான் கடைப் பக்கம் போறான். நாளைக்கு தலை
நோன்பு. மாமி வீட்டுக்கு தலை நோன்புச் சாமான் வாங்கி வர புள்ளட வாப்பா புறப்பட்ட
போது, இல்ல நான் வாங்கி வாரன் என்று சொல்லிக்
கொண்டிருந்தான்.'
இதைக் கேட்ட அமினாவுக்கு புதியதொரு நம்பிக்கைக்
கீற்று துளிர்விட்டதை அறிந்த அவளது தாய் மகிழ்வுற்றார்.
மாமியார் வீட்டிலிருந்து புறப்படும் வரை
அமீனுல்லா வீட்டுக்கு வரவில்லை.
அமினா வெளிக்கிட்டு ஓர் அரை மணி நேரத்தில் வீடு
வந்தான் அமீனுல்லா. அவனது மனைவி, மகன், மாமியார் சகிதம் வந்து நோன்புச் சாமான்கள்
தந்துவிட்டுப் போவதாகக் கூறி அப்பொருட்களை உபயோகிக்க அவனது அனுமதி வேண்டி நின்றார், அமீனுல்லாவின் உம்மா.
'உங்கட சம்மந்தி. உங்களுக்கு நோன்புச் சாமான்
கொண்டு வந்திருக்கா. அத ஏன் எனக்கிட்ட சொல்லுறீங்க. நானும் சாமான் வாங்கி
வந்திருக்கேன். நீங்களும் கொண்டு கொடுத்தாச் சரி' என்றான் அமீனுல்லா.
'டேய், நடந்தது நடந்து போச்சு. நமக்கும் கொமர் புள்ள ஒண்டு இருக்கு. அவள்ள வாழ்க்கையும் நெனச்சுப் பாரு.
நாளைக்கு அவளுக்கும் ஒரு மாப்பிள பாக்க வேணும். எல்லாத்தையும் போட்டுட்டு தலை
நோன்பும் நல்ல நாளுமா ஒண்ட பொண்டாட்டி புள்ளயளோட போய் வாழப் பாரு.'
'உம்மா நீங்களும் தங்கச்சியுமா மாமி
வீட்டுக்குப் போய் நான் வாங்கி வந்த நோன்புச் சாமான்களை கொடுத்திட்டு கெதியா
வாங்க. நான் நாளைக்கு நோன்பு புடிச்சிட்டு சுபஹு தொழ பள்ளிக்குப் போக வேணும்.
நேரத்தோடு தூங்கப் போறன்' கூறிவிட்டு நகர்ந்தான்.
'என்ன உம்மா. அவங்க இப்பதான் வந்திட்டு போறங்க. பின்னால நாம போறதா.
விடுங்க நாளைக்குப் பாப்பம். உங்கட மகன் புதிசா நோன்பு புடிச்சு பள்ளிக்கு தொழப்
போகப் போறாராம். அல்லாஹ்தான் நல்ல வழியக் காட்டட்டும்' என்றாள் அமீனுல்லாவின் தங்கை.
அதிகாலை எழுந்து வீட்டிலுள்ளவர்களுடன் சேர்ந்து
தானும் சஹர் செய்து தலை நோன்பு பிடித்து சுபஹ் தொழுகைக்காக பக்கத்திலுள்ள பெரிய
பள்ளிவாயலை அடைந்தான் அமீனுல்லா. தொழுகை முடிந்ததும் விசேட மார்க்கப் பிரச்சாரம்
(பயான்) ஊரில் பிரபலமான மௌலவி ஒருவரால் நிகழ்த்தப்பட்டது. பயான்களெல்லாம்
நிகழ்த்தப்படும் போது அமர்ந்திருந்து கேட்கும் பழக்கம் இல்லாத அமீனுல்லா என்னவோ அன்று அமர்ந்திருந்து
மௌலவியின் கணீர் என்ற குரலில் சொக்கிப் போனான்.
பயான் சொற்பொழிவின் ஒரு கட்டத்தில் 'தன் உறவுகளைத் துண்டித்து வாழும் மனிதன்
என்னைச் சேர்ந்தவன் அல்ல' என்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வசனத்தை மௌலவி
உரக்கக் கூறிய போது ஒரு கணம் அதிர்ச்சியுற்றான் அமீனுல்லா.
வீடு வந்து சேர்ந்த அமீனுல்லாவின் மனச்சாட்சி
அவனை இருப்புக் கொள்ள விடாது தடுத்தது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் கால்கள் நடை பயின்றன.
திடீரென தன் தங்கையை அழைத்து,
'ஹைறுன், மகரிப் தொழுதுவிட்டு நோன்புச் சாமான்களை மதினி
வீட்டுக்குக் கொண்டு போங்க. நானும் கூட வாரன். வாப்பாவிடமும் சொல்லு' எனக் கூறிவிட்டு உள்ளே சென்றான்.
ஒரு நோன்பு, ஒரு சுபஹூத் தொழுகை, ஒரு பயான் ஒரு மனிதனில் ஏற்படுத்திய
மாற்றத்தைக் கண்டு வியந்தவளாக 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்' எனக் கூறியவாறு ஆனந்தப்பட்டாள் அமினாவின் மதினி
ஹைருன்.
(முற்றும்)
தமிழ்நெஞ்சம் மார்ச் 2026 நோன்புப் பெருநாள் சிறப்பிதழில் பிரசுரமானது. பிரதம ஆசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கும் தொகுப்பாளர் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment