Monday, February 5, 2024

புதிய தலைமுறை (சிறுகதை 12)

 புதிய தலைமுறை

தெருவிளக்கின் ஒளியிலிருந்து தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் பொருட்டு, எனது வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி, ஒரு முச்சந்தியின் இடப்பக்க வீதியின் ஓரத்தில் மூன்று மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர். தினமும் தனியார் வகுப்பிற்கு வரும் மாணவிகள். வகுப்பு முடிந்தும் இன்னும் வீடு செல்லவில்லை. வானம் தன்னைப் போர்த்திக்கொள்ள இருளைச் சிறிது சிறிதாக அபகரிக்கும் மாலைப்பொழுது. இவர்களது பெற்றோர்களோ அல்லது அண்ணன் தம்பிமார்களோ இவர்கள் மீது அக்கறையில்லாதவர்கள். இல்லையென்றால் தங்கள் குமர்ப்பிள்ளைகளை இருள் படியும் மாலை வேளைகளில் தனியே விட்டுவைப்பார்களா? எனக்கு வேதனையாக இருந்தது.

சிறிது நேரத்தில், பெரும் உறுமல் சத்தத்துடன் இரு மோட்டார் சைக்கிள்கள் ஆறு இளைஞர்களைச் சுமந்துகொண்டு வேகமாக வந்து சடுதியான நிறுத்தலுடன் இலக்கை அடைந்தன. பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் மூன்றாவதாக அமர்ந்திருந்த இளைஞன் நடுவில் நின்றிருந்த மாணவி மீது ஒருவித பார்வைக் கணையைத் தொடுத்தவாறு அவளது கையில் ஏதோவொன்றைத் திணித்தான். அவளது நண்பிகள் இருவரும் மறுக்கம் திரும்பி நின்றார்கள். மீண்டும் அதே உறுமல் சத்தத்துடன் மோட்டார் சைக்கிள்கள் பறந்து சென்றன. 

இன்றைய தலைமுறை மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கும் இப்படியான நிகழ்வுகளை கண்களால் பார்த்துக்கொண்டிருப்பது கூட பாவம் போல் தோன்றியது. ஒன்றுமே செய்யமுடியாத நிலை. தட்டிக்கேட்டால் முதியவர்கள் என்றுகூடப் பார்க்காமல் எதிர்த்துப் பேசுவார்கள். இருந்தும் மனம் கேட்கவில்லை. மாணவிகளை அணுகி விசாரித்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே அவர்களை நோக்கி நடக்கலானேன். நான் ஓர் அடி எடுத்து வைத்ததும் அவர்கள் மூன்றடி எட்டிவைத்து வேகமாக நடந்து மறைந்து விட்டார்கள்.

இரண்டு நாட்களின் பின்னரும் இதே போன்றதொரு காட்சி. அதே இடம். அதே மாணவிகள். அதே மோட்டார் சைக்கிள்கள். முதலாவது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்னைக் கண்டதும் 'அங்கிள் வாரார்டா, கவனம்' எனக் கூறிக்கொண்டு வேகமாக என்னைக் கடந்துவிட்டனர். மாணவிகள் நின்றிருந்த சிறிய குறுக்கு வீதியில் முச்சக்கர வண்டியொன்று வந்து கொண்டிருந்ததால் அவர்கள் பின்னோக்கி நகர்ந்துசெல்ல முடியவில்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட நான், அவர்களை நோக்கிச் சென்று,

'பாடம் முடிந்தால் வீட்டுக்குப் போவது தானே. என்ன ரோட்டுகளில் நின்றுகொண்டு ஆண் பிள்ளைகளுடன் அப்படி என்ன கதை. காலங் கெட்டுப் போய்க் கிடக்கிறது. உம்மா வாப்பா நீங்க படிக்கப்போன என்று நினைச்சிருப்பாங்க. நீங்க என்னடாவெண்டா ரோட்டில நின்றுகொண்டு அரட்டை அடிக்கயள்' 

- ஆத்திரத்தில் சிறிது கோபமாக அதட்டினேன்.

