Monday, July 22, 2024

பட்டறிவு (சிறுகதை 14)

 சிறுகதை.


பட்டறிவு


நீண்ட நாட்களின் பின் வீடு சந்தோசமும் குதூகலமுமாகக் காணப்பட்டது. தங்களது அம்மாவின் மரணத்தின் பின் உறவினர்களும் நண்பர்களும் வருகை தருவது வெகுவாகக் குறைந்துவிட்டதென்பது பிள்ளைகளின் ஆதங்கம். அவர்களின் மனதில் ஏற்பட்ட வெறுமை படிப்படியாக இயல்பு நிலைக்கு மாறிவரும் தருணம்.

எனது இளைய மகனின் பல்கலைக்கழகத் தோழிகள் இருவர் அவர்களது பெற்றோருடன் இன்றிரவு எங்களது வீட்டுக்கு வருகைதருவதாக அறியக் கிடைத்தபோது, பிள்ளைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதிகாலை மூன்று மணிவரை விழித்திருந்து விருந்தினரை வரவேற்க ஆயத்தமாகினர். எதிர்பார்த்ததுபோல் அவர்களும் அதிகாலை மூன்று முப்பது மணியளவில் வந்துசேர்ந்தனர். நித்திரைக் கலக்கம் எல்லோரையும் ஆட்கொள்ளவே பத்துப்பதினைந்து நிமிடங்களுக்குள் சிறிது நேரம் அளவளாவி, வந்தவர்களின் பயணக்களை தீர ஒன்றாகத் தேனீர் அருந்திவிட்டு தூங்கச் சென்றோம்.

கடந்த இரண்டு நாட்களாகப் பொழிந்துகொண்டிருக்கும் மழை இன்றும் விடியற் காலையிலிருந்தே ஓரளவு பெய்யத் தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாது, காலை உணவும் உட்கொள்ளாது, பால், தேனீர் மட்டும் அருந்திவிட்டு ஆளுக்கொரு குடையுடன் எங்களது கடற்கரையைப் பார்க்கச் சென்றோம். எனது மகன், மகள் இருவரும் அவர்களது நண்பிகளுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். அவர்கள் இப்போதுதான் இருபதைக் கடந்தவர்கள். நாட்டை ஆளப்போகும் எதிர்காலப் பிரஜைகள். ஓராயிரம் கனவுகளுடன் வாழ்பவர்கள். 

நானும் அவர்களது பெற்றோரும் அறுபதைக் கடந்தவர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி  மட்டுமே கனவு காண்பவர்கள். ஆதலால் எங்களது உரையாடல் சற்று வேறுபட்டிருந்தது. இரண்டொரு நாட்களாகப் பெய்து கொண்டிருக்கும் மழை தொடக்கம் கடந்த சுனாமி அனர்த்தம் வரை விரிவாக உரையாடத் தொடங்கினோம். 

நடப்பு, காலநிலை மாற்றம், அரசியல், மக்களிடையே என்றுமில்லாதவாறு பரவிக்கிடக்கும் நோய்கள் எல்லாம் உள்ளடங்கலாக உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. எனக்கு சிங்களம் கதைக்கத் தெரியும் என்பதால் அவர்களுடன் பிரச்சினையின்றி உரையாடிக்கொண்டிருந்தேன். கடினமான சொற்கள் குறுக்கிடும்போது ஆங்கிலச் சொற்களை உட்புகுத்திக் கொள்வது எனது வழக்கம். அவ்வேளை, அதனைப் புரிந்துகொண்டு அவர்களும் பொருத்தமான சிங்களச் சொற்களைத் தெரியப்படுத்துவார்கள். அதனைக் கவனமாக மனதில் பதிந்துகொள்வேன். 

அதேபோல் எனது இளைய மகனும் அவரது பல்கலைக்கழகத் தோழிகளுடன் நன்கு உரையாடுவது தெரிந்தது. ஆனால் எனது இளைய மகள் நண்பிகளுடன் சிங்களத்தில் கதைப்பது சிரமமாக இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. இருந்தும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் சிரித்துப் பேசி சமாளித்துக் கொண்டிருந்தாள்.

தொடர்ந்து காலையுணவு, உறவினர் வீடுகள், மதிய உணவு என அந்நாளின் அரைப்பகுதி மிக வேகமாகச் சென்றுவிட்டது. 

பின்னேரம், எனது மூத்த மகன் வேலை செய்யும் வைத்தியசாலைக்குச் சென்று அவரையும் சந்தித்து விட்டு வருவோமென எண்ணி பயணமானோம். அவரை அவரது விடுதியில் சந்தித்து, வந்தவர்களை அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியாக உரையாடினோம். அவரது மனைவி அதாவது, எனது மருமகளும் எங்களுடன் வந்திருந்தார். 

மூத்த மகன், தான் கடமைபுரியும் வைத்தியசாலையின் தற்போதைய நிலைவரங்கள் பற்றி சிங்களத்தில் சரளமாக விருந்தினர்களுடன் உரையாடியது எனக்குக்கூட ஆச்சரியமாக இருந்தது. வந்தவர்களுக்குப் பெரும் சந்தோஷமாகவும் வியப்பாகவும் இருந்தது. தங்களது தாய்மொழியை ஏனைய மொழிகளைப் பேசும் மக்கள் சரளமாகப் பேசுவது அவர்களை எவ்வளவு தூரம் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்பதையும் அதனை அவர்கள் வரவேற்று ஊக்கப்படுத்துவதையும் அனுபவ ரீதியாக உணரும்போது நாம் அனைவரும் எமது நாட்டின் சகோதர மொழியைக் கற்றறிந்து பேச வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுவது இயற்கையே.

அதேவேளை, எனது மூத்த மகனின் மனைவியும் எனது இளைய மகளும் ஒருவர் முகத்தை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொள்வதை நான் அவதானிக்கத் தவறவில்லை. அவர்களுக்கு சிங்களம் நன்கு பேச வராது என்பதே அதற்குக் காரணம்.

விருந்தினர்கள் கிண்ணியாவில் வசிக்கும் இன்னொரு மாணவியின் வீடு செல்ல ஏற்பாடாகி இருந்ததால், நாங்கள் வீடு செல்லும் வழியில் கல்முனை பஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்று பஸ்ஸில் ஏற்றிவிட்டு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தபோது இரவு பத்தரை மணியாகிவிட்டது.

அடுத்த நாள் காலை எனது இளைய மகள் என்னிடம் வந்து, 'வாப்பா, இன்று தொடக்கம் ஒன்லைனில் சிங்களம் பேச்சுப் பயிற்சியுடன் கற்பதற்கு விண்ணப்பிக்கப் போறேன்' எனக் கூறி எனது அனுமதி வேண்டிநின்றாள். எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபோதிலும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. நேற்றைய சம்பவம் அவளை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஒரு மொழி அறிந்தவன் ஒரு மனிதன். பல மொழிகள் அறிந்தவன் பல மனிதர்களுக்குச் சமம் எனக் கூறியதோடு அவளது மதினியையும் சேர்த்துக்கொண்டு பாடங்களைத் தொடங்குமாறு ஆலோசனை வழங்கினேன். 

நீண்ட நாட்களாக எனது மனதை உறுத்திக் கொண்டிருந்த பெருங்கவலையொன்று, இன்று படிப்படியாகக் கரையத்தொடங்கியது.


- எஸ். ஏ. கப்பார்

26-02-2024.


No comments: