சிறுகதை
வற் வரியும் வெள்ளத்தம்பி நானாவும்
வெள்ளத்தம்பி நானா பிறக்கும் போது நல்ல வெள்ளை நிறமாக இருந்திருக்கவேண்டும். அதனால்தான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வெள்ளத்தம்பி எனப் பெயர் வைத்திருக்கவேண்டும்.
வெள்ளத்தம்பி நானா என்றால் ஊரில் தெரியாதவர்கள் யாருமில்லை. நல்ல மாநிறம். நல்ல உடற்கட்டு. கடுமையான, கண்ணியமான உழைப்பாளி. வயது ஐம்பத்தைந்து அல்லது அறுபது இருக்கலாம். தாய்க்குத் தலைமகன். மூன்று இளைய சகோதரர்கள். மூவரும் ஓரளவு படித்து அரச தொழில் புரிபவர்கள். மூத்த அண்ணன் மீது அதீத மரியாதையும் இரக்கமும் உள்ளவர்கள். தங்களால் முடிந்த உதவிகளைத் தேவைப்படும் போதெல்லாம் செய்யத் தயங்காத நல்ல உள்ளம் படைத்தவர்கள். திருமணம் முடித்து, பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழ்பவர்கள். வெள்ளத்தம்பி நானாதான் கஷ;டப்பட்டு கூலி வேலைகள் செய்து தனது சகோதரர்களைப் படிப்பித்து ஆளாக்கியது என ஊரில் பேசிக்கொள்வார்கள். ஏனோ வெள்ளத்தம்பி நானா படிக்கவில்லை. ஏனென்பது யாருக்கும் தெரியாது. ஒரு வேளை தனது இளைய சகோதரர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக தனது படிப்பைக்கூட தியாகம் செய்திருக்கலாம்.
மனைவி வீட்டில் தையல் வேலைகள் செய்து ஓரளவு வருமானத்தைத் தேடிக்கொள்வதால் குடும்பப் பிரச்சினைகள் மிகக் குறைவு. ஓர் ஆண்மகன் உண்டு. அவன் தற்போது பல்கலைக்கழகப் படிப்பை முடித்து அரச தொழில் புரிபவன். இன்னும் திருமணமாகவில்லை. வளர்ந்துவரும் சிறந்ததோர் எழுத்தாளன். நல்ல படைப்பாளி. மனிதாபிமானமுள்ளவன்.
மகன் அரச தொழில் பெற்றுக்கொண்டதன் பின், கூலி வேலை செய்யாது வீட்டில் ஓய்வாக இருக்குமாறு பல தடவைகள் அப்பாவிடம் வேண்டிக்கொண்டபோதும், வெள்ளத்தம்பி நானா கேட்டுக்கொள்ளவில்லை. தன் உயிர் தன்னைவிட்டுப் பிரியும்வரை தனது சொந்தக் காலில் நிற்கவேண்டுமென்பது அவரது கொள்கை. அவரால் குடும்பத்தினருக்கோ அல்லது உறவினர்களுக்கோ இதுவரை எவ்வித தொல்லைகளும் ஏற்பட்டதில்லை. அதுபோல் குடும்பத்தினராலோ அல்லது உறவினர்களாலோ அவருக்கும் இதுவரை எவ்வித தொல்லைகளும் ஏற்பட்டதில்லை. மனைவி மக்களுடன் எவ்வாறு அன்பாகப் பழகுவாரோ அதேபோல்தான் ஏனையோருடனும் நடந்துகொள்வார். வீட்டில்கூட அதிகம் பேசமாட்டார்.
வெள்ளத்தம்பி நானா கூலித்தொழில் செய்தாலும் அதில் ஒரு கண்ணியமும் மரியாதையும் வைத்திருந்தார். மிக நேர்மையானவர். துப்பரவு செய்தல், பாரமான பொருட்களை ஏற்றி இறக்குதல் போன்ற வேலைகள் எல்லாம் செய்யமாட்டார். அவர் விரும்பும் வேலைகள் கிடைத்தால் மட்டும் செய்வார். இல்லையேல் சும்மா இருந்துவிடுவார். கூலிகூட அவர் கேட்டும் தொகையைக் கொடுத்துவிட வேண்டும். ஆனால் மனசாட்சிப்படி நியாயமான கூலிதான் கேட்பார். அவர் செய்யும் வேலைகளின் நேர்த்தியைப் பார்த்தால் நாமே விரும்பி நூறு இருநூறு அதிகமாகக் கொடுக்கத் தோன்றும்.
வெள்ளத்தம்பி நானாவிடம் சில விநோதமான பழக்கவழக்கங்களுமுண்டு. மரக்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்குப் பொதுச் சந்தைக்கு வந்தால் பொருட்களின் விலைகளைக் கேட்கமாட்டார். மற்றவர்கள் விலைகேட்டு பேரம்பேசி வாங்குவதை அவதானித்துக் கொண்டு நிற்பார். அவருக்கு அந்த விலைகள் கட்டுப்படியாகுமென்றால் தனக்கும் தருமாறு கேட்டு வாங்கிக்கொள்வார். இல்லையேல் மெதுவாக நகர்ந்து அடுத்த கடைக்குச் சென்றுவிடுவார். இது கடைக்காரர்களுக்கும் நன்கு தெரியும் என்பதால் அவர்களும் ஒன்றும் கூறுவதில்லை.
அதுபோல், அவரது நாளாந்த நடைமுறைகளிலொன்று, தினமும் அதிகாலை பள்ளிவாயல் சென்று இறைவனைத் தியானித்துவிட்டு முன்னால் இருக்கும் தேநீர்க் கடைக்கு தேநீர் அருந்தச் செல்வார். நானும் சில வேளைகளில் தொழுது முடிந்தபின் அக்கடைக்குச் செல்வதுண்டு.
அந்தக் கடையைப் பொறுத்தவரை முதலாளிதான் வாடிக்கையாளர்களுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுப்பது வழக்கம். வெள்ளத்தம்பி நானா தினமும் பால் கலந்த தேநீர்தான் அருந்துவதால் அவரிடம் கேட்காமலே முதலாளி தேநீர் தயாரித்துக்கொண்டுவந்து நானா முன் வைத்துவிடுவார்.
வழக்கம்போல் வெள்ளத்தம்பி நானா இரண்டு தேங்காய் ரொட்டிகளைக் கையிலெடுத்து, மேசைமீது கை துடைக்க வைத்திருக்கும் வெண்ணிறத் தாள் துண்டொன்றை எடுத்து அதில் ரொட்டிகளை வைத்து உண்ண ஆரம்பித்தார். உண்ணும்போது ஒரு வார்த்தைகூடப் பேசமாட்டார். குனிந்த தலை நிமிராமல் தன் வேலை முடிந்ததும் மெதுவாக எழுந்து காசாளர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றுவிடுவார்.
தனது பக்கட்டிலிருந்து பணத்தை எடுத்து காசாளரிடம் நீட்டினார். இரண்டு நாணயத்தாள்கள். ஒன்று நூறு ரூபா. மற்றையது ஐம்பது ரூபா.
'நானா, பால் தேநீர் இப்ப நூத்தி முப்பது ரூபாய். இருபது ரூபாய் அதிகம். நேற்று வற் வரி பதினெட்டு வீதம் அதிகரிச்சிட்டாங்க.'
காசாளர் கூறியதை வெள்ளத்தம்பி நானாவினால் புரிந்துகொள்ள முடியவில்லை. வற் வரி என்றால் என்னவென்று அவருக்குத் தெரியவும் நியாயமில்லை. ஆனால், அரசாங்கத்தினால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் வரிகளைத் தங்களுக்குச் சாதகமாக்கி, பணம் சம்பாதிக்க ஏழைத் தொழிலாளர்கள் பகடைக்காயாக்கப்படுவது காலாகாலமாக நடந்துவரும் கொடுமை என்பதும் வெள்ளத்தம்பி நானாவுக்குப் புரியாது.
காசாளரை நிமிர்ந்துபார்த்த வெள்ளத்தம்பி நானா, 'நாசமாப் போச்சு! தேநீருக்கு இண்டைக்கும் இருபது ரூபா கூட்டிட்டானுகள். நல்லா உருப்படும் இந்த நாடு.' என முணுமுணுத்தவாறு வீதியில் இறங்கி விறுவிறுவென நடந்து சென்றார்.
- எஸ். ஏ. கப்பார்
- 17.03.2024.