'அங்கிள், அத நாங்க பாத்துக்குவோம். நீங்க ஒங்கட வேலையைப் பாருங்க.'

- நடுவில் நின்றவள் முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டு வெடுக்கென்று திரும்பி நடந்தாள். மற்றைய இருவரும் அவளைப் பின்தொடர்ந்து வேகத்தை அதிகப்படுத்தினர். நான் வெட்கித்துப்போனேன். ஒரு தந்தைக்குச் சமனான எனக்கு முகத்தில் அடித்ததுபோல் மரியாதையில்லாமல் கூறிவிட்டார்களே என்ற ஆதங்கம் மேலோங்கியது.

வீட்டுக்கு வந்த நான் மனைவியிடம் நடந்தவற்றைக்கூறி வருந்தினேன்.

'சும்மா தேவையில்லாத வேலைகளைப் பார்க்காம இருங்க. அவளுகள் எக்கேடு கெட்டுப்போனால்தான் நமக்கென்ன? நாசமாப் போகட்டும்.'

- மனைவி கூறியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு ஒவ்வொருவரும் ஒதுங்கி ஒதுங்கிச் சென்றால் இந்த இளம் சமுதாயத்தின் நிலை என்னவாகும்? கேட்கப் பார்க்க ஆளில்லாத சமூகமாய்ப் போய்விடும் அல்லவா? இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே எனக்குப் பயமாயிருந்தது. 

அடுத்த நாள் பிற்பகல் வேளை, மாணவிகள் கல்வி கற்கும் தனியார் நிறுவன ஆசிரியரை அணுகி நடந்தவற்றைக் கூறினேன். அவரும் கவலைப்பட்டார். 

'நாங்கள் பாடம் முடிந்ததும் உடனே வீட்டுக்குப் போய்விடவேண்டுமென்றும் வீதிகளில் நின்று ஆண் பிள்ளைகளுடன் கதைக்கக்கூடாது என்றும் அவ்வாறு ஏதாவது முறைப்பாடு வந்தால் வகுப்புகளுக்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறித்தான் பாடங்களை நடாத்துகிறோம். எங்கட கதைகளையும் கேட்கக்கூடிய நிலையில் இந்தப் பிள்ளைகள் இல்லை.' என எடுத்துரைத்தார். சிறிது நேரம் உரையாடிவிட்டு 'நம்மால் முடிந்ததைச் செய்வோம்' என மனதிற்குள் நினைத்தவாறு வீட்டை வந்தடைந்தேன். 

இன்று மாலை குறிப்பிட்ட மாணவிகளை அந்த முச்சந்தியில் காண முடியவில்லை. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப்போல் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்தால் இளைஞர்களிடையே பரவிவரும் இது போன்ற மோசமான செயற்பாடுகளை  ஓரளவாவது தடுத்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. முயற்சி வீண்போகவில்லை என்ற ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டது. அதனால் எப்படியும் இந்த மாணவிகளினதும் மோட்டார் சைக்கிள் பேர்வழிகளினதும் பெற்றோர்களையும் சந்தித்து இச் சம்பவங்கள் பற்றித் தெரியப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. 

அதே எண்ணத்தோடு இருந்த எனக்கு உறங்கச் சென்றதுகூட ஞாபகமில்லை.

'படித்துப் படித்துச் சொன்னேன். இந்தத் தறுதலைகளோட விஷயங்களில் தலையிட வேண்டாமென்று. கேட்டாத்தானே. பாருங்க. நல்லாப் பாருங்க. வீட்டு ஜன்னல் கண்ணாடி எல்லாத்தையும் நொறுக்கிட்டுப் போயிட்டானுகள்.'

நித்திரையில் இருந்த என்னை அவசர அவசரமாக அரட்டி, தலையில் அடித்துக் கொண்டு அலறினாள், என் மனைவி.

நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.

(07-01-2024 ஞாயிறு 'தமிழன்' வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)





No comments: