Wednesday, January 3, 2024

அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும். (சிறுகதை - 11)

 அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும்.

துவிச்சக்கர வண்டியை வீட்டு முன்பக்க மாமரமொன்றில் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த கலையன்பன் வேண்டா வெறுப்போடு தன் கையிலிருந்த ஆவணத்தை மேசை மீது போட்டுவிட்டு நாற்காலி ஒன்றின் மீது வந்தமர்ந்தான்.

கடந்த மூன்று நாட்களாக அலைந்து திரிகிறான். இன்றும் கூட கவிவேந்தல் கனகசபை ஐயாவைச் சந்திக்க முடியவில்லை. இன்று எப்படியும் மதியம் வீட்டில் இருப்பதாகவும் வந்து சந்திக்குமாறும் கேட்டிருந்தார்.  அம்மாவின் வேண்டுதலையும் தட்டிக்கழித்துவிட்டு மதியம் வேகா வெய்யிலில் கனகசபை ஐயாவைச் சந்திக்க அவரது வீடு நோக்கிச் சென்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து, ஐயாவைக் காணமுடியாமல் திரும்பிவந்துவிட்டான்.

கவிவேந்தல் கனகசபை ஐயாவைத் தெரியாதவர்கள் இலக்கிய உலகில் எவருமில்லை. ஐயா தலைமை வகிக்காத அல்லது கலந்துகொள்ளாத எந்தவொரு நிகழ்வும் ஊரில் நடந்ததாக ஞாபகம் இல்லை. குறிப்பாக இலக்கிய நிகழ்வுகளென்றால் ஐயாதான் தலைமை. ஓய்வு நிலை தலைமை ஆசிரியரான கனகசபை ஐயா உண்மையில் சிறந்த மரபுக் கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். அவரது விமர்சனத்திற்கு உட்படாத இலக்கிய வடிவங்கள் எதுவுமில்லை எனலாம்.

கலையன்பன் வளர்ந்து வரும் இளங் கவிஞன். தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரிபவன். கடந்த மூன்று நான்கு வருடங்களாகக் கவிதைகள் எழுதி வருபவன். தேசிய நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் அவனது கவிதைகள் இடம்பிடித்துள்ளதோடு பாராட்டுகளையும் பெற்றுள்ளன. கவியரங்குகளில் பங்குபற்றி பரிசில்களும் பெற்றவன். 

அவன் எழுதிய கவிதைகளுள் இருபத்தைந்து முப்பது கவிதைகளைத் தெரிவுசெய்து கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட வேண்டுமென்ற ஆவல் கடந்த ஓரிரு மாதங்களாகப் பற்றிக்கொள்ளவே, தனது கவிதைகளைத் தெரிவுசெய்து தட்டச்சுச் செய்து ஒரு நகல் பிரதியைப் பெற்றுக்கொண்டான். அப்பிரதியைக் கவிவேந்தல் கனகசபை ஐயாவிடம் கொடுத்து மதிப்புரை ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் மூன்று நாட்களாக அலைந்துதிரிகிறான்.

'மகன், நேரம் போயிட்டு இல்ல. கை காலை அலம்பிக் கொண்டு வந்து சாப்பிடுங்க.' 

அம்மா அழைத்த போது எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு மதிய உணவை உண்ண ஆரம்பித்தான்.

ஓரிரு கவளங்கள்தான் உட்சென்றன. அதற்குள் அவனது செல்பேசி அலறியது. அம்மா எடுத்து அவனது கையில் கொடுத்தார்.

ஐயா கனகசபை - முணுமுணுத்தவாறு எழுந்து கைகளைக் கழுவிக்கொண்டு புறப்படத் தயாரானான்.

'அம்மா சாப்பாட்டை மூடி வையுங்க. இதோ வந்துவிடுகிறேன். ஐயா வந்திட்டாராம்.'

அம்மாவிடம் கூறிவிட்டு வெளிக்கிட்ட கலையன்பனுக்கு அம்மா கூறிய எதுவுமே காதுக்கேறவில்லை.

கனகசபை ஐயாவின் வீட்டு வெளிச்சுவரில் துவிச்சக்கர வண்டியைச் சாத்திவிட்டு உள்ளே நுழைந்த கலையன்பனை வந்து அமருமாறு அழைத்தார் கலைவேந்தல் கனகசபை ஐயா.

தான் வந்த விடயத்தைச் சுருக்கமாகக் கூறினான்.

'தம்பி, எங்க பார்த்தாலும் புத்தக வெளியீட்டு விழாவாத்தான் இருக்கு. ஒரு நாளைக்கு பத்துப் பதினைந்து கவிதை நூல் வெளிவருது. ஒரு நூலாவது உருப்படியா இல்ல, ஒன்று இரண்டைத் தவிர. என்ன செய்வதெண்டு தெரியாம நாங்களும் கலந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கு. நீயும் என்ட சொந்தக்காரப் பொடியன். ஒண்ட கவிதைகள் ஒரு சிலதைப் பார்த்திருக்கேன். பரவாயில்லை. எப்படியும் இரண்டொரு வாரத்துக்குள்ள நல்லபடியா எழுதித்தாறன். எழுத்துப் பிழையில்லாம அச்சிட்டு எடு. விழா நடத்துறதுக்கு இரண்டு கிழமைக்கு முன் என்னை வந்து சந்தித்து விழா நடத்துற இடத்தையும் நாளையும் கலந்தாலோசி. எனக்குப் பல சோலி. தலைமை தாங்குறதெண்டா நானும் ஆயத்தப்படுத்தவேண்டும். என்ன? நான் சொல்லுறது சரிதானே?' 

மளமளவெனக் கூறி முடித்தார், கனகசபை ஐயா.

தனது கவிதைத் தொகுதிக்கு மதிப்புரை கேட்டுவந்த கலையன்பன், விழாத் தலைவராக அவரையே போடச் சொல்லி நாசூக்காகக் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தான். செய்வதறியாது சரி, ஐயா எனக் கூறிவிட்டு விடைபெற்றான்.

இரு மாதங்கள் கடந்துவிட்டன. தங்குதடையின்றி நூல் வெளியீட்டு வேலைகள் எல்லாம் நிறைவுற்று,  விழாக்கோலம் போடும் நாளும் வந்தது.

அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் உறவினர்களும் நண்பர்களும் தவிர எதிர்பார்த்தவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே வந்திருந்தனர். அத்துடன் முக்கியஸ்தர்களான தலைவர் கலைவேந்தல் கனகசபை ஐயாவும் முதன்மை அதிதி ராசமாணிக்கம் அதிபர் ஐயாவும் இன்னும் சமுகமளிக்கவில்லை. அமைதியாக இருந்த கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. கதாநாயகன் கலையன்பனுக்குப் பதைபதைக்கத் தொடங்கியது. 

கூட்டத்தில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் 'நீங்க கூட்டத்தை ஆரம்பியுங்கோ. ஐயா கொஞ்சம் லேட்டாத்தான் வருவார்' என்றதும் அவரது வேண்டுகோள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வேறொருவரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

வரவேற்புரை, தலைமையுரை, மதிப்புரை, ஆய்வுரை, முதற்பிரதி - சிறப்புப் பிரதி வழங்கல், சிற்றுண்டி உபசாரம்,  இன்னிசை மழை, பொன்னாடை போர்த்தல், புகைப்படம் எடுத்தல் எல்லாம் சிறப்பாக நடந்தேறின. இறுதியாக நன்றியுரை மற்றும்  ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது. 

 ஒவ்வொருவராக கலையன்பனை அணுகி வாழ்த்துக் கூறி விடைபெறும்போது, 'தம்பி, கனகசபை ஐயாவும் ராசமாணிக்கம் அதிபரும் ஒருவர் போற இடத்துக்கு மற்றவர் போறதில்லையென்று தெரியாது போல. ராசமாணிக்கம் அதிபருக்குப் பதிலா வேறொருவரை போட்டிருக்கலாமே'   எனச் சத்தமாகக் கூறிவிட்டு நகர்ந்தார்.

வீடு வந்துசேர்ந்த கலையன்பனுக்கு நூல் வெளியீட்டுக்காக வங்கியில் அடகு வைத்த அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும்தான் அடிக்கடி மனதிற் தோன்றி மறைந்தன.

எஸ். ஏ. கப்பார்

04-12-2023.

(10-12-2023 ஞாயிறு 'தமிழன்' வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)







No comments: