Monday, February 5, 2024

பயணங்கள் (சிறுகதை 13)

பயணங்கள்.

செல்பேசி அலறியபோது விழித்தெழுந்த நான் ஏற்கனவே இரண்டு அழைப்புகள் வந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். எனது இளைய தம்பி விமான நிலையம் வந்துவிட்டதை அறிந்து அழைப்பை ஏற்படுத்தி, இதோ, பத்து நிமிடத்தில் வந்துவிடுவோம் எனக் கூறி, தொடர்பைத் துண்டித்துவிட்டு விமான நிலையம் செல்ல ஆயத்தமானேன்.

கடந்த முப்பது வருடங்களாக மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து விடுமுறைக்காக அல்லது தனது தொழிலை முடித்துக்கொண்டு ஊருக்கு வருபவர்களையும் அவர்களது உடைமைகளையும் ஏற்றி இறக்குவதுதான் எனது தொழில். இருபத்தைந்து வயதில் ஆரம்பித்த தொழில். இப்போது எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. இத்தனை வருடங்களாகவும் இல்லாத ஒரு பரபரப்பு இன்று. காரணம், அழைத்துவரப் போவது எனது சொந்தத் தம்பியை என்பதால். பத்து வருடங்களின் பின் ஊர் திரும்புகிறான்.

நேற்று அதிகாலை ஊரிலிருந்து வெளிக்கிட்டு அவனது மனைவி மக்கள் குடும்ப சகிதம் கொழும்பு வந்துசேர்ந்தோம்.  இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தம்பி விமான நிலையம் வந்து சேர்ந்ததும் எனக்கு அறியத்தருவதாகக் கூறியதால் சிறிதுநேரம் அயர்ந்து தூங்கிவிட்டேன்.

அவசர அவசரமாக வெளிக்கிட்டு விமான நிலையம் சேர்ந்தபோது மணி இரண்டரை ஆகிவிட்டது. தம்பி வெளியில் வந்து தனது பயணப்பொதிகளுடன் காத்திருந்தான். ஓடிச்சென்று கட்டித் தழுவிக் கொண்டேன். குடும்பத்தினரும் நலம் விசாரித்து உரையாடினர்.

''தம்பி, இப்ப அதிகாலை இரண்டரை மணிதான் ஆகுது. ஓரளவு வெளிச்சம் வரட்டும் ஊருக்குப் பயணமாவோம். பெண்களும் சிறுவர்களும் இருக்கிறார்கள்'' என்றேன்.

''இல்ல நானா, இப்பவே வெளிக்கிட்டுப் போவோம். எப்படியும் நேரத்தோடு வீட்டுக்குப் போய்விடலாம்'' என்று தம்பி கூறியவுடன் ஏனையோரும் ஆமோதிக்கவே பயணப்பொதிகளை வாகனத்தின் பின்பக்கம் ஏற்றிவிட்டு, ஊரை நோக்கிய பயணத்தை அரை மனதுடன் ஆரம்பித்தேன். 

எட்டு அல்லது பத்து கிலோமீட்டர் தாண்டி வாகனம் சென்று கொண்டிருக்கையில், எங்களது வாகனத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று மோட்டார் சைக்கிள்கள் சிக்னல்களைப் போட்டுக்கொண்டு வேகமாக வருவதையும் முன்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்த ஒருவன் அவனது இரண்டு கைகளையும் உயர்த்தி ஏதோ சைகை காட்டுவதையும் அறிந்தேன். அவர்கள் வாகனத்தை நிறுத்தச் சொல்லித்தான் சைகை காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்தும் குறிப்பிட்ட இடம் பாதுகாப்பு இல்லாத இடமாகையால் நிறுத்தாது பயணத்தைத் தொடர்ந்தேன். இதனை அவதானித்த எனது தம்பியும் குடும்பத்தினரும் வாகனத்தின் வேகத்தைக் குறைக்குமாறு கூறவே வேறு வழியின்றி வேகத்தை நன்றாகக் குறைத்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை நெருங்கி வாகனத்தின் பின் 

சில்லுகளில் ஒன்று காற்றுப் போகிறது. விபத்தினைத் தடுக்க வாகனத்தை நிறுத்திப் பாருங்கள் என்று கூறிவிட்டு வேகமாக முன்னோக்கிச் சென்று மறைந்துவிட்டார்கள். 

எனது முப்பது வருடகால இத்தொழிலில் இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் வாகனத்தை நிறுத்தாமல் வேகத்தைக் குறைத்து மிக அவதானமாக ஆட்கள் நடமாடும் ஓரிடம் வரும்வரை பயணத்தைத் தொடரத்தான் நினைத்தேன். ஆனால் உள்ளேயிருந்தவர்கள் விபத்து நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் கலவரப்பட்டு வாகனத்தை நிறுத்தி என்னவென்று பார்க்குமாறு  கட்டாயப்படுத்தியதால்தான் நிறுத்தினேன்.

நான் எதிர்பார்த்ததுபோன்றே எங்கிருந்தோ மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எனது வாகனத்தின் முன்னால் வந்து நின்றன. அவற்றிலிருந்து வேகமாக வந்த இருவர் என்னை மறுபக்க வீதி ஓரத்துக்கு  இறங்கிவருமாறு அழைத்தனர். உள்ளேயிருப்பவர்களை இறங்கவேண்டாமெனக் கட்டாயப்படுத்திவிட்டு நான் மட்டும் இறங்கிச் சென்றேன். 

''ஐயா, நாங்க உங்களை எயாபோட்டிலிருந்து பலோ பண்ணித்தான் வாரோம். வெளிநாட்டிலிருந்து சாமான்கள் எல்லாம் கொண்டு வாரது தெரியும். நாங்க எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டோம். எங்களுக்கு காசுதான் வேணும். ஒரு ஐம்பதாயிரம் கொடுத்தாப் போதும். விட்டிடுவோம்.'' என்று அதிலொருவன் கூறிவிட்டு மற்றவனைப் பார்த்து சரிதானே எனத் தலையாட்டினான். அவனும் சரியெனப் பதிலுக்குத் தலையாட்டினான். 

எனது தொழில் அனுபவத்தில் இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சமாளித்து வெற்றிபெற்றதுண்டு. அவ்வாறுதான் இவர்களுடனும் கதைத்துப்பேசி, வாதாடி இறுதியில் ரூபா இருபத்தையாயிரம் கொடுத்துவிட்டு வாகனத்தில் வந்து ஏறினேன்.

''நானா, இதனை இப்படியே விட்டுவிடக்கூடாது. நேரா பக்கத்திலே வார பொலிஸ் ஸ்டேசனுக்குப் போவோம். கொம்ளைன் ஒன்று போட்டு அவங்களைப் பிடிப்போம். இவங்களெல்லாம் கள்ளனுகள்.'' - இளம் இரத்தம் ஆவேசப்பட்டது.

தம்பி அனுபவமில்லாத சின்னப் பிள்ளை. இவனுக்கு எங்கே தெரியப்போகுது நம்மட நாட்டு நடப்புப் பற்றி. பொலிஸுக்குப் போய் அவங்களுக்குப் பந்தம் கொடுத்து, வாகனத்தையும் கொண்டு பொலிஸிலே போட்டு, கடைசியிலே வெறும் இரும்புத் துண்டுகளைத்தான் வீட்டுக்குக் கொண்டுவரணும். இந்தத் தொழிலைப் பொறுத்தமட்டில் இண்டைக்கு இருபத்தையாயிரம் ரூபா இலாபம் என மனதைத் தேற்றிக்கொண்டு ஊர் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தேன்.

- எஸ். ஏ. கப்பார்

(04-02-2024 ஞாயிறு 76வது தேசிய சுதந்திர தினத்தன்று  'தமிழன்' வார வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது.)



No comments: