Thursday, May 14, 2026

போரும் புழுதி நிலமும் (27)

 

சிறுகதை.

 போரும் புழுதி நிலமும்

 பாலைவனத் தரைப் பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. ஆள் நடமாட்டம் மிக அரிதாய்க் கிடைக்கின்ற புழுதி நிலம். ஆங்காங்கே வரண்ட புற்தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காட்சியளித்தன. எப்போதாவது ஒரு ஆட்டிடையனைக் காணலாம்.

 சுமார் நானூறு அடி உயரத்தில் ஹெலிகொப்டர் ரக இராணுவ விமானமொன்று தான் சுமந்து வந்த சிறப்புப் பயிற்சி பெற்ற ஐந்து இராணுவக் கொமாண்டோக்களைத் தரையிறக்குவதற்கான சந்தர்ப்பம் பார்த்து மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

 அந்த விமானத்தைச் செலுத்தி வந்த விமானி ஏற்கனவே உலக நாடுகளுக்கிடையே நடந்த பல   போர்களில் இவ்வாறு தரைப் படையினரை தரையிறக்குவதில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவர். ஏற்கனவே நடைபெற்ற போர்களில் அவர் புரிந்த சாதனைகளைப் பாராட்டி அந்த நாட்டு ஜனாதிபதியினால் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட  ஒரு உயர் இராணுவ அதிகாரி.

 விமானம் நிலத்திலிருந்து சுமார் இருநூறு அடி வரை மெதுவாக மெதுவாக் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. ஐந்து இராணுவக் கொமாண்டோக்களும் தங்களது பயணப் பொதிகளையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் முதுகில் சுமந்து கொண்டு பரசூட்டில் கீழே இறங்குவதற்காக ஆயத்தமானார்கள்.

 நிலைமைகளை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இராணுவ கொமாண்டோக்களை தரையில் இறக்குவதற்கான சரியான இடத்தையும் அந்த இடம் எந்தவொரு பாதுகாப்புமற்ற இடம் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு விமானத்தைச் சிறிது வேகமாகக் கீழ் நோக்கிச் செலுத்திய வேளை,

 எங்கிருந்தோ வேகமாகச் சீறிப் பாய்ந்து கொண்டு விமானத்தை நோக்கி வந்த ஏவுகணையொன்று விமானத்தின் இடதுபக்க இறக்கையுடன் இணைந்த கதவின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு பாரிய சத்தத்துடன் நிலத்தில் விழுந்து சுக்கு நூறாகியது.

 விமானம் நிலை தடுமாறி சிறகுடைந்த தும்பிபோல் வட்டமிட்டது. வலது பக்க கதவின் ஓரத்தில் அமர்ந்திருந்த இரு கொமாண்டோக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது பரசூட்கள் மூலம் வெளியே பாய்ந்தனர். ஏனைய மூன்று கொமாண்டோக்களையும் விமானியையும் சுமந்து கொண்டு திசைமாறிய பறவையாய் அடர்ந்த மலைகளுக்கிடையே அந்த விமானம் மறைந்து மாயமானது. அந்த விமானத்திற்கும் அதிலிருந்த ஏனைய நால்வருக்கும் என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

 ஓரளவு பலத்த காற்றும் புழுதியும் பரசூட்டில் பாய்ந்த இரு கொமாண்டோக்களையும் மிகவும் சிரமத்தின் மத்தியில் கீழே கொண்டு வந்து சேர்த்தது. எந்தவித ஆபத்துகளும் இல்லாது நிலத்தில் கால்பதித்த இருவரும் சுற்றுமுற்றும் நோட்டமிட்டனர். கண்ணுக்கெட்டிய தூரத்தில் மனித நடமாட்டமோ குடியிருப்புகள் இருப்பதற்கான அறிகுறிகளோ எதுவுமே தென்படவில்லை. கடந்த சில நாட்களாக  இந்த நாட்டின் எல்லைப் புறத்தில் தரையிறக்கப்பட்ட தங்களது நாட்டைச் சேர்ந்த ஏனைய படையினருடன் எவ்வாறு சேர்ந்து கொள்வதெனத் தெரியாது தடுமாறினர். சிறிது நேரம் இருவரும் உரையாடிவிட்டு தரையில் அமர்ந்தனர்.

கொமாண்டோ வில்லியம் ஜூனியர் தன் பயணப்பொதியில் கைவிட்டு அதி நவீன தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை எடுத்து தன் உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தான். பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. என்ன செய்வதெனப் புரியாது தடுமாறிய வேளை,

 மற்றைய கொமாண்டோ நிக்கலஸ் றைட், 'நாம இங்க நிற்பது அவ்வளவு பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டுல கூலிப் படைகள் ஏராளம். அரச படைகளிடம் மாட்டினாலும் பரவாயில்லை. ஆனா இந்த கூலிப் படைகளுக்கிட்ட மாட்டிக்கிட்டா ரொம்ம சிக்கல். நம்மள சாகடிச்சிடுவாங்க. இப்பவே இருட்டாயிடுச்சு. எதற்கும் இந்த திசைகாட்டியைப் பாரு. அதில நாம இருக்கிற லொக்கேஷனும் நல்லாத் தெரியும். அத்தோட நம்மட ஆட்கள் இருக்கிற லொக்கேஷனும்; தெரியும்' எனக் கூறினான்.

 நிக்கலஸ் றைட் இடமிருந்து நவீன திசைகாட்டியைப் பெற்றுக் கொண்ட வில்லியம் தாங்கள் நிற்கும் திசைக்கு எதிரே சுமார் பத்து கிலோ மீட்டர்களுக்கு அப்பால் தங்களது நாட்டுப் படையினர் முகாமிட்டுள்ள இடம் காட்டப்படுவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தான்.

 'நிக்கலஸ். நாம இருக்கிற இடத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்திலே நம்மட ஆட்கள் இருக்கிறாங்க. எப்படியோ அவர்களைத் தொடர்பு கொண்டால் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.' என வில்லியம் கூறினான்.

 'தட்ஸ் றைட். இரவோடு இரவா அந்த இடத்தை அடைந்து விட்டால் தப்பிக்கலாம். எதற்கும் அந்த திசையை நோக்கி நடப்போம்' எனக் கூறியவாறு தனது தோற்பையிலிருந்து சிறிய பிஸ்கட் பக்கட் ஒன்றை எடுத்து உடைத்து வில்லியம் இடம் நீட்டினான், நிக்கலஸ்.

 பிஸ்கட் பக்கட்டிலிருந்து இரண்டு பிஸ்கட்களை எடுத்துக் கொண்ட வில்லியம் 'தங்ஸ்' எனக் கூறிவிட்டு தனது பையிலிருந்த தண்ணீர் போத்தல் ஒன்றை எடுத்து 'றை இட்' எனக் கூறியவாறு நிக்கலஸை நோக்கி நீட்டினான்.

 எவ்வாறான சூழ்நிலையிலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் இடத்திற்குத் தகுந்தவாறு உணவுகளை உட்கொள்ளவும் பழக்கப்பட்டுப் போன இவர்கள் தங்களது மனைவி மக்கள் குடும்பத்தினர் அனைவரையும் பிரிந்து வந்து தங்களது நாட்டுக்காக நாடு விட்டு நாடு சென்று பணி புரிவதென்பது ஒருவகை தியாகம்தான்.

 மாற்றான் படையினரிடம் மாட்டிக் கொள்வதற்குள் எப்படியோ தங்களது நாட்டுப் படையினருடன் இணைந்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் இருவரும் சிறிது இடைவெளி விட்டு நடக்க ஆரம்பித்தனர். இது போன்ற எத்தனையோ பாலவனங்களில் நடந்து பயிற்றப்பட்ட இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

 பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த நிக்கலஸ் திடீரென கேட்ட பலத்த வெடிச்சத்தத்தினால் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தனது இயந்திரத் துப்பாக்கியை இயக்க முற்பட்டான்.

 அதே வேளை முன்னால் சென்று கொண்டிருந்த வில்லியம் கால்கள் இரண்டும் சிதற முன்நோக்கி வீசப்பட்டு சுமார் ஐம்பது மீற்றருக்கு அப்பால் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

 அப்போதுதான் நிக்கலஸுக்குத் தெரிந்தது நடந்து செல்லும் பாதையில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பது.

 வில்லியம் சிதறிக் கிடக்கும் இடத்தை நெருங்க வேகமாகத் தன் கால்களை நகர்த்திய நிக்கலஸ் தனது இடது காலைத் தூக்காது அப்படியே நின்றான். தனது காலைத் தூக்கினால் தானும் சிதறிவிடுவேன் என எண்ணி முதன் முதலாக மரண பயத்தை உணர்ந்தான்.

 பல மணி நேரம் அப்படியே அசையாது நின்று கொண்டிருந்த நிக்கலஸின் கண் முன்னே வீட்டிலிருந்து வரும்போது தன் அன்பு மனைவி இரு பிள்ளைகளிடம் விடைபெற்றுக்கொண்டு வந்த காட்சி தோன்றி அவனைக் கொல்லாமல் கொன்றது. என்னதான் மனவுறுதி கொண்ட வீரனாக இருந்தாலும் தன் மனைவி மக்களின் எண்ணம் வரும் போது நிலைகுலைந்து விடுவது இயற்கைதான்.

 

ஜூலி அவனது காதல் மனைவி. முப்பது வயதான ஜூலியை தான் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். ஐந்து வயதில் ஒரு ஆணும் மூன்று வயதில் ஒரு பெண்ணும் அவர்களது அன்புச் செல்வங்கள். ஜூலி ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணிபுரிகிறாள். எல்லா வசதிகளும் கொண்ட வாடகை வீடு. மகனை இந்த வருடம் தான் பாடசாலையில் சேர்த்துள்ளார்கள்.

 நிக்கலஸின் பெற்றோர் பிரான்ஸைச் சேர்ந்தவர்கள். ஜூலியின் பெற்றோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தொழில் நிமிர்த்தம் லொஸ் ஏஞ்சலில் குடியேறியவர்கள். நிக்கலஸ் மற்றும் ஜூலி இருவருக்கும் சகோதரர்கள் இல்லை.

 நிக்கலஸ் இராணுவத்தில் சேர்வது அவனது பெற்றோருக்கு விருப்பமாக இருக்கவில்லை. நிக்கலஸின் பிடிவாதம்தான் இராணுவத்தில் சேர்த்துவிட்டது. பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற முப்பத்து மூன்றே வயதான நிக்கலஸ் இராணுவத்தில் சேர்ந்து மிகக் குறுகிய காலத்திற்குள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் படையுடன் சேர்ந்து கொண்டான்.

 இறந்துபோன தன் நண்பனை நெருங்க முடியாமல் தன்னந்தனியே கால்கள் கடுக்க நிலத்தில் வைத்த காலை எடுக்க முடியாமல் இரவு முழுக்க நித்திரை இன்றி வருந்திய நிக்கலஸ் அப்போதுதான் காலைப் பொழுது புலர்வதை உணர்ந்தான்.

 வியர்வை ஆறாக ஓடியது. முகம் வரண்டு பிசுபிசுப்பாக இருந்தது. தன்னைக் காப்பாற்ற சிறப்புப்படையினர் யாராவது வரமாட்டார்களா என எண்ணியவாறு தன் பார்வையைத் திருப்பிய நிக்கலஸ் தூரத்தில் ஒரு கிராமவாசி மொட்டைத் தலையுடன் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். தன் இரு கைகளையும் உயர்த்தி உதவுமாறு சைகை காட்டினான். இவனது சைகையைப் புரிந்து கொண்டு சிறிது தூரம் நெருங்கி வந்த அந்தக் கிராமவாசி நிக்கலஸின் தோளில் துப்பாக்கி தொங்குவதைக் கண்டதும் பதறி அடித்துக் கொண்டு திரும்பி ஓடிவிட்டான்.

 சில மணி நேரங்களின் பின் அவ்வழியே ஒரு ஆட்டிடையன் மூன்று நான்கு ஆடுகளைக் கயிற்றில் கட்டிக் கொண்டு கயிற்றைத் தன் இடது கையால் பிடித்தவாறு நடந்து வந்தான். முதலில் நிக்கலஸைக் கண்டது ஆட்டிடையன் தான்.

 விபரமறியாது நிக்கலஸை நெருங்கிய ஆட்டிடையன் சல்மான், நிக்கலஸின் தோளில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு முதலில் பயந்தான்.

 சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய நிக்கலஸ் சைகைகள் மூலம் நடந்தவற்றைக் கூறி அவனைக் காப்பாற்றுமாறு வேண்டினான்.

 நிலைமையைப் புரிந்து கொண்ட சல்மான் வெளிநாட்டுப் படையினரான இவர்கள் இங்கு எப்படி வந்தார்கள் என அறிய முயற்சித்து பல கேள்விகள் கேட்டான். நிக்கலஸ் கதைப்பது சல்மானுக்குப் புரியவில்லை. சல்மான் கதைப்பது நிக்கஸுக்குப் புரியவில்லை. இருந்தும் இதற்கு முன்பும் வெளிநாட்டுப் படையினர் கண்ணிவெடிகளில் சிக்கி இப் பகுதியில் மரணமானது சல்மானுக்குத் தெரியும். இவர்களுக்கு உதவப் போய் தான் மாட்டிக் கொண்டால் என்ன செய்வதென நினைத்த சல்மான் 'எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்' என நம்பிக்கை கொண்டு தான் ஓட்டிவந்த ஆடுகளைக் கட்டி வந்த இரு நீளமான கயிறுகளை எடுத்து நிக்கலஸின் இடுப்பை வளைத்து இறுகக் கட்டினான்.

 தூர நின்று கயிற்றை வேகமாக இழுப்பதன் மூலம் தன்னை விடுவிக்கப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட நிக்கலஸ் அதற்கு ஈடுகொடுத்து கயிற்றை இழுக்கும் போது தன் பலம் கொண்டு எகிறிவிட வேண்டுமென நினைத்து தன் உடம்பின் மேற்பகுதியில் சிலுவைச் சின்னத்தை தன் விரல்களால் இட்டுக் கொண்டான்.

 சல்மான் வாட்டசாட்டமான துணிகர இளைஞன். ஆடு மேய்ப்பதுதான் அவனது தொழில். அவன் தன் பெற்றோருடன் வசிப்பது சிறிது தூரத்தில் தெரியும் மலையடிவாரத்தில்தான்.

 இடுப்பில் கட்டிய கயிற்றை மீண்டுமொரு முறை சரிபார்த்த சல்மான் நிக்கலஸின் தோளில் தொங்கிய துப்பாக்கியைக் கீழே போட்டுவிடுமாறு கூறிவிட்டு வாய்க்குள் ஏதோ முணு முணுத்தவாறு சடுதியாக கயிற்றை இழுத்தான். அதற்கேற்றால் போல் அதி வேகமாகச் செயற்பட்ட நிக்கலஸ் எகிறி வெளியே குதித்தான்.

 

நிக்கலஸ் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. நிக்கலஸ் ஓடி வந்து சல்மானைக் கட்டியணைத்து முத்தமிட்டான். எந்தவித முரண்பாடுகளுமற்ற இரு மனித ஜீவன்களின் உணர்வுகள் மட்டுமே அங்கு தென்பட்டன.

 சல்மான் நிக்கலஸ் கால் வைத்திருந்த இடத்தை நெருங்கி நன்றாக உற்றுப் பார்த்தான். அது கண்ணிவெடியல்ல. ஒரு சிறிய இறப்பர் பொம்மை. அதைக் கையில் எடுத்து நிக்கலஸிடம் கொடுத்தான். அது நிக்கலஸின் பிள்ளைகள் விளையாடும் பொம்மையை ஒத்ததாக இருந்தது. அதை தனது தோற்பையில் பத்திரப்படுத்திக் கொண்ட நிக்கலஸ் மீண்டும் சல்மானைக் கட்டியணைத்து தனது கழுத்தில் போட்டிருந்த இயேசு நாதரின் உருவத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை சல்மானின் கழுத்தில் மாட்டிவிட்டான். இன, மத, நிற, தேச வெறி என்பவற்றுக்கெல்லாம் அப்பால் மனித நேயம் மகத்தானது.

 சிறிது நேரத்தில் நிக்கலஸின் பையிலிருந்த தொலைத் தொடர்பு சாதனம் அலறியது. வேக வேகமாக கையிலெடுத்து உரையாடிக் கொண்டிருக்கும் போது மேலே விமானமொன்று தாழப் பறந்து நீளமான ஏணியொன்றை கீழே இறக்கியது. துரிதமாகச் செயற்பட்ட நிக்கலஸ், சல்மானின் கைகளைப் பற்றிக் கொண்டு தன் நன்றியைப் பகிர்ந்த வண்ணம் ஏணியில் தாவியது தான் தாமதம் விமானம் உயரப் பறந்து வெகுதூரம் சென்று மறைந்துவிட்டது.

 ஆச்சரியத்துடன் விமானம் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த சல்மான் தன் ஆடுகளை நோக்கி இரண்டடி கூட வைத்திருக்கமாட்டான், எங்கிருந்தோ வந்த மூன்று நான்கு துப்பாக்கி ரவைகள் அவனது இதயத்தைக் கடந்து புழுதி நிலத்தில் சிதறிக் கிடந்தன.

 சல்மான் சரிந்து கீழே விழுந்தான்.

 அன்றிரவு முழுவதும் மேற்குலகத் தொலைக்காட்சிகள் 'முற்றுகையின் போது பயங்கரவாதக் கூலிப்படையினரால் கைது செய்யப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த கொமாண்டோ நிக்கலஸ் றைட் என்னும் சிறப்புப் படை வீரர் அரச படையின் அதிரடி செயற்பாட்டால் மீட்கப்பட்டு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்' என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டது.

 அதேவேளை, அன்றிரவு முழுவதும் உள்நாட்டுத் தொலைக்காட்சிகள் 'மேற்குலக நாடுகளின் உளவாளியாகச் செயற்பட்ட சல்மான் என்ற தேசத்துரோகி கையும் மெய்யுமாகப் பிடிபட்டபோது தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டான்' என்ற செய்தி ஒளிபரப்பப்பட்டது.

 - எஸ். ஏ. கப்பார் (இலங்கை)

 (இச் சிறுகதை தமிழ்நெஞ்சம் மே 2026 மாத இதழில் பிரசுரமானது. பிரதம ஆசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் மொகமட் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.)

No comments: